Sunday, January 15, 2012

அறுவை சிகிச்சையின் கதையும், ..நாயகியும்..!

அறுவை சிகிச்சையின் கதையும், ..நாயகியும்..!

by Mohana Somasundram on Thursday, December 22, 2011 at 6:27pm

அறுவை சிகிச்சையின் கதையும், ..நாயகியும்..!

உனக்கும், எனக்கும், ஒரே வயது..!

நமது தாய்வீடான பூமி தோன்றி சுமார் 454 கோடி ஆண்டுகள் (4 .54 பில்லியன்) ஆகின்றன என அறிவியல் கிட்டததட்ட துல்லியமாய் கண்டுபிடித்து விட்டது.சந்திரனிலிருந்து எடுத்துவந்த கல்லிருந்தும்,பூமியில் இருக்கும கற்களின் வயதை அறியும் கதிர்வீச்சு சோதனை (radiometric age dating of meteorite material) மூலமும் இது அறியப்பட்டது. இதில் 1 % மாறுபாடு இருக்கலாம். அவ்வளவே..! மேற்கு ஆஸ்திரேலியாவின் ஜாக் மலையிலிருந்து கிடைத்த சிர்கான் படிகங்கள்தான் (Zircon crystals ) இதுவரை கிடைத்த படிகங்களிலேயே வயதானது. அதன் வயதுகுறைந்த பட்சம் 404 கோடி ஆண்டுகள் இருக்கலாம். சூரியனின் நிறை, மற்றும் பிரகாசம்,போன்றவற்றை மற்ற விண்மீன்களுடன் ஒப்பிடும்போது நமது சூரியனுக்கும், சூரிய குடும்பத்திற்கும் சுமார் 456 .7 கோடி ஆண்டுகள் ஆகின்றன என்பது தெரிய வருகிறது.. அதுமட்டுமல்ல இதன் மூலம் பூமியின் வயதும் 454 கோடி ஆண்டுகள் என்பதும , . பூமி சூரிய, சந்திரர்கள் சம வயதுக்காரர்கள் என்றும் கூட தெரிய வருகிறது.

உலகைப் புரட்டிய அறிவியல்..!

மனித இனம் உருவாவதற்கு முன் ஏராளமான மாற்றங்கள் பூமியிலும் உருவாகி இருக்கலாம்.அவையெல்லாம் வேதியல், இயற்பியல் மற்றும் உயிரியல் ரீதியான பரிணாம மாற்றங்களே..!ஆனால் மனித இனம் பரிணமித்த பின்தான பூமியின் முகவமைப்பே மிகவும் மாறியது. அதுவும் அறிவியல் இந்த மாற்றங்கல் மூலம் இந்தப் புவியைப் புரட்டிப் போட்டிருக்கிறது. விஞ்ஞானிகளின் பங்களிப்பும், ஆராய்ச்சியும் இன்றி அறிவியல் உலகம் ஓட்டப் பந்தயத்தில் சாம்பியனாகி இருக்க முடியாது.புவிக் கோளின் அறிவியல் பரிணாமம் மற்றும் தொழில் நுட்ப பரிணாமத்தில்ஆதிகாலம் தொட்டே காலம் காலமாக நிறைய மூளைகள் பங்களிப்பு செய்துள்ளன.

பதிவில்..ஆணும்..பெண்ணும் சமமா..?

தொழிற்புரட்சிக்குப் பின்புதான் அதி நவீன, அதிவேக அறிவியல் மாற்றங்கள் கடந்த ஒரு சில நூற்றாண்டுகளில்தான் ஏற்பட்டன. இந்த காலகட்டத்தில் ஏராளமான ஆண் அறிஞர்கள்தான் புகழ் பெற்றிருந்தனர்;அவர்களின் பெயர்களும் காலத்தால் பேசப்பட்டன. தொழிற்புரட்சியின் மாற்றங்களுக்கு பெண்களும் கூட முக்கியமான பங்களிப்பை செய்து தங்களின் இருப்பை நிலை நிறுத்தி இருக்கின்றனர். ஆதிகால பெண் விஞ்ஞானிகளில் மிகச் சிலரது பெயர்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. பலரது பெயர்கள் வசதியாக மறுக்கப்பட்டு,மறக்கப்பட்டு , மறைந்தும் போய்விட்டன.இடைக்காலத்தில் ஆணுக்கு இணையாக போட்டி போட்டு வரமுடியாயாத சமூகச் சூழலும், நிலவி வந்தது. இன்று நவீன காலத்தில் புகழ்பெற்ற பெண் விஞ்ஞானிகள் பலர் உள்ளனர். இருப்பினும் கூட இதுவரை நோபல் பரிசு பெற்ற பெண் விஞ்ஞானிகள் மிகக் மிகக் குறைவே.

