Saturday, November 12, 2011

உலகின் முதல் வேதி விஞ்ஞானி பெண் ..தப்புட்டி பெலாட்டிகல்லிம் (Thapputi -Belatikallim )..!

உலகின் முதல் வேதி விஞ்ஞானி பெண் ..தப்புட்டி பெலாட்டிகல்லிம் (Thapputi -Belatikallim )..!

by Mohana Somasundram on Saturday, November 5, 2011 at 1:19am

தப்புட்டி

அனைத்துமான வேதியல்..!

வேதியல் என்பது வாழ்வில் சுவையான ஓர் அத்தியாயம். அதனை தவிர்த்து நாம் வாழ இயலாது என்பது தெரியுமா..நண்பரே..!உங்கள வாழ்வின் ஒவ்வொரு துடிப்பிலும், ஒவ்வொரு செயலிலும் வேதியல் ஒன்றிப்போய் இருக்கிறதே..! யார் வாழ்க்கையானாலும் சரி, அண்டம் முதல், அமீபாவரை என்றாலும் சரி..! அமீபா முதல் ஏழாம் அறிவு வரை என்றாலும் சரி..! வேதியலின்றி, அதன் வினைச் செயல்பாடுகள் இன்றி, அவற்றைச் சந்திக்காமல் நாம் வாழவே முடியாது, அது தெரிந்தாலும், தெரியாவிட்டாலும்..கூட! பிரபஞ்சத்திலிருந்து, நம் உடலில் உள்ள அனைத்து செல்களிலும், உண்ணும் உணவிலும், பார்க்கும் கல், மண்ணிலும் வேதியியல் ஊடுருவி நிற்கிறது. நம் வாழ்வில் அனைத்துப் பொருட்களிலும் வேதியல் இரண்டறக் கலந்திருக்கிறது. அவனன்றி அணுவும் அசையாது எனற பழமொழியை மாற்றிப் போடவேண்டும். வேதியல் இன்றி அணு அசையாது என்பதுதான் உண்மை.பிரபஞ்சத்தின் ஒவ்வொரு துகளிலும் இயற்பியல்,வேதியல் மற்றும் கணிதம் கலந்தே உள்ளது.

புகை வழியே மணம்..!

வேதியலின் துவக்கம் நறுமணத் தைலமாக/அழகுசாதனப் பொருட்களாகவே இருக்க வேண்டும் என்பதுதான் விஞ்ஞானிகளின் கணிப்பு. நறுமணத் தைலத்திற்கு பர்பியூம் (Perfume) என்பது ஆங்கிலப் பெயர்.இந்த வார்த்தை லத்தீன் மொழியிலிருந்து வந்ததாகும். இதன் பொருள் புகையின் வழியே ("through smoke") என்பதே. ஏனெனில் துவக்க காலத்தில் வாசனை மிகுந்த மூலிகைகளின் வேர்,பூ, பட்டை போன்றவற்றை எரித்தே இதனைத் தயாரித்தார்கள். அதனாலேயே நறுமணத் தைலத்திற்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது. ஆதிகாலத்தில் சீனர்கள், இந்தியர்கள், இஸ்ரேலியர்கள், கார்தஜினியர்கள், அரேபியர்கள், கிரேக்கர்கள், ரோமானியர்கள் எனப் பலரும் நறுமணத் தைலத்தை அவர்களின் கலாச்சாரத்திற்குள் எந்தெந்த வகையிலோ நுழைத்தனர்.அது மட்டுமல்ல. மனித சமுதாயத்தின் நாகரிகத்தில் பெரும் பங்கு வகிப்பது நறுமணம்தான்.

நாகரிகத் தொட்டிலும்..நறுமணப் பிறப்பும்..!

மனிதனில் மட்டுமல்ல, அனைத்து விலங்கினங்களிலும் கூட இணையை ஈர்ப்பதற்கு, இணை சேர காந்தமாய் பயன்படுவது நறுமணம்தான்.ஆனால் மனிதன்தான் செயற்கையான நறுமணத்தை தனது சொந்த செயல்பாட்டுக்கு பயன்படுத்தியவன்.. நறுமணத் தைலம் முதன் முதல் தயாரிக்கப்பட்ட இடம் மனித நாகரிகத்தின் தொட்டில் என்று அழைக்கப்பட்ட மெசபடோமியாதான்.ஆனால் எகிப்தியர்களும் நறுமணத்தைலம் தயாரித்தனர் என்றும் சொல்லப்படுகிறது.எப்படி தெரியுமா? எகிப்திய மன்னர்களும், ராணிகளும் நறுமணத் தைலம் பயன் படுத்தியதாக பதிவுகள் உள்ளன. அதே சமயத்தில் எகிப்தில் இறந்த மனிதர்களை பல இலைகள் மற்றும் தைலங்கள் கொண்டு பதப்படுத்தி, அதன் பின்னர் மம்மியாக்கி பிரமிடுகளில் வைத்தனர். அதன் பின் நறுமணத்தைலம் தயாரிப்பைச் செழுமைப் படுத்தி பயன்படுத்தியவர்கள் ரோமானியர்களும், அரேபியர்களும்தான். எகிப்தின் ஆதிகால நறுமணத் தைல பாட்டிலின் வயது 3,000 ஆகும். எகிப்தியர்கள்தான் முதன் முதல் கண்ணாடியிலான நறுமணத் தைல பாட்டிலைக் கண்டுபிடித்தவர்கள். அவர்கள்தான் கண்ணாடியை பொதுவான பயன் பாட்டிற்கு கொண்டுவந்தவர்களும் கூட.

எகிப்தின்.. பண்டைகால.. வேதியல்..!

சைப்ரஸ் தீவிலுள்ள பைய்ர்கோஸ் மாவ்ரோராகி (Pyrgos Mavroraki) நறுமணத்தைலத் தொழிற்சாலை வளாகம்

எகிப்தில் முகத்தை பல வண்ணங்கள் கொண்டு அழகு செய்வதும், மம்மியின் கண் இமைக்கு வண்ணம் தீட்டுவதும் சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பே நடந்திருக்கிறது. அழகுப்பொருளுக்கான காஸ்மெடா என்ற வார்த்தை ரோமானிய அடிமைகளால் பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அவர்கள், அவர்களது எஜமானர்களை வாசனைத் தைலம் கொண்டு குளிப்பாட்டுவார்களாம். ஆனால் கி.மு. 7,000-4,000 ஆண்டுகளில் ஆலிவ் எண்ணெய் மற்றும் நல்லெண்ணெயுடன் கலக்கப்பட்ட நறுமணச் செடிகளை இணைத்து புதிய கற்கால மக்கள் களிம்பு உருவாக்க பயன்படுத்தியதாய் தெரிய வருகிறது. ஆனால் பச்சைக் களிமண்ணில் கியூனிபாரம் எழுத்துக்கள் உருவாக்கிய பின்னரே, அனைத்து செய்முறைகளும் பதிவு செய்யப் பட்டன. முதல் வேதி விஞ்ஞானி தப்புட்டி பெலாட்டிகல்லிமின் (Thapputi -Belatikallim ) நறுமணத்தைலத் தயாரிப்பும் இப்படி பதிவு செய்யப்பட்டதுதான். எகிப்தில் சுமார் 12,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஆண்களும், பெண்களும் வாசனை மிகுந்த எண்ணெய் மற்றும் களிம்புகளை தங்களின் உடல் வாசனைக்காகவும், தோல் மென்மை பெறவும் தடவிக் கொண்டதாக தெரிய வருகிறது.

