Saturday, November 12, 2011

இறந்து கொண்டிருக்கும் தாய்களும்..அவர்களைச் சுற்றி வரும் மகவுகளும் ..!

இறந்து கொண்டிருக்கும் தாய்களும்..அவர்களைச் சுற்றி வரும் மகவுகளும் ..!

by Mohana Somasundram on Saturday, October 29, 2011 at 11:53pm

இறந்து கொண்டிருக்கும் தாய்களும்..அவர்களைச் சுற்றி வரும் மகவுகளும் ..!

சுடச் சுட ஓரு தகவல்..!

நல்ல நாளும் அதுவுமா என்ன இப்படி ஒரு தலைப்பு அபசகுனம் மாதிரி என்கிறீர்களா? நண்பா இது அபசகுனம் இல்லை. அறிவியல்.. அறிவியல் கண்டுபிடிப்பு. அதான். போட்டேன். தில்லிக்கு ராசா ஆனாலும் தாய்க்கு பிள்ளைதானே.. ! அது போல, இறந்துவிட்டாலும் கூட, தாய் தாய் தானே..! அவரை விட்டுவிட்டு வர மனசின்றி முடியவும் முடியாமல் அந்த பிள்ளைகள் அவரையே சுற்றி வருகின்றனர். சுவாரசியமான விஷயமல்லவா? அப்படி ஒரு கூட்டத்தை நம் விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. அதுவும் இரண்டு நாளைக்கு முன்புதான். சுடச் சுட ஓர் அறிவியல் தகவல் சுவையாக உங்களைச் சந்திக்கிறது.

இறந்த விண் மீனைக் கண்டறிந்த தொலை நோக்கி..!!

(Hobby-Eberly Telescope (HET)

இறந்த 3 தாய் விண்மீன்களைச் சுற்றி வரும் மூன்று கோள்களை நமது சர்வதேச வானியல் ஆராய்ச்சியின் குழு கண்டுபிடித்து,உள்ளது. . இவர்கள் பென் மாநிலத்தைச் சேர்ந்த விண்வெளியாளர்கள். இந்த தகவலை இவர்கள் 2011,அக்டோபர் 27 ம் நாளில் இதனைப் பற்றிய தகவல்களை வெளியில் அறிவித்துள்ளனர் .இவற்றை எல்லாம் இந்த ஆராய்ச்சிக் குழு ஒரு தொலைநோக்கி மூலமாக ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளது என்றால் ஆச்சரியமான விஷயம்தானே. அந்த தொலை நோக்கியின் பெயர் ஹாபி எபெர்லி தொலைநோக்கி(Hobby-Eberly Telescope (HET) ).

ஹாபி எபெர்லி தொலைநோக்கி..!

ஹாபி எபெர்லி தொலைநோக்கி (Hobby-Eberly Telescope (HET) ) என்பது உலகத்தின் நான்காவது பெரிய தொலைநோக்கி.இது மெக்டொனால்டு பார்வையகத்தில்/நோக்ககத்தில் (McDonald Observatory) அமைந்துள்ளது . டெக்சாஸ் லெப்டினன்ட் கவர்னர் பெயர் மற்றும் ராபெர்ட் E.எபெர்லியின்பெயர்களை (Texas Lieutenant-Governor Bill Hobby and for Robert E. Eberly, a Penn State benefactor.) இணைத்து இதற்கு சூட்டியுள்ளனர். 1997 லிருந்து இந்த தொலைநோக்கி செயல்படுகிறது.இதனை பென் மாநிலம், டெக்சாஸ் பலகலைக்கழகம்,ஸ்டேன்போர்ட் பலகலைக்கழகம், லுட்விக் பல்கலை, மூன்சென் பல்கலை மற்றும் கோயட்டின்ஜென் பல்கலை (collaboration between Penn State and the University of Texas at Austin, Stanford University, Ludwig-Maximilians-Universitaet Muenchen, and Goerg-August-Universitaet Goettingen) என அனைத்து பல்கலைக்கழகங்களும் இணைந்து செயல் பட்டு வானை தன் நுண் கண்களால் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த இணைப்புகளுள் பென் மாநிலம்தான் அதிக ஈடுபாட்டுடன் இதில் செயலாற்றுகிறது.

