மர்மமான மரணம்..!
  மரணம் என்பது வாழ்வின் முற்றுப் புள்ளி என்றுதான் நாம் நம்பிக்கொண்டு இருக்கிறோம்.. ஆனால் சிலரது வாழ்வில் அது அப்படி அமைவது இல்லை. சிலரது வாழ்க்கை மரணத்துக்குப் பின்பும் பேசப்படுகிறது. மரணம் புதிராகவும் கூட இருக்கிறது. அதுவும் பிரபலமானவர்கள்  என்றால் கேட்கவே வேண்டாம்.  இருக்கும்போதும் ,இறந்த  பின்பும் பேசப்படுபவர்கள் மிகச் சிலரே. அவர்களில் ஒருவர் பிரெஞ்சு அதிபர் மாவீரன் நெப்போலியன். மாவீரன் நெப்போலியன் மரணத்திலும் மர்மம் இருப்பதாக பேசப்பட்டது.    அதைப்பற்றிய கதைத்தலும், கட்டுக்கதைகளும், நம்ப முடியாத ஆச்சரியம் எண்ணிலடங்காமல் உலவி வந்தன. அதுபோலவே உலக அழகி
நடிகை மர்லின் மன்றோ, பாப் இசைப் பாடகர் மைகேல் ஜான்சன்,இளவரசி டயானா, நம்ம ஊரு சிலுக்கு ஸ்மிதா போன்றவர்களின் மரணங்களும் பேசப்படும் அதிசயமாகவே உள்ளன. .இவர்களின் முடிவில் மர்மம் இருப்பதாக சொல்லப்படுகிறது. இருநூறு ஆண்டுகளாக உலகின்  கவனத்தையும் ஈர்த்த நெப்போலியன் மரணத்தின் புதிர்களும், அது தொடர்பான புனை சுருட்டான கதைகளும், மிகைப்படுத்தப்பட்ட விஷயங்களும், இப்போது முழுமையான  அறிவியல் ஆய்வு மற்றும் தகவல் மூலம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது என்பதே உண்மையாகும். 
   ஆட்சி பிடித்த  முதலாம் நெப்போலியன்..!
   உலகம் முழுவதும் பரபரப்பாகப் பேசப்பட்ட மரணம் நெப்போலியனுக்குச் சொந்தமானது. நெப்போலியன் போனபர்ட் என்ற முதலாம் நெப்போலியன்(Napoléon Bonaparte, 15 , ஆகஸ்ட் 1769 -5 , மே 1821) 16 வயதிலேயே பிரான்ஸ்   நாட்டின்  படைத்தலைவராக இருந்தவர் .பிரெஞ்சு புரட்சியின் தளபதி. பிரெஞ்சு குடியரசின் ஆட்சியாளர்..பிரெஞ்சுப் பேரரசர், இத்தாலிய மன்னர், சுவிஸ்  கூட்டமைப்பின் இணைப்பாளர், ரெயின் கூட்டாட்சியின் காப்பாளன்  என  பல பதவிகளையும்  பொறுப்புகளையும்  வகித்தவர்  நெப்போலியன். பிரெஞ்சுப் புரட்சியின் தளபதியாக, பிரான்சுக்கு எதிரான முதலாம் கூட்டணி மற்றும் இரண்டாம் கூட்டணிகளுக்கு எதிரான போர்களை வழி நடத்தியதன் மூலம் முன்னணிக்கு வந்தவர்.  1799 ம் ஆண்டில் ஒரு சதிப்புரட்சியை நிகழ்த்தியதனால் பிரெஞ்சுக் குடியரசின் முதல் கன்சலாகப் (Cansal)பதவிஏற்றார். .நெப்போலியன்  எப்போதும் தானே பிரெஞ்சுப் புரட்சியின் பாதுகாவலன்/நாயகன்  என்று கூறிக்கொண்டார். 1804 ல், தன்னைத்தானே பிரெஞ்சு நாட்டின் பேரரசர் என்று அறிவித்துக்கொண்டார் . அவரது 3 சகோதரர்களை ஐரோப்பிய நாடுகளில் அரியணையில் அமரச் செய்தார்.அவருக்கு வேண்டியவர்கள் அனைவரையும் நிர்வாகப் பொறுப்புகளிலும் அரச பொறுப்பிலும், அமர்த்தினார்.  இதனால் பிரெஞ்சு குடியரசுவாதிகள் வெகுண்டனர். 
   நாடு கடத்தப்பட்ட மாவீரன்..!