முதல் வேதி விஞ்ஞானி..பெண்..! தப்புட்டி பெலாட்டிகல்லிம். .!

சைப்ரஸுல் உள்ள லிம்மோசோல் மாவட்டம் ,

தப்புட்டி பெலாட்டிகல்லிம்( Thapputi -Belatikallim )

மனிதனின் மிக துவக்ககால வேதியல் பதிவு என்பது சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கிடைத்துள்ளன. மனித நாகரிகத்தின் தொட்டில் எனப்படும் மெசபடோமியாவிலேயே,மனிதனின் சுவையான வேதியல் ஈடுபாடு தெரிகிறது. அப்போது வேதியலை விஞ்ஞானமாகப் பார்க்காமல், கலையாகவே பார்த்தனர். உலகின் முதல் வேதி விஞ்ஞானி பெண் தானாம். அடிக்க வராதீர்கள் நண்பா. அதுதான் உண்மை..! இதை நான் சொல்லவில்லை நண்பரே.. . வரலாறு கூறுகிறது. முதன் முதல் வேதியல் தொடர்பான,களிமண் பதிவுகளும், தற்போது கண்டுபிடித்த அந்தக் காலத்திய நறுமணத்தைல தயாரிப்பின் மிச்ச சொச்ச பாத்திரங்களும், பாட்டில்களும், சைப்ரஸ் தீவிலுள்ள பைய்ர்கோஸ் மாவ்ரோராகி (Pyrgos Mavroraki)என்ற இடத்தில் கிடைத்துள்ளன. சைப்ரஸ் தீவு எகிப்துக்கு வடக்கில் மத்திய தரைக்கடலில் காண்ப்படும் பெரிய தீவாகும். இங்கே துவக்ககால மனித செயல்பாடுகளின் பொருட்கள், கி.மு பத்தாயிரம் ஆண்டுகால தொல்பொருட்களாக, நன்றாக பதப்படுத்தப்பட்டு பாதுகாப்புடன் இருந்தன. அவை புதிய கற்கால மனிதர்களின் சொத்துக்கள் எனறும் சொல்லப்படுகிறது. அவை அனைத்துக்கும் சொந்தக்காரர் ஒரு பெண் என்றும் தெரிய வருகிறது. எனவே முதல் வேதியியலாளர் ஒரு பெண் என்றும் அந்த தகவல்கள் அறுதியிட்டுக் கூறுகின்றன.அந்தப் பெண் வேதியியலாளர், ஏராளமான பொருள்களைக் கொண்டு, உடலில் தடவும் பலவகையான நறுமணத் தைலத்தை தயாரித்தாராம். அவர் பெயர் தப்புட்டி பெலாட்டிகல்லிம்( Thapputi -Belatikallim ) என்பதாகும். வரலாற்றைத் திருப்பிப் போட்ட பெண் தப்புட்டி.

உலகப் பதிவுகளில் முதன்மையான பெண்கள்..!

சரித்திரப் பதிவுகளின் துவக்கத்திலிருந்தே, பெண்கள் கலாச்சாரத்திலும், நாகரிக செயல்பாடுகளிலும் ஈடுபட்டு வந்துள்ளனர் என்பது தெரிய வருகிறது. அதிலும் தப்புட்டி, வேதியல் உலகை மக்களுக்கு மிகத் தெளிவாக தெரிவித்துள்ளார். அவை எதிர்கால மக்களுக்குப் பயன்படும் படியாகவும் தனது தயாரிப்புகள், அது தொடர்பான மூலப் பொருட்கள்

போன்றவற்றைத் தெளிவாக, பச்சைக் களிமண் பலகைகளில், கியூனிபாரம் எழுத்துக்களில் பதித்து வைத்துள்ளார். அவரை நாம் கட்டாயம் பாராட்டத்தான் வேண்டும்.

. கியூனிபாரத்தில்.. தப்புட்டியும்.. தைலம் தயாரிப்பும்..!

பச்சைக் களிமண் பலகையில் கியூனிபாரம் பதிவுகள்

சைப்ரஸ் தீவிலுள்ள பைய்ர்கோஸ் மாவ்ரோராகி (Pyrgos Mavroraki

தப்புட்டி பெலாட்டிகல்லிமின் நறுமணத்தயாரிப்புகள் பற்றி

ஏராளமான தகவல்கள் கியூனிபாரம் பச்சைக்களிமண் பதிவாக பலகைகளில் உள்ளன..! இதுதான் உலகின் மிக,மிகப் பழமையான பதிவு என்றும் கூறப்படுகிறது.இந்த பதிவு மனித நாகரிகத்தின் தொட்டில் எனப்பட்ட மெசபடோமியாவில் இருந்திருக்கிறது. இந்த இடம் தற்போதைய ஈராக்கைச் சேர்ந்ததுதான். தப்புட்டிதான் உலகின் முதல் வேதியியலாளர் என்றும் உலக மக்களால் பல தடயங்கள் மூலமாக பரவலாக ஒப்புக்கொள்ளப்பட்டும் வருகிறது.வினோதமான, வித்தியாசமான, அற்புதமான பெண்களைப் பற்றி எல்லாம் வரலாறு பதிவு செய்து வைத்துள்ளது. அந்த முதன்மைப் பெண்களில் தப்புட்டியும் ஒருவர். மிகப் பழமையான நறுமணத்தைலம் தயாரித்த இடத்தை சைப்ரசில், 2005 ம் ஆண்டு,தோண்டி எடுத்தனர்.இந்த றுமணத்தைலம் தயாரிப்பு இடம் சுமார் 4,000 ௦௦௦ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் இதுதான் தப்புட்டியின் நறுமணத் தைலத்தொழிற்சாலை என்றும் சொல்லப்படுகிறது.

நறுமணத்தைலத் தொழிற்சாலை வளாகமும்.. மூலப்பொருள்களும்..!

