Monday, December 12, 2011

நிலவோடு புவி இன்று( டிசம்பர் 10 ) விளையாடுதே..!

நிலவோடு புவி இன்று ( 2011 ,டிசம்பர் 10 ) விளையாடுதே..!

by Mohana Somasundram on Friday, December 9, 2011 at 1:08pm

இந்த ஆண்டின் கடைசி கிரகணம்.. முழு சந்திரகிரகணம்..2011 , டிசம்பர் 10

நிலவோடு புவி இன்று( டிசம்பர் 10 ) விளையாடுதே..!

நண்பர்களே... !நாம் தினமும் வானில் சூரியன்,சந்திரன்,விண்மீனகள் வருவதை அதன் நகர்வுகளைப் பார்த்து மகிழ்ந்து பதிவும் செய்கிறோம். ஆனால் இவர்களுடன் பூமியும் இணைந்து ஓடிப் பிடித்து விளையாடும் நிகழ்வு வருடத்தில் ஓரிரு நாட்கள்தான் நடக்கின்றன.அப்படி ஓர் அற்புதமான தருணத்தை..அரிய வான்காட்சியை, வான் நிகழ்வை. , 2011 , டிசம்பர் 10 ம் நாள், சனிக்கிழமை அன்று சந்திக்கப் போகிறோம். அப்போது பூமியும் நிலவும் ஓடிப்பிடித்து விளையாடும் அற்புதத்தை நாம் கண்டு, ரசித்து படம் பிடித்து மகிழலாம்., சனிக்கிழமை அன்று இந்த ஆண்டின் கடைசி விளையாட்டை நிகழ்த்தும் சந்திரகிரகணமும் நம்மைச் சந்திக்க காத்திருக்கிறது. இந்த சந்திர கிரகணம் , டிசம்பர் 10 ம் நாளான்று, சுமார் 5 மணி நேரம் இரவு வானில் அற்புதமாகத் தெரியும்.

இந்தியா,அலாஸ்கா, வட கனடா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நி்யூசிலாந்து, மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஆசிய, நாடுகளில் இந்த முழு சந்திரகிரகணத்தைக் காணமுடியும்.மத்திய ற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ளவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள் எனலாம். இவர்கள்தான் இதனை அற்புதமாக படம் எடுக்க முடியும். வட அமெரிக்க மற்றும் ஹவாய் தீவுகளில் உள்ளவர்கள் கிரகணத்தை காலையில் சந்திரன் மறையும் வரை காண்பார்கள். இந்த டிசம்பர் 10ம் நாள் நடைபெற உள்ள விந்தைமிகு வானின் விளையாட்டை,உலகின் 1,50௦ கோடி மக்கள் கண்டு களிக்க முடியும்.இதனை பொதுமக்கள் வெறும் கண்களால் எந்த வித பாதுகாப்பு கவசமும் இன்றி பார்க்கலாம் . கண்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

முழுக்கிரகண நீட்டிப்பு.நேரம்..!

இந்தியாவில் உள்ளவர்களுக்கு இந்த முழு சந்திர கிரகணம் நமது கண்களுக்கு ஓர் அருமையான வான்வெளி விருந்தாகும். இந்த விருந்தை இந்தியாவில், சுமார் 51 நிமிடங்கள் முழு கிரகணத்தை உங்களின் கண்களால் ஆசை தீர பருகலாம்.ஆனால் கிரகணம் நீடிப்பது சுமார் 5 மணி நேரமாகும்.இந்த ஆண்டின் கடைசி கிரகணமும், இந்த ஆண்டின் சந்திர கிரகண எண்ணிக்கையில் இரண்டாவது கிரகணமும் இதுவே. சென்ற ஆண்டும் இதே போலவே, சரியாக ஓர் ஆண்டுக்கு முன் ஒரு முழு சந்திர கிரகணம் 2010 ,டிசம்பர் 20ல், மிக நீண்ட இரவு நாளன்று ஏற்பட்டது.. .அடுத்த சந்திரகிரகணம் 2014,ஏப்ரல், 14-15 ல்தான் நிகழும்.வட அமெரிக்க மக்கள் இதனை முழுமையாக காண்பார்கள். ஆனாலும் கூட இந்தியாவில் அனைவரும் பார்க்க முடியாது.