  நெப்போலியன் தனது பெரும்படையுடன்1812 ல் ரஷ்யாவுக்குள்  நுழைந்து பெரிய தோல்வியைத் தழுவினார். ரஷ்யாவின் குளிரினைத்தாங்க முடியாமல், படைவீரர்கள் இறந்து அழிவுக்கு உள்ளாயினர். இதிலிருந்து நெப்போலியனால் மீண்டு வர இயலவில்லை. பின், 1813 , ஆறாவது கூட்டணி தகர்த்தது நெப்போலியன் படைகளை. அது 1814 ல் பேரரசர் நெப்போலியனின்  பதவியை
பறித்து, இத்தாலிய கடற்கரைக்கு அப்பாலுள்ள எல்பாத் என்ற தீவுக்கு நாடு கடத்தியது. அங்கிருந்து தப்பித்து மீண்டுவந்து அரசைக் கைப்பற்றினார். ஆனாலும் கூட, ஆட்சியைப்
பிடித்த 100 நாட்களுக்குள், வாட்டர்லூ (Waterloo)  போரில் 1815 , ஜூன் 18 ,ல் தோல்வியைச் சந்திக்க வேண்டியிருந்தது. பின் ஆங்கிலேயர்கள் நெப்போலியனை நாடு கடத்தி,  அட்லாண்டிக் பெருங்கடலிலுள்ள செயின்ட் ஹெலினா (St. Helena.)என்ற குட்டி எரிமலைத்  தீவில் சிறையில் அடைத்தனர். அங்கேயே 1821 ல் மே மாதம் 5 ம்  நாள் நெப்போலியன் மரணத்தைக் கைப்பிடித்தார்.  
     நெப்போலியப் போர்ப்பலி:
  நெப்போலியன் நடத்திய  போரினால் நேரிடையாக 371,000   படைவீரர்களும்,ரஷய ஊடுருவலினால் , வியாதியினால் 800,000 பேரும் என பிரெஞ்சு மற்றும் துணை நாடுகளிலிருந்து மொத்தமாய் 1,800,000 பேர் மரணித்தனர்.  ஒட்டு மொத்தமாக நெப்போலியனின் போரினால் ஐரோப்பாவிலிருந்து 2,500,000 பேர் இராணுவத்திலும், 1,000,000 குடிமக்களும் பலியாயினர். டேவிட் கேட்ஸ் என்ற வரலாற்றாளர் போர்ப்பலியின் எண்ணிக்கை 5,000,000 என்கிறார். ஆனால் சாதாரண குடிமக்களையும் சேர்த்து 7,000,000 வரை இருக்கக்கூடும் என்று கணிக்கிறார் சார்லஸ் ஈஸ்டைல் 
    நெப்போலியன் இறப்பு கொலையா ?
நெப்போலியன் இறப்பைப் பற்றிய மர்மங்கள் கடந்த 200 ஆண்டுக்காலமாய் இந்த உலகை வலம வந்துகொண்டிருக்கின்றன.அவர் நாடுகடத்தப்பட்டு இறந்த்ததைப் பற்றிய நம்பமுடியாத ஏராளமான கட்டுக்கதைகள் பேசப்படுகின்றன. நிச்சயமாய் நெப்போலியன் மீண்டும் பிரான்சுக்குத் திரும்பி வந்து ஆட்சியைப் பிடித்துவிடக்கூடாது என்பதற்காக நடத்தப்பட்ட சூழ்ச்சிதான் அவர் மரணம், இல்லை கொலை அரங்கேறியது எனப்படுகிறது..எப்படி நெப்போலியன் இறந்தார்? நஞ்சு வைத்து சாகடிக்கப் பட்டாரா? இறக்கும் தருணத்தில் நெப்போலியனின் எடை வெகுவாக குறைந்திருந்தது. இறக்கும்போது கொடுமையான வலியினால் துடித்தார். வலியில் துடித்தபோது  அவர் போட்ட கூக்குரல் அவர் விடம் வைத்து கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்றே எண்ணத் தோன்றுகிறது.
   அனாதையான சாவு..?.!
மாமன்னன் அலெக்சாண்டர், ஜூலியஸ் சீசருக்கு இணையான பேரரசர்தான் நெப்போலியன். ஆனால் அவரது மறைவு அனாதைபோல எங்கோ    ஒரு அட்லாண்டிக்  பெருங்கடல் மூலையிலுள்ள  ஒரு எரிமலைத் தீவில் நிகழ்ந்ததால்தான் இந்த்தனை ஐயங்களும், புதிர்களும், மர்மங்களும். போர்க்களத்தில் அவர் இறந்திருக்கலாம்; வாள் வீச்சால் தலை சீவப்பட்டிருக்கலாம்; எதிரிகளால் கொலை செய்யப்பட்டிருக்கலாம். இதெல்லாம் அவருக்குப் பெரும்  புகழினைத்  தேடித்தரும் மரணமே.. ஆனால், கைதியாய் நாடு கடத்தப்பட்ட பின்னர், ஒரு இருட்டு வீட்டில் மக்களால் மறக்கப்பட்ட நிலையில் அனாதையாக உயிர் விட்டதுதான் உலகின் சந்தேகத்துக்கு விதை ஊன்றியது. நினைத்துப் பார்க்கமுடியாத சாவு அது.