நறுமணத்தைல குடுவைகள்.. 4,000 ஆண்டு வயது

தப்புட்டி வாழ்ந்த காலம் வெண்கல காலத்தின் துவக்கமாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.அந்த தைலத் தொழிற்சாலையின் பரப்பு 35,000 சதுர அடி/4,000 சதுர மீட்டர்.. இவ்..ளோ.. பெரிய தொழிற்சாலையாக இருந்தால், அங்கு எவ்வளவு நறுமணத்தைலம் தயாரித்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பாருங்கள்.இப்படிப்பட்ட தயாரிப்புகள் எல்லாம் வெண்கலக் காலத்தில் நாம் கேள்விப்படாதவை. அந்த தொழிற்சாலை வளாகத்தில் 60 க்கும் மேற்பட்ட தைலம் காய்ச்சி வடிக்கும் கலங்கள், மூலிகை மற்றும் வேர்களைக் கலக்கும் பாத்திரங்கள், வடிகட்டும் புனல்கள், ஏராளமான நறுமணத் தைல பாட்டில்கள், அவைகளை நிரப்பத் தேவையான உபகரணங்கள் போன்றவை அந்தப் பகுதியிலிருந்து கிடைத்துள்ளன. மேலும் ஆதிகால மக்கள், செடிகள், பாதாம், மல்லி,மைர்டில் (Myrrtl) என்ற நறுமணச் செடி, குவிந்த காய் உடைய செடியின் பிசின்(Conifer resin) ,எலுமிச்சை மற்றும் கிச்சிலி போன்ற வாசனைப் பொருட்கள் பயன்படுத்தியே நறுமணத்தைலம் தயாரித்தனர். அப்போது மலர்களைப் பயன்படுத்தவில்லை.

தப்புட்டி பெலாட்டிகல்லிமின்.. திறமை..!

தைலக் குப்பி

தப்புட்டி ஒரு நறுமணத் தைலத் தயாரிப்பாளர் மட்டுமல்ல அவர். அந்த மாளிகையின் மேற்பார்வையாளரும் கூட. அவர் அவரது சமகாலத்தவர்களை எல்லாம் விட திறமைசாலியாக முதன்மையாகத் திகழ்ந்தவர். அதானால்தான் உலகின் முதல் வேதியியலாளர் என்று பேசப்பட்டு பாராட்டவும்படுகிறார். தப்புட்டி தைலத் தொழிற்சாலையில் மிகவும் கடினமான பணிகளை எல்லாம் செய்திருக்கிறார். கியூனிபாரம் பதிவுகளில், தான் தயாரித்த நறுமணத் தைலங்களில் உள்ள மூலப் பொருட்கள் மற்றும் அவற்றைத் தயாரிக்கும் முறை பற்றியும் தெளிவாக எழுதி வைத்துள்ளார். அவற்றைப் பற்றிப் படிக்கும்போது அவர் தயாரித்த பொருட்கள் மிகவும் அரிதானவை என்றும் தெரிய வருகிறது.

ஆடம்பரம்,பகட்டை..பட்டயம் போட்ட.. நறுமணத்தைலம்..!

கியூனிபாரம் பலகைகள்

நாகரிகத்தின் துவக்க காலத்திலிருந்தே மனித இனம் நறுமணத் தைலத்தை நன்மணம் பரப்ப ,உருவாக்கி உலவ விட்டது என்பதுதான் உண்மை. .அந்த தைலத்திலிருந்து மிதந்து வரும் மென்மையான மணம் என்பது ஒருவரின் செல்வநிலையைத் தம்பட்டம் அடிப்பதாகவும், ஆடம்பரத்தை அறிவிப்பதாகவும்.அவர்களின் சலவைகல் அரங்குகளிலும் தூள் பரத்தியது.அந்த வாசனை..! அரச வம்சத்தினரும்,செல்வச்சீமான்களும், சீமாட்டிகளும்,தான் நறுமணத்தைலத்தில் குளித்து எழுந்தனர். பாமரர்களுக்கு அந்த வாய்ப்பு ஏது? அரசர்கள், செல்வந்தர்கள் பயன்படுத்திய நறுமணத் தைலங்கள் உடலின் மேல் தடவுவதாகவும்/தெளிப்பதாகவும், அல்லது தலையில் தடவுவதாகவும் இருந்தன. இந்த நறுமணத் தைலங்களை எல்லாம் காய்ச்சி வடித்தல் முறையில் தயாரித்ததாக தப்புட்டி அதன் குறிப்பில் எழுதி வைத்துள்ளார்.

காய்ச்சி வடித்தல். தப்புட்டியின் கண்டுபிடிப்பு..!

4,000 ஆண்டு கடந்த தப்புட்டியின் காய்ச்சி வடித்தல் கலன்

சில நறுமண மூலிகைகள், செடிகள் இவற்றின் மலர்கள், இலைகள் மற்றும் வேர்களைப் போட்டு காய்ச்சி, பின்னர் காய்ச்சி வடித்தல் முறையைப் பயன்படுத்தி தயாரித்துள்ளார். அதனால்தான் நறுமணத் தைலங்கள் தெளிவாக சுத்தமாக பளிச் சென்று உள்ளன. தப்புட்டி, காசித்தும்பை (balsam), கோரைப்புல் (Cyperus) மற்றும் வெள்ளைப்போளம் (myrrh) போன்றவைகளின் மலர்கள், வேர்கள் மற்றும் இலைகள் போன்றவற்றைப் போட்டு தப்புட்டி பெலாட்டிகல்லிம் காய்ச்சி வடிகட்டி, அந்த முறையிலேயே நறுமணத் தைலம் தயாரித்ததை பதிவுகள் தெரிவிக்கின்றன. அவர் நிறைய முறை அதில் தண்ணீர் ஊற்றி ஊற்றி பின்னர் அதன் ஆவி மூலம் வடிகட்டியே தைலம் தயாரித்தார்.இதுதான் நறுமணத்தைலம் தயாரிப்பு பற்றிய மிகப் பழமையான தகவல். அவர் நின்னு(Ninu) என்பருடன் இணைந்து ஆராய்ச்சியும் செய்தார். காய்ச்சி வடித்தல் முறையை முதலில் உலகுக்குச் சொன்னவரும் தப்புட்டியே..!

முதல் பதிவான நறுமணத்தைலங்கள்..!

பைய்ர்ட்கோஸ் நறுமணத்தைல தொழிற்சாலை வளாகம்

முதன் முதல் நறுமணத்தைலம் எகிப்தில்தான் இருந்தது என்று சொல்லப்பட்டாலும், நமக்குக் கிடைத்துள்ள பதிவுகளின் படி, மிகப் பெரிய தொழிற்சாலையான பைய்ர்கோசின் (Pyrgos) நறுமணத் தொழிற்சாலைதான் 4,000 வயதானது.அதில் கிடைத்துள்ள நறுமணப் பாட்டில்களில் லேவேண்டர், ரோஸ்மேரி, பைன் மற்றும் மல்லி மணமுடைய நறுமணத் தைலங்கள் கிடைத்துள்ள்ளன. அவை அனைத்தும் ஆல்கஹால் கண்டுபிடிக்கும் முன்பே, காய்ச்சி வடித்தல் முறையில் தயாரிக்கப்பட்டவையாகும். ஆல்கஹாலின் வயது 3,000௦௦ தான். பின்னாளில் வந்த அவிசென்னாதான் ஆல்கஹால் கலந்து இந்த முறையைப் பயன்படுத்தி நறுமணத்தைலம் தயாரித்தார்.