இறந்த உடலை அறுக்க உதவிய..கிலியானி..!

அலெஸ்ஸாண்டிரா கிலியானியும்,மோண்டினோ டி லுஸ்ஸூ

இடைக்காலத்தில் வாழ்ந்தவர்களில் முக்கியமானவர் அலெஸ்ஸாண்டிரா கிலியானி (Alessandra Giliani , born in 1307 and died on 26 March 1326) எனபவர். இவர் ஓர் இத்தாலிய உடலியலாளார் மற்றும் மனித உடல் அறுப்பவர். . அலெஸ்ஸாண்டிரா கிலியானி கி.பி 1307 ல் இந்த உலகைக் காண வந்தார். ஆனால் பூமியைத் தரிசித்த மாதம் /தேதி எதுவெனத் தெளிவாகத் தெரியவில்லை. 19 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ்ந்தார். தனது 19 வது வயதில் உலகுக்கு பறை சாற்றும் வகையில் மிகக் கொடூரமான களத்தில் இந்த உலகை விட்டு மறைந்தார். உலகுக்கும், தான் வாழ்ந்த சமூகத்துக்கும் ஏராளமான சேவை செய்த மனித நேயம் மிக்க மனிதம் இவர் . இவர் அன்றைய கால கட்டத்தில் உடலியல் பற்றி படித்து,இறந்த உடலை அறுத்து அதிலிருந்து இரத்தம் வடித்தார். அத்துடன் அந்த உடலில் உள்ள இரத்த குழாய்களில் வேறு வண்ணம் உள்ள திரவம் ஏற்றினார். எதற்குத் தெரியுமா? அப்போதுதான் இரத்தக் குழாய்கள் உடலின் எந்தெந்த இடத்திற்கு செல்கின்றன என்பதைத் தெளிவாக அறிய முடியும் என்பதனால்தான். உலகில் இப்படி முதன் முதலில் இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்தை வடித்துவிட்டு, இப்படி வேறு வண்ண திரவம் ஏற்றியவரும். அதனைப்பற்றி பதிவு உள்ளவரும். அலெஸ்ஸாண்டிராகிலியானிதான். இதனால் மருத்துவர்கள் எளிதாக உடற்கூறு பற்றி அறியமுடியும் படிக்கவும் முடியும். இவ்வாறு கிலியானி மருத்துவர்களுக்குஉறுதுணையாகவும், பக்க பலமாகவும் இருந்தவர் .

உயிரைப் பயணம் வைத்து உதவி..!

இறந்த உடலை வெட்டி தயார்ப்படுத்துவது என்பது அந்த கால கட்டத்தில் மிகவும் உயிரைப் பயணம் வைக்கும் செயல். இறந்த உடலை அறுப்பது என்பது தெய்வ குற்றம்/மத துவேஷம் என்று பார்க்கப் பட்டது. அது மட்டுமா? தெய்வ நிந்தனை செய்பவருக்குத் தண்டனை தூக்கு/கொலை தண்டனை பொது இடத்தில் நிறைவேற்றப்பட்டது. கடவுள் உருவாக்கிய உடலை அறுப்பதும, அதன் உள்ளே என்ன இருக்கிறது என்று பார்ப்பதும் மதத் துரோகம்/கடவுள் மறுப்பு விஷயம் என்றும் போதிக்கபப்பட்டது . இப்படிப்பட்ட காலத்தில் இத்தாலியப் பெண்ணான அலெஸ்ஸாண்டிரா கிலியானி பொலோக்னா பல்கலைக்கழகத்தின் மருத்துவப் பேராசிரியரான மோண்டினோ டி லுஸ்ஸூக்கு உதவி செய்யும் உடலியலாளாராக், இறந்த உடலை அறுக்கும் உதவியாளராக இருந்தார் என்பதும், அதை பற்றிய பதிவும் வியப்பானதுதான்.இறந்த உடலிலிருந்து எளிதில் இரத்தம் வடிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். இரத்தம் வடிந்த குழாய்களுக்கு, உள்ளே போனால் உறைந்துவிடும் ஒரு புதிய வண்ணத்திரவத்தையும் கண்டுபிடித்து இரத்த குழாய்களுக்குள் செலுத்தினார். இதனால் மிகச் சிறிய இரத்தக் குழாய்களை எளிதில் கண்டுபிடித்துவிடமுடியும்.