   முடிவு..புற்றா? விஷமா?
நிஜமாகவே அவரை சிறைப்பிடித்த ஆட்சியாளர் சொல்வது போல, புற்று நோயால் பாதிக்கப் பட்டு உயிரிழந்தாரா? அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டதா? அப்படி எனில் யார் என்ற வினாவே உலவி வருகிறது.உண்மையாகவே 1821 , ஜூன் 15 ல் தான் இறந்தாரா இல்லையா என்பதே வினாக்குறிதான். எப்படியாயினும், அவரது மரணம் சுற்றி நடைபெறும் நாடகத்தின் காரணிகளும்/பதிவுகளும்  கூட மிகச் சுவையானவைதான். அவருடன் உடன் இருந்த மெய்க்காப்பாளர் தனது வாயை/நாட்காட்டியை  1950 வரை திறக்கவே இல்லை. அதனால் அவரைப்பற்றி நிறைய வதந்திகளும் உலவின. அந்தக்கால மருத்துவம் துவக்ககால நிலையில் இருந்தாலும் கூட, அவர்கள் திறமையாளர்களாக,நெப்போலியனின் நோயைச் சரியாகவே கணித்தனர் . அதுவே அந்த கதையின் மையக் கருவாக இருந்தது.சிறைக்காவலரும் கூட காரணி எனக் கருதப்பட்டது. அல்லது அவரது குடும்பத்தினரே கூட இதைச் செய்திருக்கலாம் என்றும் நம்பப்பட்டது. சட்டத்திற்குப் புறம்பான முறையில் நெப்போலியனைத் தீர்த்துக்கட்டி இருக்கலாம் என்றே நினைத்தனர். 
  அவிழ்த்து விடப்படும் கட்டுக்கதைகள்:
நெப்போலியன் மரணம் ஒரு தனிமையான தீவில் நிகழ்ந்ததால், ஏராளமான ஊகங்களை மக்களிடையே பரப்பி உள்ளது. ஆர்சனிக் என்ற நஞ்சை கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து அவரை தீர்த்துக்கட்டியதாக சொல்லப்பபடுகிறது.நெப்போலியன் சிறை வைக்கப்பட்ட அறையின் ஆய்விலிருந்து தெரிந்த தகவல், என்னவெனில்,  நெப்போலியனின் அறைச்சுவரை அலங்கரித்த் ஓவியத்தில் நஞ்சு பூசப்பட்டிருந்தாம். அதில் பாம்பின் விடத்தைப் பயன்படுத்தி இருக்கின்றனர். அந்த ஓவியத்தின் அருகிலிருந்து அதனைச் சுவாசித்ததால் நெப்போலியன் இறந்து விட்டார் என்றும் கதைவிடப்படுகிறது. வேறொரு கட்டுக்கதை என்ன தெரியுமா? சுவரிலுள்ள ஓவியத்தில் ஆர்சனிக் விடம் கலக்கப்பட்டிருந்தது என்றும்  , அதனை பசியில் சுரண்டி எடுத்து தின்றுவிட்டார் என்றும் நம்பபடுகிறது. எனவே தான் இறப்பு நெப்போலியனைச் சந்தித்தது என்றும் சொல்லப்படுகிறது.. 
    பரபரப்பாய் பேசப்பட்ட மருத்துவக்  குறிப்பு !
இதுவரை எந்த வரலாற்று நாயகரின்  மருத்துவப் பதிவும் நெப்போலியனின் இறுதி இறப்பு மருத்துவப் பதிவு போல நுண்ணிய அளவில் அலசி ஆராயப்படவில்லை. அவரின் இறுதி நிகழ்வு  பற்றிய தகவல்கள் ஆச்சரியமூட்டும் வகையிலும், அதிசயமாகவும், விநோதமாகவும், மாயமும், புதிரும் நிறைந்ததாகவுமே திகழ்ந்து உலகம் முழுவதும் பரவி திரிந்தது. 1815 ல் நெப்போலியன் பிரிட்டிஷ்காரர்களால் நாடுகடத்தப்பட்டு தெற்கு அட்லாண்டிக் கடலில் உள்ளஎரிமலைகள் நிறைந்த செயின்ட் ஹெலேனா என்ற தீவில் சிறை வைக்கப்பட்டார். அங்கேயே அவர் 6 ஆண்டுகள் வேதனைக் நிறைந்த வாழ்க்கையைக் கழித்தார்.  அவரின் 52 வது வயதில் அதிகமாக நோய்வாய்ப்பட்டு  1821 , மே 5 ல் நெப்போலியன்  உயிர்பிரிந்தது. அந்த சிறை தொடர்பாகவே சில வதந்திகள் மேய்ந்து உலவுகின்றன.