பேராசிரியை பெல்ஜியார்னோ &குழுவின் கண்டுபிடிப்பு:

மேலே சொல்லப்பட்ட கதையை நம் முன்னே வைப்பவர்கள் இத்தாலியின் தொல்லியல் துறையைச் சேர்ந்த தொல்லியல் விஞ்ஞானி பேராசிரியை மரிய ரோசரியோ பெல்ஜியார்னோவும், அவரது குழுவினரும்தான். தொல்லியல் துறை விஞ்ஞானி பேராசிரியை மரிய ரோசரியா பெல்ஜியோர்னோ (Maria Rosaria Belgiorno) மற்றும் அவரது குழுவினர்,.சைப்ரஸ் தீவிலுள்ள லிமஸ்ஸோல் மாவட்டத்தில் பைர்கோஸ்(Pyrgos) என்ற இடத்தில் தொல்லியல் இடம் ஒன்று 2005 ல் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் அந்த இடம் இத்தாலியின் தேசிய ஆராய்ச்சிக் குழுவினருடன் தோண்டி எடுக்கப்பட்டது.அதுதான் சைப்ரஸ் தீவில் பைய்ர்கோசிலுள்ள நறுமணத் தொழிற்சாலை. அந்த இடம் வெண்கலக் காலத்தின் துவக்கததைச் சேர்ந்தது என்று கண்டறியப்பட்டது. அந்த இடம் ஒரு தொழிற்சாலை வளாகமாக இருந்திருக்கிறது.மேலும் அங்கே ஒயின், நறுமணத்தைலம் மற்றும் துணிகளுக்கு சாயம் போடும் கருநீல வண்ணம் போன்றவை தயாரிக்கும் இடமாக இருந்திருக்க வேண்டும் என்றும் அறியப் பட்டுள்ளது. அவ்விடத்தில் மாளிகையின் மிச்ச சொச்சங்களும் இருந்தன.

4,000ஆண்டுகால நறுமணத்தைலம்.. தயாரிப்பு..!

பேராசிரியை மரிய ரோசரியோவும், அவரது குழுவினரும் மிகவும் கஷ்டப்பட்டு அந்த இடத்தை சேதாரமின்றி தோண்டி எடுத்தனர். அது மட்டுமல்ல. அந்த நறுமணத் தைலத் தொழிற்சாலையில் கிடைத்த 4 பாட்டில்களில் ஒட்டிக்கொண்டிருந்த நறுமணத் தைலத்தை வைத்துக் கொண்டு, அதிலிருந்து சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட நறுமணத் தைலத்தையும் தயாரித்து விட்டனர். அது தொடர்பாகவும், எப்படி அவற்றித் தயாரிப்பது என்பது பற்றியும் பேராசிரியை பெல்ஜியார்னோ ஒரு புத்தகம்மும் எழுதி உள்ளார். பேராசிரியை பெல்ஜியார்னோ ஒவ்வொரு நறுமணத்தைலத்தையும் தயாரிக்க 6 மாதம் ஆயிற்று. அவற்றை அந்த கியூனிபாரம் பலகையில் கூறியுள்ள படியேதான் தயாரித்தார்.

மிச்ச சொச்ச தைலமும்.. புது நாமகரணங்களும்..!

அது மட்டுமின்றி, அங்கே இருந்த பாத்திரங்களிலேயே அவற்றைத் தயாரித்தார். அவற்றிற்கு, அப்ரோடைட் (Afridite), எலினா (Elena), ஆர்ட்டிமிடிஸ் (Artemides) மற்றும் எரா (Era) என்றும் பெயர் சூட்டினார். அப்ரோடைட் தைலத்தில் ஆலிவ் எண்ணெய், லாரல், கொத்தமல்லி மற்றும் டர்பண்டைன் இணைந்து இருந்தன. ஆர்ட்டிமிடிஸில் பாதாம், நறுமணச் செடி மைர்ட்ல் (Myrrtl), பார்ஸ்லி (Parseley) மற்றும் டர்பண்டைன் இருந்தன. எராவில் ஆலிவ் எண்ணெய், ரோஸ்மரி (Rosemary), பச்சை சோம்பு மற்றும் லாவண்டர் இருந்தது.

பழமை போன்ற புதுமை தயாரிப்பு..!

பேராசிரியை பெல்ஜியார்னோ இந்த நறுமணத்தைலம் பற்றிச் சொல்லும் கருத்தாவது. “இப்படி ஒரு செய்முறை இந்த காலத்தில் வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் 4,000 ஆண்டுகளுக்கு முன்னால் என்பது கற்பனை செய்ய முடியாத, நினைத்துக் கூடப் பார்க்க முடியாத விஷயம் என்பதே” அவர் கருத்து. தப்புட்டி செய்த்தைவிட. அவரின் செய்முறையை கியூனிபாரம் பலகைகளிலிருந்து படித்து, அந்த முறையிலேயே, பழமைவாய்ந்த நறுமணத்தைலம் தயாரித்த பேராசிரியை பெல்ஜியார்னோயும் அவரது குழுவினரும் பெரும் பாராட்டுக்குரியவர்கள் ஆவார்.

காய்ச்சி வடித்தல்.. தப்புட்டியின் செய்முறை

எகிப்தில் அல்லித் தைலம் தயாரிப்பு

காய்ச்சி வடிக்கும் கலன்கள்

காய்கறி பாஸ்த்தா:

காய்கறி பாஸ்த்தா:

by Mohana Somasundram on Saturday, November 12, 2011 at 3:54pm

காய்கறி பாஸ்த்தா:

தேவையானவை:

  1. மடிப்பு குழல் பாஸ்த்தா / முறுக்கு பாஸ்த்தா /நூடுல்ஸ் ...1 /4 கிலோ
  2. பெல்லாரி..........................1
  3. காரட்...................................3
  4. பீன்ஸ்..................................10
  5. உருளை...............................2
  6. பட்டாணி.............................50 கிராம்
  7. இஞ்சி....................................1 இன்ச் நீளம்
  8. பூண்டு...................................10
  9. கறிவேப்பிலை....................கொஞ்சம்
  10. எண்ணெய்.........................50 மில்லி
  11. தேவைப்பட்டால் நெய்.வெண்ணெய்...2 தேக்கரண்டி
  12. உப்பு .....................................கொஞ்சம்

செய்முறை:

  • பெல்லாரியை நைசாக நறுக்கவும்.
  • காரட், பீன்ஸ், மற்றும் உருளைக் கிழங்கை கழுவவும்.
  • பின் அனைத்தையும், சுமார் 1 /2 இன்ச் நீளம் நறுக்கவும்.
  • பட்டாணியை தோல் உரிக்கவும்/வேகவைத்து எடுக்கவும்.
  • இஞ்சி பூண்டை தட்டி வைக்கவும்.
  • குக்கரில் பாஸ்த்தா/நூடுல்ஸ் போட்டு அது முழுகும் வரை நீர் ஊற்றவும்.
  • பின்னர் அதனை மூடி ஒரு சத்தம் வருவரை அடுப்பில் வைக்கவும்.
  • பின் உடனேயே அதிலுள்ள ஆவியை வெளியேற்றவும்.
  • வேறொரு குக்கரில் கொஞ்ச எண்ணெய் விட்டு அதில் நறுக்கிய வெங்காயம் + கொஞ்சம் உப்பு போட்டு வதக்கவும்.
  • பின் அதில் தட்டிய இஞ்சி பூண்டைப் போடவும்.
  • அதிலேயே அனைத்து காய்கறிகளையும் போட்டு வதக்கவும்.
  • பின் அதில் 4 தேக்கரண்டி நீர் விட்டு குக்கரை மூடி, ஒரு விசில் வந்ததும் இறக்கவும்.
  • இறக்கிய உடன், அதிலுள்ள ஆவியாய் வெளியேற்றி விடவும்.
  • பிறகு இதனை வெந்த பாஸ்த்தா மேல் கொட்டவும்.
  • அதிலேயே பாஸ்த்தா /நூடுல்ஸ் க்குள் ஒரு சுவை தரும் பொடி இருக்கும்.
  • அதனையும் பாஸ்த்தா மேல் போட்டு, கறிவேப்பிலை நறுக்கிப் போட்டு,அடுப்பில் வைத்து, கொஞ்சம் நெய்/வெண்ணெய் விட்டு கிளறி விடவும்.
  • 2 நிமிடத்தில் அடுப்பிலிருந்து பாத்திரம்/குக்கரை இறக்கவும்.

நண்பா இதனை சாப்பிட்டீர்களென்றால் சுவை தூள் டக்கராய் இருக்கும். நாக்கு மீண்டும் காய்கறி பாச்த்தாவைக் கேட்கும். இதன் துணைக்கு தக்காளி சாஸ் சூப்பராய் இருக்கும். சும்மாவும் சாப்பிடலாம். மடிப்புக் குழல் பாஸ்த்தா அப்படியே குடல் கறி போல இருக்கும். இன்று எங்கள் வீட்டில் பாஸ்த்தா + நூடுல்ஸ் கலந்து தயாரித்தோம்! சும்மா கலக்கலாய் இருந்தது. ..! ஒரு வெட்டு வெட்டிவிட்டோம் எல்லோரும். நீங்கள் வருகிறீர்களா..அல்லது இதனை செய்து பார்க்கிறீர்களா..! முயற்சி செய்யவும்..

Wednesday, September 14, 2011

உலக ஓசோன் தினம்.. செப்டம்பர்..16..!

உலக ஓசோன் தினம்.. செப்டம்பர்..16..!

நம் பூமிப் பந்தை ஒரு வாயுப்போர்வை அலுங்காமல் குலுங்காமல் அப்படியே அலாக்காக,அற்புதமாக மூடி வைத்திருக்கிறது.அதுதான் வளிமண்டலம். வளிமண்டலம் என்பது பல்வேறு வாயுக்களின் கலவையே. இந்த வாயு மண்டலக் கலவையை , நம் புவியின் ஈர்ப்பு சக்திதான் வளிமண்டலம் எங்கும் விரிந்து பரந்து.பறந்து,பறந்து ஓடிப்போகாமல் இழுத்து பத்திரமாய் வைத்திருக்கிறது.இந்த வளிமண்டலம் இல்லாவிட்டால், இந்த உலகில் உயிரினங்களே வாழ முடியாது. நம் பூமி வெப்பத்தில் பொரிந்து போகாமல் பாதுகாப்பாக இருப்பதும் இந்த வளிமண்டலத்தால்தான். நமது தாயகமான சூரியனிடமிருந்து வரும் புறஊதாககதிர்களை வளிமண்டலம் உட்கிரகிக்கிறது;இதனால் வெப்பத்தை தன்னிடம் தக்க வைத்து, புவியின் மேற்பரப்பை மிதமாய், உயிரினங்கள் வாழும் தன்மையதாய் சூடாக்குகிறது. இதன் மூலம் வெப்ப நிலை உயர்வையும் இது கட்டுப்படுத்துகிறது. பகல் இரவு வெப்பநிலையும் சீராக்கப்படுகிறது.

வளிமண்டலத்தில் உள்ள வாயுக்களில் அதிகம் இருப்பது நைட்டிரஜன், ஆக்சிஜன்,ஆர்கான் மற்றும் கரியுமில வாயு ஆகியவையே. மற்றவைகள் மிகக் குறைவாகவே உள்ளன. நைட்டிரஜன் 78 .4 %, ஆக்சிஜன் 20 .946 %; ஆர்கான் மற்றும் 0.934 %;கரியுமில வாயு 0..039 % இருக்கிறது. மற்ற வாயுக்கள் மிக மிகக் குறைந்த அளவே உள்ளன. நியான் 0.001818 %.,ஹீலியம் 0.000524 % ;மீத்தேன் .0000179 % ; கிரிப்டான் 0.000114 %; ஹைடிரஜன் 0.000055 %; நைட்ரஸ் ஆக்சைடு 0.00003 %;. கார்பன் மோனோ ஆக்ஸைடு 0.00001 %; சினோன் 0.000009 %; ஓசோன் 0.000007 % 0.௦ to 0.07 ppmv ( ௦ ௦ 0 to 7x10 -6 %); நைட்டிரஜன் ஆக்சைடு 0.000002 %; ஐயோடின் 0.000001 %; மிகக் குறைந்த அளவு அம்மோனியா மற்றும் நீராவி..குறைவாகவே உள்ளது. .

ஓசோன் அடுக்கு என்பது வளிமண்டலத்தின் அடுக்குகோளத்தைச் (Stratosphere) சுற்றி போர்த்தப்பட்டுள்ள ஒரு போர்வையாகும்.இது பூமிலிருந்து சுமார் 15 கி.மீ உயரத்திலிருந்து, 15-30 கி.மீ தூரம் வரை , (சுமார் 20 கி.மீ கனத்தில்) பரவி இருக்கிறது.இந்த ௨௦ கி.மீ உயரம் பரவி உள்ள ஓசோனை அப்படியே அமுக்கி அடைத்தால் அதன் கனம் சுமார் 3 மீ.மீ அளவுதான் இருக்கும். ஆனால் இதன் கனம்என்பது பருவ நிலைக்கு ஏற்பவும், பூமியின் மேற்பரப்பில் துருவ மற்றும் நிலநடுக்கூட்டிலும் அளவு வேறுபடுகிறது. இந்த ஓசோன் தான் சூரியனிடமிருந்து வரும், உயிரிகளுக்கு கேடு விளைவிக்கும் புறஊதாக்கதிர்களை சுமார் 97%-99% வடிகட்டி விடுகிறது. எனவே நாம் அதன் தாக்குதலிருந்து தப்பித்து நிம்மதியாய் இருக்கிறோம்.