கிரகணம் என்றால் என்ன?

பொதுவாக ஓர் ஆண்டில் 2 -7 கிரகணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த ஆண்டில்4பகுதி சூரியகிரகணங்களும் ,2 முழு சந்திர கிரகணங்களும் ஏறபட்டுள்ளன.கிரகணம் (Eclipse) என்பதற்கு மறைப்பு எனபது பொருளாகும்,எக்லிப்ஸ் என்பது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள்,வான் பொருள் கருப்பாவது ("the darkening of a heavenly body") என்பதே. சூரிய கிரகணம் என்பது, அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலா நாளிலும் உண்டாகிறது. கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி மூன்றுக்கும் இடையிலுள்ள கண்ணாமூச்சி விளையாட்டு ஆகும்.சூரிய கிரகணத்தின் போது சூரியன் மறைக்கப்பட்டு கொஞ்ச நேரம் காணாமல் போகிறது.. கடந்த ஆண்டில், ஏற்பட்ட 6 கிரகணங்களில் , 4 பகுதி சூரிய கிரகணம். மீதி 2 சந்திர கிரகணம். ஆனால் இதே போல் 2009 ஆண்டும், 6 கிரகணங்கள் ஏற்பட்டன. ஆனால் அவை 2011 ம் ஆண்டு கிரகணங்களின் உல்டாதான்.. அவற்றில் 4 சந்திர கிரகணம். மீதி இரண்டும் சூரிய கிரகணங்கள். இந்த ஆண்டு ஏற்பட்டது போலவே, 21 ம் நூற்றாண்டில் 6,முறை இதே போல 4:2 விகிதத்தில் ( 4 சந்திர கிரகணம்.:இரண்டு சூரிய கிரகணங்கள்) ஏற்பட உள்ளன. அவை 2011 , 2029 , 2065 , 2076 & 2094 வருடங்களில் உண்டாகும் என்று கணிக்கப் பட்டுள்ளது..இப்படிப்பட்ட நிகழ்வில் எப்போதும் ஜனவரியில் முதல் கிரகணமும், டிசம்பரில் கடைசி கிரகணமும் உண்டாகும்.

கிரகணத்தில் சிவக்கும் சந்திரன்..!

இப்போது உருவாக உள்ள சந்திர கிரகணம் மையக்கோட்டில் நிகழவில்லை. ஆனால் முழுமறைப்பு/முழுக்கிரகணத்தின் காலக்கெடு.. 51 நிமிடங்கள். . இனி இதைப் போனற நீண்ட முழு சந்திரகிரகணத்தைக் காண இன்னும் 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆம். அடுத்த முழு சந்திர கிரகணம் இந்தியா முழுமைக்கும் அனைவரும் பார்க்கும்படி நிகழும் ஆண்டு 2018.,ஜூலை 27 .. அதன் முழு மறைப்பு நேரம் 103 நிமிடங்கள். அதனால் விஞ்ஞானிகளும், ஆர்வலர்களும், வான்நோக்கர்களும் ஆவலுடன்,புவியின் தொடலால் நாணிச் சிவந்த சந்திர பிம்பம்/முகத்தைக் காண, காணொலி மற்றும் படம் பிடித்து படம் காட்ட பல்வகை ஏற்பாடுகளுடன் தயாராக உள்ளனர். இந்த முறை அவ்வளவாக் கருப்பாக இல்லாமல் சிவந்து செம்பு வண்ணத்தைப் பூசிக்கொண்டு ஜொலிக்குமாம். பார்த்து ரசியுங்கள் நிலவின் பேரழகை..! என்ன விலை அழகே.. உன்னை பட்ம் எடுத்து மகிழ்வேன் என்று பாடுங்கள்.

கிரகண நேரம்..!