திறமைசாலி..தொலைநோக்கி.!

ஹாபி எபெர்லி தொலைநோக்கியில், ஒளி வரும் துளையின் விட்டம் 9 .2 மீட்டர். ஒளி பிரதிபலிக்கும் ஆடியின் அளவு 9 .2 மீட்டரைவிட அதிகம். இதில் முதன்மை ஆடியில் 91 அறுகோண கண்ணாடிகள் உள்ளன, ஒளி பிரதிபலிக்க.இந்த ஹெட்(HET) தொலை நோக்கியின் அடிப்பகுதி அப்படியே, 70- 81 பாகை வட்டமடித்து வானை ஆராயும் . அப்போது இதுவரை நமக்குத் தெரியாமல் விண்வெளியில் வலம் வரும் பல விண்மீன்கள், அவைகளின் புதல்வர்களான கோள்கள் மற்றும் புதிய அண்டங்கள் போன்றவற்றை சல்லடை வலை போட்டுத் தேடிக்கொண்டிருக்கின்றன. சுமார் நொடிக்கு ஒரு மீட்டர் சுற்று வேகத்தில் நகரும் விண்மீன்களைக்கூட துல்லியமாய் கண்டுபிடிக்கும் திறன் வாய்ந்தது இந்த தொலைநோக்கி. இதுவரை அவற்றில் பல விண்மீனகளை கண்டுபிடித்துள்ளது. அந்த வலையில் சிக்கிய மீன்கள்தான் அக்டோபர் 27 அன்று அறிவிக்கப்பட்ட. இறந்து போன மூன்று விண்மீன்களும், அவற்றைச் சுற்றிவரும் மூன்று கோள்களும்.

கண்டு பிடிச்சோம்..கண்டு பிடிச்சோம்..!

அக்டோபரில் கண்டுபிடிக்கப்பட்டமூன்று புதிய கோள்களும் சுற்றி வரும் தாய் விண்மீனின் பெயர்கள்: HD 240237, BD +48 738, & HD 96127 -என்பதாகும். இவை நம் சூரிய குடும்பத்திலிருந்து பல பத்து ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன.இதில் உள்ள வியப்பு, ஆச்சரியம், அதிசயம் தரும் விஷயம் என்னவென்றால் இவற்றில் ஒன்று மிக மிக அதிக நிறை உள்ளது மற்றும் அது இறந்த விண்மீனாகும் . இதனை அந்த குழுவின் தலைவரான அலெக்ஸ் வோல்ஸ்க்சான் ( Alex Wolszczan, an Evan Pugh Professor of Astronomy and Astrophysics at Penn State) என்ற வானவியல் பேராசிரியர்தான் கண்டுபிடித்தார். இவர்தான் முதன் முதல் 1992 ல் வானில் சூரிய மண்டலத்திற்கு வெளியே சுற்றிவரும் வெளிக் கோள்களைக் கண்டுபிடித்தவரும் கூட. இந்த இறந்த விண்மீன்களைச் சுற்றிவரும் கோள்கள் நமக்கு பல எதிர்கால கனவுகளை, திட்டங்களை, புதிய வானியல் ஆராய்வ்ச்சிக்கு தடம் போடும் என்று தெரிய வருகிறது. இப்போது இறந்த விண்மீன்களைச் சுற்றி வரும் இந்த புதிய கோள்கள், அவற்றை பற்றிய புதிய ஆராய்ச்சிக்கு நிறைய வழி வகை செய்துள்ளன. இது உலோகங்கள் எவ்வாறு இறந்து கொண்டிருக்கும் விண்மீன்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை வானவியலாளர்கள் அறிந்து கொள்ளவும் பெரிது உதவுகின்றன.

. வெளிக் கோள்களின் (Exo -Planets ) புதிய பரிமாணம் ..!