பொதுவாக, பூமியிலிருந்து மேலே செல்லச் செல்ல, காற்றின் அழுத்தமும், அடர்வும் குறைந்து கொண்டே வரும். ஆனால் வெப்பம் அப்படி இல்லை. பல இடங்களில் பல உயரத்தில் வெப்ப மாறுபாடு ஏராளமாக உள்ளது. பூமியின் வளிமண்டலம் வரிசையாக 5 அடுக்குகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது. பூமிக்கு அருகில் இருக்கும் அடுக்கு கனமாகவும், அதிக உயரத்தில் இருக்கும் அடுக்கு மிக மெலிதாகவும் இருக்கிறது. மேலே உள்ள அடுக்கு மட்டும் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக வான்வெளியுடன் இரண்டறக் கலந்துவிடுகிறது. பூமியின் முதல் அடுக்கான அடிவளி மண்டலம் (Troposphere) தரைக்கு மேலே, சுமார் 19 கி.மீ உயரம் வரை பரவி உள்ளது ஆனால் இது துருவத்தில் இதன் கனம் 9 கி.மீ ஆகவும், நில நடுக்கோட்டுப் பகுதியில் 17-19 கி.மீ உயரம் உள்ளதாகவும் உள்ளது. இந்த பகுதியில்தான் நமது சீதோஷ்ணநிலை மாறுபாடுகள் காணப்படுகின்றன. பூமியின் தரையை ஒட்டிய பகுதிகள் வெப்பமாகவும், உயரே செல்ல, செல்ல வெப்பம் குறைவாகவும் உள்ளது. இதற்கு அடுத்த இரண்டாவது அடுக்கு மீவளி/அடுக்கு மண்டலம்(Stratosphere).இதற்கும் அடிவளி மண்டலத்திற்கும் இடையில் ட்ரோபோபாஸ்/ சேணிடை/சிற்றிடை அடுக்கு உள்ளது.(Trophopause). இது ட்ரோபாபாஸிலிருந்து சுமார் 51 கி.மீ உயரம் வரை நீண்டிருக்கிறது.பெரும்பாலான விமானங்கள் பறப்பது இந்த பகுதியில்தான். ஆனால் இங்கே.. உயரே செல்லச் செல்ல வெப்பம் அதிகரித்துக்கொண்டே போகும். ஏனெனில், இதன் அடிப்பகுதியில் உள்ள ஓசோன் அடுக்கு வெப்பத்தை அப்படியே உள்வாங்கிக் கொள்கிறது. ட்ரோபோபாஸின் அருகில் வெப்பம் -60 டிகிரியாக இருக்கும்.ஆனால் மீவளி மண்டலத்தின் மேல் பகுதியில் வெப்பம் அதிகமாக இருக்கும். இதற்கு மேலே, மீவளி பாஸ்(Stratopause ) உள்ளது. இது மூன்றாம் அடுக்கான இடை/நடு மண்டலம் (Mesosphere) 51 -55 கி.மீ வரை பரவி கிடக்கிறது. இங்கே காற்றின் அழுத்தம் கடல் மட்டத்திலிருந்து 1 /1000 மடங்காகும். இங்கேதான் விண்கற்களும், பாறைத் துண்டுகளும் எரிகின்றன. அடுத்த 4 வது அடுக்கு வெப்பமண்டலம்(Thermosphere). இங்கே வெப்பம் 1,000டிகிரி வரை இருக்கும். இது 100 -650 கி.மீ உய்ரம் வரை பரவி இருக்கிறது. வானின் அரோரா ஒளி உருவாவதும், விண்வெளி ஓடங்கள் பறப்பதும் இப்பகுதியில்தான்.சர்வதேச விண்வெளி நிலையங்கள் இங்கேதான், 320 -380 கி.மீ உயரத்தில் இருக்கின்றன. 5வது அடுக்கான வெளிமண்டலம் (Exosphere) உள்ளது. இது 650 -10,000,௦௦௦ கி.மீ வரை இருக்கிறது.இதுதான் பூமியின் வளி மண்டலத்தின் கடைசிப்பகுதி. இதற்குப் பின் இப்பகுதி வான்வெளியுடன் இரண்டறக்கலந்து விடுகிறது. இங்கே ஹீலியமும், ஹைடிரஜனும் காணப்படுகிறது.ஆனால் இப்பகுதி மிக மிக மெலிதாக உள்ளது.

ஓசோன் Ozone) என்பது மூன்று ஆக்சிஜன் அணுக்களின் இணைப்பு.இரண்டு ஆக்சிஜன் அணுக்கள் சேர்ந்தது நாம் சுவாசிக்கும் ஆக்சிஜன் வாயு. இது நிலையானது. ஆனால் ஓசோன் வாயுவின் இணைப்பு நிலையற்றது. உலகம் உருவான போது ஆக்சிஜன் இல்லை.ஆக்சிஜன் தாவரங்கள் உருவான பின்புதான் உருவானது. அப்போது 1 ,500 ,000,௦௦௦000, ஆண்டுகளுக்கு முன் இருந்த உயிரிகள் ஆக்சிஜனின்றி, ஹைடிரஜனை வெளியேற்றி உயிர் வாழ்ந்தன.உலகம் முழுவதும் குளோரோபில் உள்ள சயனோ பாக்டீரியா என்ற ஆல்கா (240 கோடி ஆண்டுகளுக்கு முன் )பரவலாகி, ஒளிச் சேர்க்கையின் உபரிப்பொருளாக ஆக்சிஜனை வெளிவிட்டது. அதனால் வளிமண்டலத்தின் ஆக்சிஜன் அளவும் பெருகியது. ஒரு கால கட்டத்தில் புவியில் தாவரங்களின் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது. சயனோ பாக்டீரியா ஆக்சிஜன் வாயுவை உருவாக்கவில்லை என்றால்,மீவளி மண்டலத்தின் ஓசோன் அடுக்கு உண்டாகியே இருக்காது.