   நஞ்சு கலந்த வண்ணங்கள்..!
 நெப்போலியனைத்  தங்க வைத்த வீட்டின் பெயர் லாங் உட். அந்த வீட்டின் சுவர்கள் சுவரை அலங்கரிக்கும் பேப்பரால் பச்சையும்,தங்க நிறமும், அடர்  பழுப்பு நிறமும், உள்ள பூக்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. மேலும் அவரது குளியலறையிலும் கூட குழந்தைகளின் ஓவியங்கள் அதே வண்ணத்திலேயே இருந்தன. 18 ம் நூற்றாண்டில் இந்த வண்ணங்கள் அரச வண்ணங்கள் என்று போற்றப்பட்டன.  பிரெஞ்சின் பல பகுதிகள் இப்படிப்பட்ட வண்ணங்களால் தீட்டப்பட்டன. சரியாக 160 ஆண்டுகள் சென்றபின், ஓர் ஆங்கிலேய வேதியலாளர், அந்த வீட்டின் சுவரை சுரண்டி எடுத்து ஆய்வு செய்து, அந்த ஷீல் பச்சை வண்ணத்தின் (Scheele's green) பொருட்களும், ரோசட்டி எனப்படும் பகுதியும் ஆர்சனிக் என்ற நச்சுத்தன்மையுள்ள வேதிப்பொருள் கலந்த வண்ணத்தால் பூசப்பட்டிருக்கின்றன என்று தெரிவித்தார். இதனால் வெளியேறிய நச்சுக்காற்று கொஞ்சம் கொஞ்சமாக நெப்போலியனின் உயிரைப் பறித்துக் கொண்டது என்றும் சிலர் கருதுகின்றனர். எனவே அவரது இறப்புக்கு இப்படி பல காரணிகள் கற்பிக்கப்படுகின்றன.  அதில் இதுவும் ஒன்று.
  ஆவியான அபாய ஆர்சனிக்..!
நெப்போலியன் இறந்து 70 ஆண்டுகள் ஆனபின்,1893 ல்,  ஓர் உண்மை வேதியலில் கண்டுபிடிக்கப்பட்டது. சுவரில் ஒட்டியிருந்த பச்சை வண்ண சுவரோவியம் நீர் படிந்து, பூஞ்சைக் காளான் உருவானது. அது தாமிர ஆர்சனைட் நிறமியை ஆர்சனிக் டிரைமெதைல் (Arsenic trimethyl)  என்ற ஆவியாக மாற்றிவிடுகிறது. இது நச்சு வாயு.  இதனை சுவாசிப்பது மிகவும் அபாயகரமானது. பின்னர் அதனை x கதிர் மூலம் பிரதிபலித்து வண்ணம் ஆயும் கருவி(X-ray florescent spectroscopy)  கொண்டு  ஆய்வு செய்தார் ஓர் இயற்பியலாளர்,  அந்த சுவரோவியத்தில் உள்ள ஆர்சனிக் மற்றும் தாமிர அணுக்கள் எதில் இருந்தாலும், அது ஒருவருக்கு நோயை உண்டுபண்ணுவதுடன், இறப்பை துரிதப்படுத்தும் தன்மையது என்பதனை 1893 ல் தான் கண்டறிந்தனர்.அதுதான் நெப்போலியனுக்கும் நேர்ந்திருக்கிறது என்றும், வேறு எந்த நஞ்சும் கொடுக்கப்படாமலேயே சாவு வரும் வழி என்றும் கூறினர். அந்த ஆர்சனிக் வாயு உலவிய வீட்டின் உள்ளேதான் நெப்போலியனும் 6 ஆண்டுகள் உலவி இருக்கிறார். இதனால் அதன்பின் இன்றும்கூட,  செயின்ட் ஹெலெனாவிலுள்ள லாங் உட் வீட்டின் சுவரோவியங்கள் இரண்டாண்டுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றன, ஆனால் ஷீல் பச்சை வண்ணம் மட்டும் இப்போது பயன்படுத்தப்படுவதில்லை.
     நெப்போலியனும்,ஆர்சனிக் கதைகளும்..!