இந்தியா முழுமைக்கும், சந்திரன் முழு நிலா நாளான, டிசம்பர் 10 ம் நாள், சமார் 5மணிநேரம் புவியின் நிழல் மறைவில் தன்னை மறைத்து தொட்டுப் பிடித்து விளயாடிக் கொண்டிருக்கும். இந்த தொடல்/தழுவல் விளையாட்டுத் துவங்கும் நேரம், மாலை மணி 6.15.சந்திரன் முழுமையாக பூமியின் நிழலில் தன்னை ஒளித்துள்ள நேரம் துவங்குவது இரவுமணி:7.35 . இந்த மறைப்பு விளையாட்டு 8.28 மணிவரை நீடிக்கும். புவியின் நிழல் சந்திரனை பகுதியாக மறைப்பது முடியும் நேரம். இரவு மணி. 9.48 . ஆனால் சந்திரன் பூமியின் நிழல் மறைப்பில் முழுமையாக இருட்டாக/கருப்பாகத் தெரியும் கால நேரம், நம இந்திய நேரப்படி மணி 8.27 க்குத்தான்.

சந்திர கிரகணம் துவங்கும் & முடியும் 7 நிலைகளாவன:

1. சந்திரன் பெனும்பரா ( penumbra)என்னும் அரி நிழலில் நுழையும் நேரம் மாலை: 17:03: 3

2. சந்திரன் அம்பரா (umbra) என்னும் கருநிழலில் நுழையும் நேரம்: மாலை:18:15:13

3. சந்திரனின் முழுமறைப்பு/முழுக் கிரகணம் (totality) துவங்குதல்:இரவு 19:36. 29

4. கிரகணத்தின் முழுமை நேரம் (maximum eclipse ): இரவு 20:01:50

5. முழுமறைப்பு/முழுக் கிரகணம் முடிவடையும் நேரம்: இரவு 20:27:16

6. கருநிழலிருந்து (umbra) சந்திரன் வெளியே தலைகாட்டும் நேரம்: இரவு: 21:48:09

7. அரிநிழலிருந்து ( penumbra) சந்திரன் முழுமையாக வெளிவரும் நேரம்:இரவு: 22:00:12

ஒளி மங்கும் நிலா..!

டிசம்பர் 10 ,முழு கிரகணம் நிகழும் நேரத்தில் நிலா, வானின் உச்சிக்கு வந்து கொண்டிருக்கும்.பூமியின் நிழலில் நிலா ஒளிந்துள்ளபோது நிலவின் ஒளி அவ்வளவாக இருக்காது. மேலும் முழு சந்திர கிரகண நிலா,, நாணிச் சிவந்தது போய் இருக்கும். கர்ணன் படத்தில் வரும் நாணிச் சிவந்தன மாதர்தம் கண்கள் என்ற பாடல் இங்குதான் பொருந்துமோ.?அப்பாடா ஒருவழியாக சந்திர கிரகணம் முழுமையாக பார்த்து முடித்து விட்டது போன்ற் உணர்வு ஏற்பட்டு விட்டதா? அந்த நிறைவினை நேரில் பார்த்து மகிழுங்கள் நண்பா..!

சுற்று..சுற்றல்..அனைவரும்..சுற்றல்.!

சூரியன், பூமி, சூரியனை வலம் வரும் 8 கோள்கள், அவைகளின் துணைக்கோள்கள், குள்ளக் கோள்கள், அவைகளைத் தாண்டி இருக்கும் குயூப்பியர் வளையம், அதற்கு அப்பால் உள்ள ஊர்ட் மேகம்., அவற்றிலிருந்து உரு எடுத்து சுற்றும் வால்மீன்கள் என இவ்ளோ..பேரை உள்ளடக்கியது நம் சூரிய குடும்பம். இந்த குஞ்சு குளுவான்கள் படை சூழ சூரியன் தனது தாய் வீடான பால்வழி மண்டலத்தை நொடிக்கு சுமார் 250 -270 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. ஆனால் இந்த சூரிய குடும்பம், பால் வழி மண்டலத்தில்(milky way galaxy) ஒரு சிறு மணல் துகள் அளவுதான். இந்த துகள் ஒரு முறை பால்வழி மண்டலத்தைஒரு முறை சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம். 22 1/2 கோடி ஆண்டுகள். அது மட்டுமல்ல. இந்த நிகழ்வினை ஒரு பிரபஞ்ச ஆண்டு என்று சொல்கிறோம். சாதாரணமாய் பூமி, தன் துணைக் கோளான சந்திரனையும் இழுத்துக் கொண்டே சூரியனைச் சுற்றிகொண்டிருக்கிறது. சந்திரனும் தனது கோளான பூமியை, பூமியை 29 1/2 நாட்களில் சுற்றுகிறது நம் கண்களுக்கு கண்ணாமூச்சி காட்டும் நமது சூரிய குடும்ப தாய்வீடான, பால்வழி மண்டலம், முழு சந்திர கிரகணத்தின் போது, முழு மறைப்பின் பின்னணியில் அதி அற்புதமாய் தெரியும். இம்முறை நீங்களும் பார்த்து மகிழுங்கள் இந்த் அழகிய காட்சியினை..!.