ஓசோன் வாயு இருபக்கமும் பதப்படுத்தப்பட்ட கூரான கத்திக்கு இணையானது. ஓசோன் பூமிக்கு அருகில் இருக்கும்போது, அதனை நாம் சுவாசித்தால் நமக்கு தீங்கு விளைவிக்கும்.அரித்துவிடும். ஆனால் இது மீவளி மண்டலத்தின் அடிப்பகுதியில் அடர்வாக இருக்கும்போது, இது சூரியனிடமிருந்து வரும் உயிரிகளுக்கு கெடுதல் செய்யும் புறஊதாக் கதிர்களை வடிகட்டி விடுகிறது. வளிமண்டலத்தில் ஓசோன் இல்லை என்றால் புறஊதாக்கதிர்களிடம் இருந்து நம்மைக் காக்க ஓர் சிறப்பு உடையை/காப்புக் கவசத்தை நாம் அணிய வேண்டியிருக்கும். ஏனெனில் புறஊதாக் கதிர்கள் நம்மைத் தாக்கி தோல் புற்று நோயையும், கண் நோய்களையும் உண்டாக்கி, நம்மை சிதைத்து விடும்.

வளிமண்டலத்திலுள்ள ஓசோன் அடுக்கில் 90 % இயற்கையானது. நமக்கு நன்மை விளைவிப்பதுதும் கூட . ஆனால் மீதியுள்ள 10% கெடுதி விளைவிக்கும் ஓசோன்.இது சிற்றுந்து, பேருந்து மூலம் வெளியாகும் புகையிலிருந்து உருவாவதாகும். ஒளிவேதியியல் இயந்திர இயக்கத்தின் (photo chemistry mechanics mechanism)மூலம் ஓசோன் அடுக்கு உருவாகும் வித்தையை பிரிட்டிஷ் இயற்பியலாளர் சிட்னி சாப்மீன் 1930 களில் கண்டுபிடித்தார். மீவளிமண்டலத்தில் இருக்கும் ஆக்சிஜன் வாயுவிலுள்ள ஆக்சிஜன் அணுக்களில் புறஊதாக்கதிர்கள் தாக்கி, தனித் தனி ஆக்சிஜன் அணுக்களாக உடைக்கிறது. உடைக்க முடியாத ஆக்சிஜன் வாயுவுடன் ஒற்றை ஆக்சிஜன் அணு இணைந்து, அங்கு மூன்று ஆக்சிஜன் அணுக்கள் உள்ள ஓசோனாக உருவாகிறது. புறஊதாக்கதிர் மீண்டும் மீண்டும் ஓசோனைத் தாக்கி இதனை, ஆக்சிஜன் வாயுவாகவும், ஆக்சிஜன் அணுக்களாகவும் மாற்றி விடுகிறது. பின்னர் இவை நிறைய சேர்ந்த பின் இதுவே ஓசோன் அடுக்காகிறது.இது ஒரு தொடர் வினையாக நிகழ்ந்து, ஓசோன்-ஆக்சிஜன் சுழற்சி(Ozone-oxygen cycle) நடக்கிறது.

ஓசோன் சுவிஸ் வேதியலாளர் கிறிஸ்டியன் பிரட்ரிச் ச்கொன்பெயின் என்பவர்தான் ஓசோன் இருப்பதைக் கண்டுபிடித்தார். காற்றிலுள்ள 10,௦௦௦000 மூலக்கூறுகளுக்கு ,10 அல்லது அதற்கும் குறைவான ஓசோன் மூலக்கூறுகள் எனற அளவிலேயே உள்ளன.1980 களில் ஓசோன் அடுக்கில் உலகின் வடபகுதியான அண்டார்டிக்காவில், வசந்தகாலத்தில்(Spring season ) ஒரு ஓட்டை இருந்தது கண்டறியப்பட்டது.ஓட்டை என்றால் ஓசோனில் யாரும் ஊசியை எடுத்து குத்தி ஓட்டை போடவில்லை. ஓசோனில் ஏற்பட்ட இந்த ஓட்டையானது மனிதர்களாலும், மனித செயல்பாடுகளால் வெளிப்படும் குளோரோபுளூரோ கார்பன்களாலும்(Chloroflurocarbons ) தான் ஓசோன் அடுக்கில் ஓட்டை உண்டாகி இருக்கிறது என்று அறிவியல் அறிஞர்களால் அறியப்பட்டுள்ளது. பொதுவாக ஓசோன் அடுக்கு, கட்டுறா அயனிகளால் தான் பாதிக்கப்படுகிறது. நைட்டிரிக் ஆக்சைடு, நைட்ரஸ் ஆக்சைடு, ஹைடிராக்சைல், குளோரின் மற்றும் புரோமின் போன்றவைதான் இந்த உடைப்புப் பணியைச் செய்கின்றன.

அண்டார்டிக்கில் உள்ள ஓசோன் ஓட்டையை 1985 ல், பிரிட்டிஷ் விஞ்ஞானி களாலான ஜோசப் பார்மான், பிரியன் கார்டினர் மற்றும் ஜோனாதன் ஷான்க்ளின் போன்றோர் அண்டார்க்டிக் பகுதி கணக்கெடுப்பின் போது கண்டறிந்தனர். அந்த பகுதியிலுள்ள ஓசோன் அடுக்கில் ஓசோனின் அளவு குறைந்திருந்ததே, அதன் கனம் மெலிதானதாய் இருந்ததே ஓசோனில் ஓட்டை என்று சொல்லப்படுகிறது.ஓசோனின் ஓட்டை என்பது பத்தாண்டுகளுக்கு 4 % என்ற அளவில் சீராகக் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வர வர ஒவ்வொரு ஆண்டும் இந்த ஓட்டையின் அளவு அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த ஆண்டு வசந்தத்தின்,போது ஓசோன் ஓட்டையின் அளவு ஆகஸ்ட் 2011 ல் 40 % இருந்ததாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

மனிதனால் வெளியிடப்படும் ஓசோன் பாதிப்பு பொருள்கள்,

சக்தி மிக்க பசுமையகப் பொருட்களாக (potent greenhouse gases) செயல்படுகின்றன. அவற்றில் சில பொருள்கள் கரியுமில வாயுவைவிட 1,400 மடங்கு வீரியம் மிக்கவை. எனவே இவையும் சீதோஷ்ண நிலை மாற்றத்திற்கும், வெப்ப மயமாதலுக்கும் மிகவும் துணை போகின்றன

. © Alamy

உலக ஐக்கிய நாடுகள் அமைப்பு, ஓசோன் அடுக்கின் முக்கியத்துவத்தை எண்ணி, அதனைப் பாதுகாக்க ஒரு நாளைத் தேர்ந்தெடுத்தனர். அதுதான் செப்டம்பர் 16 . அதனை உலக ஓசோன் தினமாக அறிவித்துள்ளனர்.1987 ல் உலகின் 24 நாடுகள் மாண்ட்ரியலில் ஒன்றிணைந்து இனிமேலுக்காவது ஓசோனை பாதுகாக்க வேண்டும் என்ற முடிவெடுத்து அனைத்து நாடுகளும் கையெழுத்து போட்டன. இந்த தினம் என்பது மாண்ட்ரியல் புரோட்டோகாலில், ஓசோன் அடுக்கில் ஓசோன் அளவு குறைவது தொடர்பாய் 1987 ல் கையெழுத்திட்ட தினம்தான்.