நெப்போலியன் மரணத்தில் ஏராளமான சர்ச்சைகளும் காணப்படுகின்றன. அவர் இறந்ததும் அவரது தலை இருமுறை மழிக்கப்பட்டது.அவரின் நினைவாக சிலரை அவரின் முடியை வைத்திருந்தனர். அவரது முடியில்  ஏராளமான ஆர்சனிக் இருந்தது  பின்னர் கண்டு  பிடிக்கப்பட்டது . நெப்போலியனின்  மிகுந்த நம்பிக்கைக்குரியவரான  மோன்தொலோன்  என்ற துரோகிதான் , நெப்போலியன் அருந்தும்  ஒயினில்  தினமும் கொஞ்சம்  கொஞ்சமாக  ஆர்சனிக் கலந்ததாக  சொல்லப்படுகிறது . ஒயினில் இருந்த கசப்பை, விடத்தை அறிந்த நெப்போலியன அதில் பாதியைக் கொட்டிவிட்டாராம். மேலும் அவரது முடியில் இருந்த ஆர்சனிக், அறையில் புகையாக வெளிப்பட்டதுதான் என்று அறியப்படுகிறது. அதைத்தவிர 1805 ல் அவருக்கு எடுக்கப்பட்ட முடியிலிருந்தும் ஆர்சனிக், இருந்தது. அப்போது அவருக்கு யார் விஷம் வைத்திருந்தனர். மேலும் அவரது குடும்பத்தினரின்  முடியிலும்  ஆர்சனிக் இருந்தது தெரியவந்தது   . எனவே நெப்போலியன் இறப்புக்கு  ஆர்சனிக் நஞ்சு  காரணமல்ல . ஆனால் அது அவரின் நோயையும்  , அதன்  தாக்கத்தையும்   மிகைப்படுத்தியது அதுதான். .அந்தக்   காலகட்டத்தில் தலைக்குத்  தடவும்  தைலத்திலும்,  மருத்துவர்கள்   தரும் மருந்திலும் கூட  ஆர்சனிக் கலந்திருந்தனர்  . ஆர்சனிக் வாங்குவதும் , பயன்பாடும்  பெரிய  விஷயமாகப்  பார்க்கப்பட  வில்லை .செயின்ட் ஹெலேனாவின்  கடல்  பகுதிகளில்  காணப்படும்  மீன்களிலும்  ஆர்சனிக் இருப்பதாகத்  தெரிகிறது . 
சாவுச் சர்ச்சையின் காரணிகள்.!
   இருந்தாலும்கூட   நெப்போலியன் சாவில்  சந்தேகமும் , சர்ச்சையும்  உலவ  சரியான  காரணிகளே  உள்ளன . அவை :
  1. அந்தக் குட்டித்தீவிலுள்ள லாங்உட் வீட்டில் நாடு கடத்தல் சமயத்தில் நெப்போலியனுடன்,அவரைப் பாதுகாக்க சுமார் 20 பேர் தங்கி இருந்தனர். 
  2. அவரது உதவியாளர் மெர்ச்சன்ட்டின் நாட்குறிப்புகள் 1950 வரை வெளியிடப்படவே இல்லை. 
  3. அந்த வீட்டின் தலைமைப்பொறுப்பில் இருந்த காம்ட்டி டெ மோந்தொலோனை நெப்போலியன் மிகவும் நம்பிக்கையானவர்களுள் நம்பிக்கயானவராகக் கருதினார். 
  4. ஆனால் காமடியின் மனைவி அல்பைன் நெப்போலியனின் துணைவியாகவே இருந்தார் என்றும், அவர் நெப்போலியனின் சட்டத்திற்குப் புறம்பான குழந்தையின் தாய் என்றும் தெரிய வருகிறது. 
  5. பேரரசர் நெப்போலியனின் தனிப்பட்ட மருத்துவர் ஆண்டோம்மார்ச்சி ( Dr Antommarchi )என்பவர் எப்போதும் உடன் இருந்தார். 
  6. அந்த தீவின் கவர்னர் ஹட்சன் லோவ் என்பவர்.
  7. இதில் குறிப்பிடும் அனைவரும் நெப்போலியனைத் தீர்த்துக்கட்ட போதுமான காரணங்களைக் கொண்டிருந்தனர்.
  •  இந்த விஷயங்கள்தான்,  நெப்போலியன் கொலை செய்யப்பட்டிருப்பாரோ என்ற எண்ணத்தை நம்மிடயே விதைக்கின்றன.
  • நெப்போலியன் இறப்புக்குப் பின் அவரது உடலை 8 மருத்துவர்கள் சோதனை செய்திருக்கின்றனர். 
  • அன்றைய மருத்துவர்கள் கொடுத்த அரசுச் சான்றிதழ் பேரிலும், நெப்போலியனின் இறப்புச் சான்றிலும் அவர் வயிற்று புற்றுநோயால் இறந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது. 
  • அவரின் வயிற்றில் ஒரு துளை உள்ளது. அது புற்றுநோய் தொடர்பாய் போடப்பட்ட ஓட்டை என்றும் கூறப்படுகிறது.
  நெப்போலியனும்,,நோய்களும்..!