சந்திர கிரகணம் நிகழுமிடம்..!

இந்த முழு சந்திர கிரகணம் மேஷ ராசியில் நிகழ்கிறது. மேஷ் ராசி என்றதும்,சோசியத்துக்கு ஓடிவிடவேண்டாம். சந்திரன் மேஷராசி விண்மீன் படலத்தில் (Taurus constellation) காணப்படுகிறது.அதுவும், குளிர்கால முக்கோணம் எனப்படும் விண்மீன் கூட்டங்களுக்கு மத்தியில் அழகாக காட்சி அளிக்கிறது. குளிர்கால முக்கோணத்தில் முக்கியமாக, மேஷராசியின் சிவந்த செம்பூத விண்மீனான ரோகிணி, வேட்டைக்காரன் விண்மீன் படலத்தின் திருவாதிரை, போன்றவை அருமையாய் தெரியும். பொதுவாக, முழு நிலா நாளில், சந்திரன் வெண்பளிங்காய் ஒளி வீசிக்கொண்டிருப்பதால், அருகிலுள்ள விண்மீனகள், அதன் ஒளியில் ஒளிந்து கொள்ளும். இப்பொது சந்திரன் இருண்டு, ஒளி மங்கி காண்ப்படுவதால், அனைத்து விண்மீனகளையும், வேட்டைக்காரன் விண்மீன் படலத்தோடு இணைந்து காணப்படும் பால்வழி மண்டலத்தையும் காண முடியும்.

பிரபஞ்சத்தில்..அனைத்தும்..சாய்வே..!

பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்துள்ளது. சூரியனும் கூட 7 பாகை சாய்வாக சுற்றுகிறது. சந்திரன், 5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது. எனவே பூமி, சூரியன் மற்றும் சந்திரன் இவை மூன்றும் எப்போதாவதுதான் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, அவைகளில் ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. இதுவே கிரகணம் ஆகும்.. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. ஏனெனில் சூரியன்,பூமி, சந்திரன் மூன்றும் தன் அச்சில் வெவ்வேறு பாகையில் சாய்வாக சுற்றுவதால், இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் சாத்தியக் கூறு எல்லா அமாவாசை/முழுநிலா நாளிலும் ஏற்படுவது கிடையாது. எனவே, எல்லா முழு நிலா நாளிலும்/ அமாவாசை தினத்திலும் கிரகணம் ஏற்படுவதில்லை.

ஏன் சூரியன், சந்திரன் ஒரே அளவில்..!

நமது தாயான சூரியன் ரொம்ப ரொம்ப பெரிசு.சூரியனுடன் ஒப்பிடும்போது, சந்திரன் ரொம்ப பொடிசு.குட்டியூண்டு.புள்ளி.. அதன் விட்டம், 384,400 கி.மீ மட்டுமே. சூரியன் சந்திரனைவிட 4,00 மடங்கு பெரியது. அதைப் போல பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 400 மடங்கு அதிகம். இந்த அரிதான ஒற்றுமையால் தான், குட்டியூண்டு நிலவும், இம்மாம்.. பெரிய் ..ய் ..ய சூரியனும், பூமியிலிருந்து பார்க்கும்போது, ஒரே அளவில் தென்படுகின்றன. ௦௦குட்டியூண்டு ..சின்ன நிலா, நம் குடும்ப தலைவரான, மிகப் பெரிய சூரியனை மறைத்து,முழுங்கி,கபளீகரம் செய்து முழுசூரிய கிரகணம் ஏற்படச் செய்வதும் இதனாலேதான்.