கிலியானியின் சேவை:

அலெஸ்ஸாண்டிரா கிலியானி மிகக் குறைந்த காலமே வாழ்ந்தவர். மருத்துவர் மோண்டினோவின் உதவியாளர்களில் ஒருவரான ஓட்டோ ஆன்ஜெனியஸ் (Otto Angenius) என்பவர், கிலியானியானியின் சேவை பற்றி, குறிபிட்டு எழுதியுள்ளார்/ மிகவும் மரியாதைக்குரிய மனிதமாய் மக்களுக்கும் மருத்துவருக்கும் சேவை செய்த உயிராக மதிக்கப்படுகிறார். ஓட்டோ

கிலியானியின் காதலராகவும் இருக்கக் கூடும் என்று நம்பபடுகிறது. அவர்தான் ரோமில் உள்ள ஒரு தேவாலயத்தில் கிலியானியின் பணிகள் பற்றி விரிவாக எழுதி வெளியிட்டுள்ளார். ஆனால் 16ம் நூற்றாண்டின் வரலாற்றியலாளரான மைக்கேல் மெடிசி (Michele Medici) என்பவர் போலொக்னீஸின் உடற்கூறியல் பள்ளி பற்றி 1857 ல் எழுதி வைத்த குறிப்பில், கிலியானைப் பற்றியும், அவ்ரது சேவை மற்றும் திறமை பற்றியும் தெளிவாக எழுதி வைத்துள்ளார்.

பார்பார குயிக்;

கிலியானி பற்றி 18ம் நூற்றாண்டுக்கு முன் எந்தவித அந்தக்கால பதிவுகளின்படி எதுவௌம் நேரிடையாக கிடைக்கவில்லை. ஆனால் அவரைப்பற்றி பார்பாரா குயிக் எனபவர் எழுதியுள்ளார். அந்தக்கால நூலகர் மற்றும் ஒட்டோவின் எழுத்துக்களின் படி, கிலியானி பற்றிய யாவும் தேவாலய்த்தில் உள்ளன என்கின்றனர். குறிப்பில் கிலியானிமட்டுமல்ல அவரது குடும்பமே அழிக்கப்பட்டது என்றுதெரிகிறது.. கிலியானியின் அழிந்த் பொருட்கள் ஒரு தாழியில் தேவாலய சாரக்கட்டு இடத்தில் இருப்பதாகக் கூறுகின்றனர்..

அறிவியல்.புரட்சியின் காலக்கட்டம்..!