   நெப்போலியனைத்தாக்கிய எதிரிகளின் பட்டியலில் குணப்படுத்த முடியாத நோய்களும் உண்டு. அவைகளும் சேர்ந்துதான் நெப்போலியனைத்  தீர்த்துக்கட்டி இருக்கின்றன.ஆனால் அவை அவரின் உயிரைக் குடிக்கும் பணியைச் செய்யவில்லை. அனைத்தும் ஒன்று சேர்ந்ததுடன், அவருக்கு வயிற்றில் புற்றுநோய் வந்ததுதான் நெப்போலியன் உயிரை கொண்டுபோனது. வாட்டர்லோ போரின்போதே அவருக்கு மூல நோயின் தாக்கம் இருந்து வாட்டி இருக்கிறது. நெப்போலியனுக்கு சொறி சிரங்கு, நீண்ட நேரம் குளிப்பதானால் உண்டான நீடித்த நாள்பட்ட தோல் வியாதி,கட்டுகடங்காக் கோபம், கதறி அழுவதால் ஏற்படும் வலிப்பு நோய், ஒற்றைத்தலைவலி, வலியுடன்  சிறுநீர் பிரிதல்,போன்றவைகள்ஒட்டுண்ணிகளால்  ஈரலில் ஏற்பட்ட வியாதியின் விளைவால் வந்தவையாகும். அவருக்கு அதிக அளவு நாளமில்லாச் சுரப்பிநீர் சுரந்தது. அதனால் நெப்போலியனுக்கு, இனப்பெருக்க உறுப்புகள் குறைந்த அளவே இருந்தன, ஆனால் தைய்ரைடு அதிகம் சுரந்தது. அவரின் உடலில் மற்றவர்களுக்கு இருப்பதை விட ஒரு குரோமோசோம் அதிகமாக இருந்து கிளின்பில்டேர்ஸ் சிண்ட்ரோம்(Klinefelter's Syndrome (an extra X chromosome) என்ற மரபணு வியாதியும் இருந்தது.பிட்யூட்டரி  சுரப்பு குறைவால் போஹ்ளிச் சிண்ட்ரோமும் (Foehlich’s Syndrome (pituitary deficiency)  இருந்தது. முடிவில் கூடுதலாக், போனசாக விளக்கப்படாத ஓரினத்தொடர்பு குணமும் இருந்தது. 
  சிகிச்சையா சித்திரவதையா..!
   2004 பிபிசி நிறுவனச் செய்தியின் மூலம் வெளிவந்த தகவல் என்னெவெனில், பிரெஞ்சின் தடயவியல் வல்லுனர்கள் நெப்போலியன் சாவு என்பது ஆர்சனிக்  விஷம் மூலமே என உறுதியாய் தெரிவிக்கின்றனர். நெப்போலியனுக்கு கொடுக்கப்பட்ட சிகிச்சை அவரைக் கொல்லுவதற்குத்தான்,, குணப்படுத்த் அல்ல என்று அமெரிக்க விஞ்ஞானிகள் சொல்கின்றனர்.  ஆண்டிமணி பொட்டாசியம் டார்ட்ரேட் என்ற நிறமற்ற உப்பு அவருக்கு தினப்படி நியதியாகக் கொடுக்கப்படுமாம். இது அவரை வாந்தி எடுக்கச் செய்யுமாம். மேலும் அவருக்கு நிரந்தரமாக எனிமாவும் கொடுக்கப்பட்டது.தடயவியலாளர்  , ஸ்டீவன் கார்ச் (Steven Karch) கருத்துப்படி, மேற்கூறிய நிகழ்வினால் நெப்போலியனுக்கு பொட்டாசியம் தாது உப்பு போதாமல், இதயத்தின் செயல்பாடு குறைந்து இறுதியின் நின்று போனது. என்றார். 

  டைம் பத்திரிக்கையின் செய்தி..!
   நெப்போலியன் 1815 ல் நாடுகடத்தப்பட்டு, செயின்ட் ஹெலனாவுக்குச் சென்ற பிறகு, அவரது இறப்பைத்துரிதப்படுத்த பிரிட்டிஷ் அரசு தூண்டுதல் செய்துகொண்டிருக்கிறது என தி டைம்ஸ் பத்திரிகையில் கட்டுரைகள் வந்தன. மேலும் அங்கு செயின்ட் ஹெலனாவின் கவர்னர் ஹட்சன் லோவ் நெப்போலியனை மிகவும் மோசமாக நடத்துவதாவும் தகவல்கள் வந்தன. அதே பத்திரிகை, 1818 ல், நெப்போலியன் தப்பிவிட்டார் என வதந்தியும் பரப்பியது. நெப்போலியன் உடல்நிலை 1817 , செப்டம்பரிலிருந்து மோசமாகத் தொடங்கியது. அவரின் தனி மருத்துவர் பெர்ரி ஓ,மேயரா(Barry O'Meara) இதனை சிறை பொறுப்பாளர்களிடம் எச்சரித்தார். ஆனால் கவர்னர் லோவ் மறுத்துவிட்டார். அங்கேயே  போட்டு வக்கிரமாக வாட்டி வதைத்தார்.1821 பிப்ரவரியில் உடல்நிலை மிகவும் மோசமானது. அதன்பின் மே 3 ம் நாள் வந்த இரண்டு பிரிட்டிஷ் மருத்துவர்கள் வலிநிவாரணிகள் மட்டும் தரச்சொன்னார்கள்.