இறந்த விண்மீன்களைச் சுற்றி வரும் இந்த கோள்களின் மண்டலம், நம் சூரிய குடும்பத்தை விட அதிகமான பரிணாமமும், பரிமாணமும் பெற்றது என தெரியவந்துள்ளது. "இந்த மூன்று விண்மீன்களும், ஏற்கனேவே தன்னிடமுள்ள ஆற்றலை எல்லாம் இழந்துவிட்டு, சிவப்பு அரக்கனாக உருமாறிக் கொண்டிருக்கிறது. வெகு விரைவில் இது தன்னருகே சுற்றி வரும் கோளை கபளீகரம் செய்துவிடும்", என வோல்ஸ்க்சான் கூறியுள்ளார். நமது சூரிய மண்டலத்தில் நம் சூரியனுக்கு என்ன நிகழும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ/ எதனைச் சந்திரசேகர் சொன்னாரோ அதுவே இந்த இறந்து கொண்டிருக்கும் விண்மீன்களின் தலையெழுத்தும் என்றும் சொல்கிறார் வோல்ஸ்க்சான். நம் சூரியனும் எதிர்காலத்தில், தன் ஆற்றலை எல்லாம் இழந்து அதன் பூத உடல் ஊதிப் போய் சிவப்பு அரக்கனாக ஊதி ஊதி விரியும். அது சமயத்தில் நம் பூமியையும் கூட விழுங்கி விட நேரிடும். நண்பா அதற்காக இப்போதே பயப்பட வேண்டாம். அது நடக்க இன்னும் 600 கோடி ஆண்டுகள் ஆகும். இதனை நான் மட்டும் சொல்லவில்லை. பேராசிரியர் வோல்ஸ்க்சானும் இதையேதான் சொல்கிறார்.

பழுப்புக் குள்ளனா..?

இறந்து கொண்டிருக்கும் விண்மீன்களில் ஒன்று பெரியது; அதிக நிறையுள்ளது மட்டுமல்ல. இதற்கு நம் வியாழன் அளவு பெரிய கோள் உள்ளதுதான் ஆச்சரியமான விஷயம். அது மட்டுமல்ல அதன் அருகில் இரண்டாவது ஒரு புதிரான பொருளும் காணப்படுகிறது. இந்த ஆராய்ச்சிக் குழுவின் கணிப்புப் படி, இந்த பொருள் வேறொரு கோளாகவும் கூட இருக்கலாம்.அல்லது இது குறைவான நிறையுள்ள விண்மீனாவோ இருக்கக் கூடும் என்று இந்த வானியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அல்லது நம் வானியலாளர்களுக்கு மிகவும் சுவாரசியமான பழுப்பு குள்ளனாகவும் கூட இது இருக்கலாம் என்று நினைக்கின்றனர். இந்த பழுப்புக் குள்ளன் என்பது, விண்மீன் போன்ற வான்பொருள் ஆனால் இது மிகமிகக் குளிர்ந்த விண்மீன்களுக்கும், அசுரன் விண்மீன் களுக்கும் இடைப்பட்ட வான்பொருளாகும். நாங்கள் தொடர்ந்து இந்த வான் பொருளைக் கூர்மையாக கவனித்துக் கொண்டிருப்போம், இன்னும் சில வருடங்களில் இவர் யார் என்பதும் இவரைப் பற்றிய முழு ஜாதகத்தையும் நாங்க புட்டு புட்டு வைப்போம், அதன் முழு வண்ணமும் அடையாளமும் தெரிந்துவிடும்.. என்று சர்வதேச வானியல் ஆராய்ச்சி குழுவின் தலைவர் வோல்ஸ்க்சான் அறுதியிட்டுத் தெரிவிக்கிறார்.

ஓயாத இரைச்சல்..!

வோல்ஸ்க்சான் இன்னும் சில சுவையான தகவல்கள் தருகிறார். என்ன தெரியுமா? இந்த மூன்றுவிண்மீன்களும் சண்டைபோடுவது போல ரொம்பவும் சத்தம் போட்டுக கொண்டிருந்தவனாவாம். நம் சூரியனைவிட அதிக ஜொலிப்புடனும் , ரொம்பவும் ஆட்டம் போட்டு ஆடிக் கொண்டும் இருந்தனவாம். இந்த சத்தம் இவர்களை அதிகமாக கவனிக்க விடாமல் தடுத்தனவாம்.நம் வீட்டுக் குட்டிகள் போடும் கும்மாளம் போல. ஆனால் பிரச்சினைகளுக்கும் மேல் ஒரு சவாலாகத் தான் இறந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிறை அதிகமுள்ள விண்மீன்களையும், அவற்றை சுற்றி வரும் புதிய கோள்களையும், அவற்றைப் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவை எல்லாம் மிகப் பெரிய சாதனைதான். இவற்றை எல்லாம் சூரியக் கதிர்களின் ஒளிவண்ணப் பட்டையைப் பிரித்து பதிவு செய்யும் நிழற்படக் கருவி(spectrographs) மூலமே கண்டறியப்பட்டது.