கிரகண நேர நிர்ணயிப்பு..!

பூமியில் நிழல் சந்திரனைத் தொடுவதிலிருந்து, அதன் எதிர் முனையில் விடுவது வரை உள்ள நேரம் சுமார் 5 மணி நேரம் வரை நீட்டிக்கலாம். பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்தான் கிரகண நேரத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணி. ஏனெனில், சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றுகிறது. சில சமயம் அண்மையிலும், சில சமயம் சேய்மையிலும் காணப்படும். சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் (சேய்மையில்) இருந்தால், அதன் சுற்று வேகம் மெதுவாக இருக்கும்.எனவே, முழு மறைப்பு நேரத்தின் கால அளவும் இதனால் அதிகரிக்கும்.. இம்முறை நிகழ்வுள்ள கிரகணமும் அத்தன்மைத்தே..!இப்போது நிகழவுள்ள சந்திர கிரகணம்.. ௧௩௫ வது சாரோஸ் வகையைச் சேர்ந்தது.

கிரகணத்தின் வரலாறு..!

ஏதேனியர்கள் போரில் தோல்வி

records of eclipses which took place thousands of years ago. This bit of cunieform speaks the history of eclipse

பழங்காலத்தில், கிரகணம் என்பது, ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட நிகழ்வு என்று கருதினர். கிரேக்கத்தில் சூனியக்காரர்கள், நாங்கள் எங்களது அற்புத சக்தியால் வானிலுள்ள சந்திரனின் ஒளியை உறிஞ்சி விடுவோம் என சவால் விட்டனர்.முழு கிரகணத்தின் போது ஒளி ஓடிப்போயிற்று. மக்களும் அவர்கள் விட்ட புருடாவை..நம்பினர். இது கி.மு. 425 , அக்டோபர் 9 ம் நாள் நிகழ்ந்தது.அதற்கு முன்னால், கி.மு.413 , ஆகஸ்ட் 28 ம் நாள் முழு சந்திரகிரகணம் ஏற்பட்டது. இந்த கிரகணம், சைரகுயுசின் இரண்டாம் போரின்போது வந்தது. அப்போது ஏதென்ஸ்காரர்கள் (Athenians) வீடு நோக்கி செல்ல திட்டமிட்டனர். அவர்கள் துசிடிடெஸ்(Thucydides) என்ற மதகுருவிடம் என்ன செய்வது என்று கேட்டனர். அவர் இன்னும் 27 தினங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் என்றா..மதகுருவின் சொல்படி ஏதெனியர்கள் நடந்தனர்.ஆனால் சைராகுசன்ஸ்(Syracusans ) இதனை சாதகமாக எடுத்துக் கொண்டு, திட்டமிட்டு ஏதேனியர்களின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டனர்.ஏதேனியர்கள் போரில் தோல்வியுற்றனர். யூரிமேடான் மாய்ந்தார்.சந்திர கிரகணத்தின் மேலுள்ள மூட நம்பிக்கையால்,ஓர் போர் ஆழ்ந்த அழிவைச் சந்தித்தது.

கிரகணத்தில்.நம் கோயில்கள்..!