 இறுதி நாளும், இறந்த பின்பும்..!
 பேரரசர் நெப்போலியன் 1821 மே 5 ம் நாள் உயிர் நீத்தார்.நெப்போலியன் சாகும் தருவாயில் சொன்ன வார்த்தைகள் என்ன தெரியுமா? ""பிரான்ஸ், இராணுவம், இராணுவத் தலைவன், ஜோசபின்.". என்பதுடன் அவர் தனது மூச்சை நிறுத்திக்கொண்டார்.(ஜோசபின் அவரது காதல் மனைவி. ஆனால் குழந்தை இல்லைஎன்று மணவிலக்கு பெற்றார்).  நெப்போலியனுக்கு 6 ம் தேதி செய்த முகமூடி அவரது மருத்துவர் கார்லோ ஆண்டோம்மார்ச்சி ( Carlo Antommarchi,) தான் செய்தாரா என்பதும் ஐயத்துக்குரிய விஷயம்தான். அதே சமயம், நெப்போலியனின் உடலை பாரிசிலுள்ள சைன் நதிக்கரையில் அடக்கம் செய்யக் கேட்டபோது பிரிட்டிஷ் கவர்னர் லோவ்  மறுத்து, செயின்ட் ஹெலனாவிலேயே புதைக்கும்படி கட்டளையிட்டார்.அங்கு சவப் பரிசோதனைகளை முடித்த பின் அடக்கம் செய்தனர்.  லோவ் நெப்போலியன் கல்லறையில் நெப்போலியன் போனபர்ட் என்று எழுதச் சொன்னார். ஆனால்அங்கு நெப்போலியனின் மெய்க்காப்பாளர்கள் நெப்போலியனின் அரசபரம்பரையை குறிப்பிட்டு எழுதச் சொன்னார்கள். முடிவில் ஹெலனாவில் நெப்போலியன் அடக்கம் செய்த இடத்தில் அவரின் பெயர்கூட குறிப்பிடப்படாமலே பெயரற்று இருந்தது.
   பிரான்ஸ்சென்ற நெப்போலியன்..!
பிரெஞ்சு அரசின் வேண்டுகோளுக்கிணங்க நெப்போலியன் சவப்பெட்டி பிரான்சுக்கு 1840 ல் நவம்பர்  29 ம் நாள் கொண்டுவரப்பட்டது. அங்கே டிசம்பர் 15 ல் சகல அரசு மரியாதைகளுடன், தேவாலயத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. பின்னர்தான் பாரிசிலுள்ள சைன் நதிக்கரையில்,பூ வேலைகள் செதுக்கப்பட்ட பழங்கால கல் சவப்பெட்டியை 1861 ல்  கல்லறை உருவாக்கி அங்கு லேஸ்
இன்வாளிடேஸ்  (Les Invalides.) என்ற இடத்தில் வைத்தனர். நெப்போலியனின் உடலை இறப்புக்குப் பின் பரிசோதனை செய்த அவரது மருத்துவர்  கார்லோ ஆண்டோம்மார்ச்சி, அவரது இறப்புக்குக்காரணம்  வயிற்று புற்றுநோயதான் என்றும் சொன்னார். ஆனால்  அந்த பரிசோதனை அறிக்கையில் கையொப்பம் இடவில்லை.இந்த நிலைமை பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு ரொம்பவே சாதகமாகப் போய்விட்டது.
 விடையறியா வினாக்கள்..!