மலை முழுங்கி மகாதேவன்..!

இந்த குழு வேறொரு இறுதி முடிவையும் கூட செய்தது.. அதுதான் இன்னும் ஆச்சரியமான, சுவாரசியமான தகவல். இந்த மூன்று விண்மீன்களுக்கும் அவைகளின் சுற்றுப் பாதையில் நிறைய கோள்கள் இருந்திருக்கலாம். அவற்றை எல்லாம் இவை, மலை முழுங்கி மாகாதேவன் போல காலப்போக்கில் எல்லாவற்றையும் விழுங்கி விட்டன. இப்போது நமக்குத் தெரியும் ஒன்றை மட்டுமே தற்சமயம் பாக்கி வைத்துள்ளளது என்று கருதுகின்றனர். இபோது காணப்படும் கோள்களும் கூட தனது தாயிடமிருந்து சுமார் 0.6 வானியல் அலகு தொலைவில்தான், அதாவது 9 கோடி கி.மீ தூரத்தில்தான் சுற்றுகின்றன, என்ற தகவல்களையும் தெரிவிக்கிறார்.வோல்ஸ்க்சான். இந்த 0.6வானியல் அலகு என்ற மாய எண் கோள்களை விழுங்கும் தொலைவாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார் வோல்ஸ்க்சான்..

மிச்ச சொச்சமான கோள்...!

இந்த இறந்து கொண்டிருக்கும் விண்மீன்கள் மற்றும் அதன் கொலைகளைப் பற்றி அறியும் தகவல்கள் நமது சூரிய குடும்பத்தின் தலைஎழுத்தையும் கூட துல்லியமாய் தெரிவிக்கும் என நம்புகின்றனர். அது மட்டுமல்ல எப்படி நம் சூரியன் எதிர்காலத்தில் புதன், வெள்ளி, நம் பூமி, அதன் துணைக்கோளையும் கூட விழுங்கிவிடும். இன்னும் 100 -200 கோடி ஆண்டுகளில் நாம் தவிர்க்கவே முடியாதபடி, அழகான பெருங்கடல்கள் நிரம்பிய வியாழனின் துணைக் கோளான யுரேபாவில்(Jupiter's moon, Europa,) இடம் தேடிச் சென்றிருப்போம். இந்தக் கதையும் கூட அடுத்த 200 கோடி ஆண்டுதான். அப்புறம் யுரேபாவும் உருகி ஊற்றி காணாமல் போய் விடுமே.

எதிர்காலம் கணிக்க மாநாடு..!

இறநது கொண்டிருக்கும் விண் மீன்கள் பற்றியும், அவற்றின் முடிவு/தலைவிதி பற்றியும், இந்த மாதிரி தகவல் மற்றும் வெளிக் கோள்களின் வாழக்கூடிய உலகங்கள் பற்றியும் . அறிவதற்காக ஒரு வானியல் ஆராய்ச்சி மாநாடு பியுர்டோ ரிக்காவில்,(Puerto Rico ) வரும் 2012 ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு என்ன நடக்கும் என்பதையும் பற்றிய எதிர்காலத் தேடல் தொடர்பாய் தகவல்கள் பரிமாறப்படும். மேலும் அங்குள்ள ௧௦௦௦ அடி ஒரு ரேடியோ தொலைநோக்கி மூலம் அறிய உள்ள , மூன்று கோள்கள் அவைசுற்றிவரும் , வெகு வேகமாய் சுற்றிக் கொண்டிருக்கும் நியூட்ரான் விண்மீன் பற்றியும் பேசப்படும். இவை பல புதிய கோள்கள் உருவாக்கம் மற்றும் புதிய அண்டம், பிரபஞ்சம் முழுமையும் பற்றி அறிய புதிய கதவைத் திறந்து வைக்கும்.

No comments:

Post a Comment