ஜான் சார்லஸ் பீல்ட்ஸ் (John Charles Fields-May 14, 1863 - August 9, 1932)

by Mohana Somasundram on Monday, May 14, 2012 at 12:15pm
நண்பர்களே  , கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜம் பிறந்து 125 ஆண்டுகள் ஆகின்றன. எனவே இந்த  ஆண்டு  கணித ஆண்டாக இந்திய அரசால் அறிவிக்கப் பட்டிருக்கிறது. அடுத்த 2013 ம் ஆண்டு உலக கணித ஆண்டாக அறிவிக்கப்பட உள்ளது. எனவே, நமக்கு கணிதம் பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும்,கணிதத்துடன் வாழ்ந்து கொண்டு, உறவாடிக்கொண்டு, விளையாடிக்கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் வாங்கும் சம்பளம், கடைகளில் வாங்கும் பொருளுக்கான கொடுக்கல் வாங்கல், ஷெர் மார்க்கெட் எல்லாம் கணிதம்தான் நண்பா. கணிதம் தவிர்த்து நாம் வாழவே முடியாது. உலகில் உள்ள கணித மேதைகள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வேமே..
ஜான் சார்லஸ் பீல்ட்ஸ் கனடா நாட்டுக்காரர்; ஆனால் இவர் ஸ்காட்டிஷ்- ஐரிஷ் கலப்பு உருவாக்கம். ஒரு கணிதவிற்பன்னர். அதனால் கணக்கு கொண்டு வந்து விற்பார் என்று நினைத்துக் கொள்ள வேண்டாம்.. இவரை சுருக்கமாக ஜே.சி. பீல்ட்ஸ் என்றே அனைவரும் அழைக்கின்றனர். இந்த  மேதை. கனடாவின் ஆண்டேரியோவில், ஹாமில்டன்(Hamilton, Ontario, Canada ) நகரில்  1863  ல்  மே மாதம்  14 ம் நாள்  (May 14, 1863 - August 9, 1932) .  பிறந்தார்.  இவரது அப்பா பெயரும் ஜான் சார்லஸ் பீல்ட்ஸ் தான். தந்தை அந்த ஊரில் ஒரு தோல் பதப்படுத்தி பொருட்கள் செய்யும் சின்ன கடை ஒன்று வைத்திருந்தார். பீல்ட்சின் அன்னைஹாரியட் பௌஸ் பீல்ட்ஸ்(Harriet Bowes Fields), அவரது திருமணத்துக்கு முன்பு  ஒரு பள்ளி ஆசிரியர். பீல்ட்ஸ் அவரது துவக்க பல்கலைக் கழக கல்வி வரை ஹாமில்டனிலேயே படித்தார். பீல்ட்சின் முன்னேற்றத்திற்கு அவரது பள்ளியும், போதித்த ஆசிரியர்களுமே காரணம். பீல்ட்ஸ் கல்லூரி & பல்கலையில்  தங்கப் பதக்கம் பெற்றவர். 1887 ல் ஹாப்கின்ஸ் பல்கலையில் படித்த பின், பென்சில்வேனியா,மேட்வில் நகரிலுள்ள அல்லேகேனி கல்லூரியில் (Allegheny College in Meadville, Pennsylvania) கணிதப் பேராசிரியராகப் பொறுப்பேற்றார். 1902 ல் பணியை விட்டு விட்டு , ஐரோப்பிய கணித மையமான ஜெர்மனியின், பாரிஸ் & கோட்டின்ஜென்னில்(Paris and Göttingen (Germany)) படித்தார் .  டொராண்டோ  பலகலையில் ஆராய்ச்சி பேராசிரியராக 1923 ல் பொறுப்பேற்றார். 
    1914 க்கு முன்பு வரை கணிதவியலாளர்கள்,சர்வதேச அளவிலும் கூட கணிதம்தான் அனைத்து அறிவியல் விஷயங்களிலும் உயர்ந்தது, அது அரசியலுக்கு அப்பாற்பட்டது; அதனை அரசியல் எதுவும் செய்யாது, செய்யமுடியாது என்று கருத்தோட்டத்தில் இருந்தனர். அனைத்தும்     முதல் உலகப் போர் வந்ததும் தவிடு பொடியாகிவிட்டது. 1918 , நவம்பர் மாதத்துக்கு முன்,  பிரிட்டன் ,பிரான்ஸ், இத்தாலி, செர்பியா, பெல்ஜியம் மற்றும் அமெரிக்காவிலுள்ள அறிவியலாளர்கள் லண்டனில் கூடி போர் முடிந்த  பின் அறிவியல் தொடர்புகளை  வைத்துக்  கொள்ளலாம்  என்று விவாதித்தனர். 
     பீல்ட்ஸ் கணிதத்தில் புதிய தலைப்புகளில் அல்ஜீப்ராவின் பயன்பாடுகள் பற்றி நிறைய பேப்பர்கள் வெளியிட்டார். அவை உலகுக்கு பயன் உள்ளவையாக இருந்தன .அவரது ஆராய்ச்சிகளும் சமன்பாடுகளும், எளிமையாகவும், அற்புதமாகவும் இருந்தன.   
 1924 , டொராண்டோவில் நடந்த சர்வதேச கணித மாநாட்டில் பொறுப்பேற்று நடத்தினார். அதில்தான் சர்வதேச அளவில், கணிதத்தில் சிறந்தவர்களுக்கு ஒரு பதக்கம் தருவது என்றும் பேசப்பட்டது. பின் 1932 ல் ஜூரிச்சில்  நடந்த மாநாட்டில் கலந்து கொண்டு பதக்கம்  தருவதிற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்தார். அந்த பதக்கம் தருவதை உலகின் அனைத்து நாடுகளும் ஒப்புக் கொண்டன. ஆனால் அவரது உடல்நிலை 1932 , மே மாதம் மோசமாகியது.
பின்னர் பீல்ட்ஸ் 1932 , ஆகஸ்ட்டில் மறைந்த பின்,1936 லிருந்து  கணிதத்திற்கான சர்வதேச பதக்கம், அவரது பெயராலேயே, "பீல்ட்ஸ் பதக்கம்" என்று கணிதத்தில் சிறந்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. முதல் பதக்கம், ஆஸ்லோ மாநாட்டில் 1936 ல் வழங்கப்பட்டது.இந்த பதக்கம், ஒவ்வொரு நான்காண்டுகளுக்கு ஒரு முறை, கணிதத்தில் சிறந்த, 40 வயதுக்கு உட்பட்ட கணிதத்தில் சிறந்த பங்களிப்பு செய்தவர்களுக்கு வழங்கப்படுகிறது. 1936 க்குப்   பின்னர் இரண்டாம் உலகப்போர் நடக்கும்போது இது வழங்கப்படவில்லை.
பின் 1950 லிருந்து தொடர்ந்து இன்று வரை நான்காண்டுகளுக்கு ஒரு முறை என பீல்ட்ஸ் பதக்கம்" வழங்கப்படுகிறது.இது நோபல் பரிசுக்கு இணையானது.பீல்ட்ஸ் பதக்கம்"   கணித நோபல் பரிசு என்றே போற்றப்படுகிறது.