ஐக்கிய நாடுகள் பொதுச் சபை 1994 லிலிருந்து செப்டம்பர் 16 ஐ உலக ஓசோன் தினமாக அறிவித்து அனுசரிக்க அழைப்பு விடுத்தது. அனைத்து நாடுகளும் ஓசோன் பாதுகாப்புக்காக ஒன்றிணைய வேண்டும் என்பதே இதன் குறிக்கோள். ஓசோன் படலம் என்பது பூமியின் சூரிய தடுப்புத் திரைதான் ..! இதனைப் பாதுகாத்தால் தான், உயிர்களின் நீடித்த வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் உதவிகரமாக இருக்கும். இதற்காக, மூன்று P க்களை முன் வைக்கின்றனர்.

1 . Planet : புவிக்கோள்.. பெரும்பாலான தாவரங்கள் புறஊதாக்கதிர் களிடமிருந்து இயற்கையிலேயே தங்களைப் பாதுகாக்கும் தன்மையைக் கொண்டுள்ளன. ஆனால் எப்போதும் அல்ல. எந்த பாதுகாப்பு கவசம் இல்லாத கடல், ஏரிகளில் புற ஊதாக்கதிர்கள் ஊடுருவிச் சென்று, குறைந்த ஆழத்தில் வாழும் மீன்கள் மற்றும் மிதவை உயிரிகளைப் பாதிக்கின்றன.

2 .People . மக்கள்;;அளவுக்கு அதிகமாக வெய்யிலில் இருப்பதனால், சூரியனிடமிருந்து வரும்,புறஊதாக்கதிர்கள் சூரிய எரிப்பு காயம் உண்டாக்குகிறது.; கண் பார்வையை பாதிக்கிறது. சூரிய ஒளியில் இருப்பது நீண்ட காலம் தொடர்ந்தால், தோல் புற்று நோய் வருகிறது. மேலும் புற ஊதாக்கதிர் தற்காப்புத் திறனுக்கும் தடை போடுகிறதாம்.

3 .Prosperity : வளங்கள்..ஓசோன் அடுக்கின் கணம் குறைவதால், மக்களுக்கும் புவிக்கொளுக்கும் பாதிப்பு உண்டுபன்னும்போது, அதன் தொடர் நடவடிக்கையாக ஏராளமான பொருளாதார இழப்பும் அதன் சங்கிலித் தொடர் நிகழ்வுகளும் உண்டாகின்றன.

மக்களுக்கு ஓசோன் படலத்தை பாதுகாக்கும் உணர்வை உண்டுபண்ண வேண்டியது மிகவும் முக்கியமாகும்.

  1. உலகில் வாழும் மக்கள் ஒவ்வொருவரும் ஓசோனை பாதிக்கும் பொருட்களை தவிர்பதையும், ஓசோன் பாதுகாப்பு நடக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
  2. ஓசோனைப்பாதுகாக்க எளிய நடைமுறைகளைக் கைக்கொண்டால் போதுமானது.
  3. இது தொடர்பான விழிப்புணர்வையும், தாக்கத்தையும் மக்கள் மனதில் உருவாக்க வேண்டியது மிகவும் அவசியம்.
  4. சூழல் தொடர்பான பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.
  5. சூழல் நட்பற்ற பொருட்களைத் தவிக்க வேண்டும்.
  6. எத்தனை நீண்ட பயணமும் கூட, முதல் அடி வைப்பதில்தான் துவங்குகிறது என்பதைக் கருத்தில் கொண்டு, நாம் செய்யும் சின்ன, சின்ன விஷயங்கள் கூட, சூழலைப் பாதுகாப்பதாகவும், ஓசோனைக் காப்பதாகவும் இருக்க வேண்டும்.
  7. காற்றுக் குமிழிகளை உடைக்கும் தெளிப்பான்களை (Sprayers ) தவிர்க்கவேண்டும் .
  8. குளோரோ புளூரோ கார்பன்(CFC) வெளியேற்றும் குளிர்சாதனப்பெட்டியின் பயன்பாட்டைக் குறைக்கவேண்டும்.
  9. ஹாலோஜென் வாயு உள்ள தீயணைப்பானுக்குப் பதிலாக வேறு பொருள் உள்ளதைப் பயன்படுத்த வேண்டும்.
  10. சபிக் காபுரையிட்ட பொருட்களை தவிர்க்க வேண்டும்.
  11. குளிர் சாதனா அறையை நன்றாக பராமரிக்க வேண்டும். இல்லையெனில் அதன் மூலம் வெளிவிடும் நிறைய CFC வளிமண்டலத்திற்குள் நுழையும்.
  12. சிர்ருந்தின் உறைபனிப் பெட்டியையும், குளிர் சாதனத்தையும் சரியாகப் பராமார்க்க வேண்டும். அவை சரியாக இயங்காவிட்டாலும் CFC வெளியேறி ஓசோன் படலத்தை தாக்கும்.
  13. புதிதாக குளிர் சாதனப் பெட்டி வாங்குவோர், CFC இல்லாத பெட்டியாகப் பார்த்து வாங்கவேண்டும்.
  14. புரோமோமீதேன்(bromomethane ) உள்ள பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது.
  15. காற்று மாசுபாடு பொருள்களையும் தவிர்க்கவும் .
  16. சிற்றுந்து,கம்ப்பிரஷர்(compressors) மற்றும் குளிர் சாதனப் பெட்டி பயன்படுத்துவதைக் குறைக்கவும்.
  17. இதற்கு மாற்றாக பேருந்து, மிதிவண்டி மற்றும் நடைப் பயணத்தை மேற்கொள்ளவும்.
  18. ஆற்றல் குறைவாக உள்ள மின் பல்புகளைப் பயன்படுத்தவும். இதனால் மாசுபாடு குறையும்.
  19. ஓசோன் அடுக்கின் ஓட்டையைக் குறைப்பது/ நிறுத்துவது என்பது, அதனைப் பாதிக்கும் பொருட்களைத தவிர்ப்பது மட்டும்தான், ஓசோன் படலம் பாதுகாப்புப் பணி மற்றும் உதவி செய்ய முடியும்.
  20. மாணவர்கள், தன்னார்வலர்கள், சூழலியலாளர்கள், சமூக விழிப்புணர்வு கொண்டவர்கள் மற்றும் அறிவு ஜீவிகள்,என உலகத்தின் மீதும், உயிரினங்கள் மீதும், சூழல் மீதும் அக்கறை கொண்ட அனைவரும் இதனை கடைப்பிடிக்க வேண்டும்: இதனை மக்களிடம் பரப்ப வேண்டும் .