இப்படி பல்வேறு கதைகளும் சரித்திரங்களும் நடந்தது பழங்காலத்தில் என்றால், தற்போது நவீன முறையில் மூடநம்பிக்கைகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த சந்திர கிரகணத்தின் போது டிசம்பர் 10 ம் நாள், சபரி மலையில் மாலை 6.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை, இரண்டு மணி நேரம் ஐயப்பசுவாமி கோவிலின் நடை அடைக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் அறிவித்துள்ளது. கிரகணம் முடிந்து பரிகாரம் நடத்திய பிறகு மீண்டும் நடை திறக்கப்படுமாம் . அன்று ஒரு நாள் மட்டும் புஷ்பாபிஷேகம் நடைபெறாதாம்.அது என்ன இரண்டு மணி நேரம் என்பது என்று தெரியவில்லை. கிரகணம் ஐந்து மணி நேரம் அல்லவா? திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோயில், திருப்பதி பாலாஜி கோயில் என அனைத்து கோயில்களின் கதவுகள் மூடப்படுகின்றன. அது சரி..கிரகண காலத்தில் வானிலிருந்து யாராவது ந்ஞ்சை, அனைத்துக் கோயில்கள் மேலும் கொட்டுகிறார்களா? கிரகணத்துக்கு கடவுள் எதிரியா/பிடிக்காதவரா? என்ன நடக்கும் கிரகணத்தின் போது என்பது முழுமையாகத் தெரிந்தும், எப்போதும் மக்களை ஏதாவது ஒரு வகையில் மூடராக வைத்திருக்கவே..ஒரு பகுதியினர் விரும்புகின்றனர்.

சோதிடர்கள் அறிவிக்கும் தகவல்:

“டிச., 10ல் முழு சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி, பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் குறித்து பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. டிச., 10 மாலை 6.14 மணிக்கு தொடங்கும் கிரகணம் 9.47 மணி வரை இருக்கும். பவுர்ணமியும், ரோகிணியும் கூடிய நேரத்தில் ராகு கிரஸ்தமாக, வடகிழக்கே பிடித்து வடமேற்காக கிரகணம் நகரும்.முழு கிரகணமாக இருப்பதால் நிலாவின் ஒளி குறைந்து மங்கலாகும். பவுர்ணமியில் தொடங்கும் கிரகணம் பிரதமை வரை நீடிக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் சந்திரனைத் தரிசனம் செய்ய வேண்டும். சனிக்கிழமை பிறந்தவர்களும், கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தினரும், ரிஷபராசியில் பிறந்தவர்களும் மறுநாள் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்”.என இடைவிடாமல் ஜபிக்கின்றனர்.

கிரகணங்களும்,..ஊடகங்களும்..அறிவியல் மையங்களும்..!

மேலே குறிப்பிட்ட தகவல் இரண்டும் நாளிதழ்களில் வந்தவைதான்.கிரகணம் தொடர்பான, கட்டுக்கதைகளையும், மூட நம்பிக்கைகளையும், ஊடகங்கள் சும்மா, சகட்டு மேனிக்கு கட்டு கட்டாய், அறிவியலில் தோய்த்து அவிழ்த்துவிட்டுக் கொண்டே இருக்கின்றன. கிரகணம் எப்படி வருகிறது என்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே, கிரகணம் முடிந்ததும், குளித்து, தர்ப்பணம் செய்கிறார். இது எப்படி இருக்கு? அது கூட பரவாயில்லை. வானுக்கு விண்கலத்தை அனுப்பி, அறிவியலை ஆராயும்,பணியைச் செய்யும் இஸ்ரோ விண்வெளி நிலையத்தில் கூட, சாமி கும்பிட்டு, சூடம் ஏற்றி, தீபாராதனை செய்த பின் தான், விண்கலம் அனுப்பும் பட்டனைத் தட்டுகின்றனர். இப்படி ஒரு கும்பலும் அறிவியல் தளத்தில் அறிவியலுக்குப் புறம்பாய் அலைந்து கொண்டு இருக்கின்றனர் என்பதை அறிவு சால் மக்கள் அறியவேண்டியது காலத்தின் கட்டாயம். இன்று அறிவியல் உலகின், பல அறிவியல் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்திக் கொண்டு, அதனுடனே மூட நம்பிக்கைகளையும் போர்த்திக் கொண்டு வாழ்வது என்ன நியாயம்.?

அடுத்த ஆண்டு. நிகழ உள்ள கிரகணங்கள்:

  1. 2012 ,மே 20, வளைய சூரிய கிரகணம்.
  2. 2012 , ஜூன் 04,பகுதி சந்திர கிரகண்ம்
  3. 2012 ,நவம்பர் 13, பகுதி சந்திர கிரகணம்.
  4. 2012 ,நவம்பர் 28 பகுதி சந்திர கிரகணம்.


No comments:

Post a Comment