   நெப்போலியன் இறந்து 12 மணி நேரத்துகுப்பின்பும், பின் 24 மணிக்குப் பிறகும் என இருமுறை அவரின் தலைமுடியும், முகமும் மழிக்கப்பட்டன.1821 ல் நீட்டிவைக்க்ப்பட்டிருந்த நெப்போலியனின் கால், 1840 ல் சவப்பெட்டியைத் திறந்தபோது, மடித்து இருந்தது. இறந்த நெப்போலியன் எழுந்து காலை மடக்கிக் கொண்டாரா? செயின்ட் ஹெலனாவில் அவரின்  உடல்மேல் போர்த்தி இருந்த இராணுவ உடையும்கூட 1840 ல் கறைபடிந்து இருந்தது.அது மட்டுமல்ல, அடக்கம் செய்தபோது  சவபெட்டியில், காலுறைக்குள் இருந்த விரல்கள் 1840 ல் சவபெட்டியினைத் தொட்டுக்கொண்டு தொங்கிக் கொண்டிருந்தன, 1821 ல்.சவப் பரிசோதனையின்போது எடுக்கப்பட்ட இதயமும், வயிற்றின் பகுதியும், சவப்பெட்டியின் மூலையில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் அவை மீண்டும் 1840 ல் பார்த்த போது, அவரின் கால்களுக்கு இடையே இருந்தன. 1840 ல் சவப்பெட்டியில் நெப்போலியனின் மூடிய வாய் திறந்து பற்கள் நீட்டிக்கொண்டு இருந்தன.இதையெல்லாம் செய்தது யார்? புரியாதப் புதிர்தான் இன்றும். அதே போல, நெப்போலியனின் மெய்க்காப்பாளர் லூயிஸ் மார்ச்சண்டின் நாட்குறிப்பு 1955 ல் வெளியானபோது நெப்போலியனின் சாவுக்கான காரணமும்,முக்கியமாக ஆர்சனிக் விஷம் கொடுத்ததையும் குறிப்பிட்டுள்ளார். இது 1961  ல் இயற்கை (Nature) இதழில் வெளியானது. நீண்ட நாளைக்கு ஆர்சனிக் விஷம் கொடுத்தால் அதனை ஆராய்ச்சிகள் மூலம் அப்போது அறிய முடியாதாம். மேலும் நெப்போலியன் உடல்1840ல் அப்புறப்படுத்தப் பட்டபோது நல்ல நிலையில் இருந்ததிற் கான காரணம் அவர் உடலில் இருந்த ஆர்சனிக் என்ற வேதிப்பொருளே..என்பதும் தெரிய வந்துள்ளது. 

  முடிச்சு அவிழ்க்கப்பட்ட  மர்ம மரணம்..!
முடிவாக 2008 ல் நெப்போலியன் வாழ்நாள் முழுவதும் எடுத்த முடியினை மற்றும் அவரது குடும்பத்தினர் முடியினை ஆராய்ந்தனர். அவைகளில் ஆர்சனிக் அளவு 100 மடங்கு அதிகமாக இருந்தது. 200 ஆண்டுக்காலம் உலகைச் சுற்றிவந்த நெப்போலியனின் மரணப்புதிர் நவீன  அறிவியல் ஆராய்ச்சிகளுக்குப் பின அமைதி அடைந்தது. அவரின் இறப்புக்குக் காரணம் முற்றிய நிலையில் இருந்த புற்றுநோய்தான். அது முற்றிய நிலையில் ஈரல்வரை பரவி இருந்தது. மேலும் வயிற்றுக்குள் 10செ.மீ. உள்ள கட்டி எடுக்கப்பட்டது, என அமெரிக்கா, சுவிஸ்  மற்றும் கனடா நாட்டு ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் டாக்டர்.ஜெண்டா(Dr.Genda) தெரிவிக்கிறார். மேலும் நெப்போலியனின் உடனடிச் சாவுக்கு, அவர் வயிற்றிலிருந்த கட்டியிலிருந்து இரத்தம் வெளிஎரியிருந்ததுதான் காரணம். அத்துடன், நெப்போலியனின் உணவு அவர் பெரும்பாலும் போர்க்களத்தில் இருப்பதால், உப்பிட்டு பதப்படுத்தப்பட்ட உணவும், குறைவான பழங்கள், காய்கறிகள் எடுத்துக் கொண்டதால்தான் புற்றுநோய் வந்தாது என்றும் ஜெண்டா குறிப்பிடுகிறார். ஒருக்கால் நெப்போலியன் இப்போது இருந்தாலும் கூட, அவரது நோயின் நிலையில் ஒரு மாதம் தாக்குப்பிடித்து உயிருடன் வைத்திருப்பதே இயலாது. வயிற்று புற்று நோயின் தன்மை அது. அவர் நோயுற்றபோது 20 பவுண்டு எடை இழந்திருந்தார்.என்றும் கூறினர் ஜெண்டா.  முடிவாகவும், முற்றாகவும், அறிவியலின் உதவியால் நெப்போலியன் மரண முகமூடி திறப்பட்டு உணமை தரிசனம் தந்தது. நெப்போலியன் இறப்புக்கு  சாவு மணி அடித்தது புற்று நோயே..! 
     நெப்போலியன் வாசகங்களை உங்கள கண்முன் நிறுத்துகிறேன்:
    " நான் எனது ஆயுள் முடிவதற்கு முன்பே, பிரிட்டிஷ் ஆதிக்கத்தாலும், அவரது வாடகை கொலையாளிகளாலும் செத்துப்போவேன்" என்றார். அதே நெப்போலியன் பலமுறை தன் வாழ்நாளை முடித்துக்கொள்ள நிறைய முயற்சியும் செய்தவர். அதே சமயம், அவர்மேல் தொடுக்கப்பட்ட  பல கொலை முயற்சிகளிலிருந்தும் தப்பித்தவர் .