ஆண்ட்ரியாஸ் வேசலியஸ்உலகில் மருத்துவப் புரட்சி ஏற்பட்ட காலம் கி.பி 1400-1700 களே எனலாம்.1400 க்கு முற்பட்ட காலத்தில் அறிவியல் முன்னேற்றம் ஏதும் நிகழாததால், அது இருண்ட காலம் என்றே அழைக்கப்பட்டது.. பண்டைய கிரேக்க ரோமானியக் கருத்துகளிலிருந்து வேறுபட்டு புதிய கருத்துக்களை விதைத்த காலம் பதினாறாம் நூற்றாண்டுதான்.அப்போது பழங்கால பழக்கங்களிலிருந்து விடுபட்டு, தேவாலயங்களில் புதியமாற்றங்கள் உண்டாயின. அப்போது மருத்துவர் ஆண்ட்ரியாஸ் வேசலியஸ் (Andreas Vesalius (31 December 1514 – 15 October 1564) என்பவரும்,வில்லியம் ஹார்வேவில்லியம் ஹார்வே (William Harvey (1 April 1578 – 3 June 1657) ) என்பவரும் அன்றைய கால கட்ட மருத்துவத்தில் தொழில்நுட்ப முன்னேற்றங்களை நடத்திக் காண்பித்தனர். அது போது நடந்த தொழில்நுட்ப கருத்துக்கள் சமுதாயத்தில் உயர்குடியில் வாழ்வோருக்குக் கூட போய்ச் சேர பல நூறு ஆண்டுகள் ஆயின என்றும் சொல்லப்படுகிறது. உயர்குடி மக்களுக்கே இந்த நிலை என்றால் சமூகத்தின் நிலை, மற்ற குடிமக்களின் நிலையை நாம்தான் எண்ணிப்பார்க்க வேண்டும். அவர்கள் யாரும் அதன் பயனை, நலனை உணரவில்லை.இதனால் அப்போது இங்கிலாந்தின் இரண்டாம் சார்லஸ் அருகில் பல படித்த மருத்துவர்கள் இருந்தும் கூட தனது 65 வயதில், 1685 ம் ஆண்டு மாரடைப்பில் மண்டையைப் போட வேண்டியதாயிற்று. புதிய் சிகிச்சை முறையைக் கையாளாத காரணத்தால்.

கொலைதண்டனை பெற்ற,நவீன உடலியலின் தந்தை..!

16 ம நூற்றாண்டில் வாழ்ந்த ஆண்ட்ரியாஸ் வேசலியஸ்,போலோக்னா (Bologna) நகரில் ஒரு மருத்துவர்,மட்டுமல்ல, தத்துவமேதை,உடலியலாளரும் கூட. உலகின் கருத்தைக் கவரும் புத்தகமான, மனித உடலின் அமைப்பு என்பது பற்றி ஏழு மருத்துவ புத்தகக்கள் எழுதியவர்.ஆண்ட்ரியாஸ் வேசலியஸ் எழுதிய புத்தகத்தின் அட்டையிலேயே அவர் பொது

இடத்தில் அனைவரும் பார்க்கும்படியாக உடலை அறுக்கும்படியான படம் போடப்பட்டுள்ளது. இவர்தான் உலகில் முதலில் மனித உடலை அறுத்துப் பார்த்தவர் என்றும், அது தொடர்பான படங்கள் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் சொல்லப்படுகிறது, த்னது 23 வயதில் 1537 ல் மருத்துவர் பட்டம் பெற்றும் பல்கலைக் கழகத்தில் மருத்துவப் பேராசிரியராகப் பணி செய்தார். அதற்கு முன்பு புரூசெல் சென்று அங்கும் பணியாற்றினார். அவர் அங்கும் கூட தூக்குக் கயிற்றில் தொங்கிக் கொண்டிருந்த குற்றவாளிகளை அபகரித்துக் கொண்டு வந்து அந்த உடலை அறுத்து மாணவர்களுக்குக் காண்பித்தாராம்.இதுதான் இவருக்கு வினையைத் தேடித் தந்தது. .

தப்பித்தார்.. வெசலியஸ்..!

வேசலியஸூக்கு முன் வாழ்ந்த காலன் சொன்ன சில கருத்துக்கள் தவறானது என்று விளக்கிக் கூறியுள்ளார். கடவுள் மறுப்புக்கொள்கைகளைப் பரப்பினார். பின் பொது இடத்தில் பிணத்தை அறுத்துக்காண்பித்ததை ஒட்டி சில முரணபாடுகள் உண்டாயின. காலனைக் குறை சொன்னது, கடவுள் மறுப்பு, பொது இடத்தில் பிணம் அறுத்தது,மேலும் கல்லறையிலிருந்து பிணங்கள் திருடி அறுத்துப் பார்ப்பதற்காக அவருக்கு கிடைத்த பரிசு என்ன தெரியுமா? கொலை தண்டனை..! ஆனாலும் கூட வேசலியஸ் அரசு அதிகாரிகள் மூலம் சிபாரிசு செய்து, கொலைத்தண்டனைக்குப் பதிலாக வேசலியஸ் ஜெருசலம் சென்று வர ஆணையிட்டனர். ஜெரூசலம் சென்று திரும்பி வரும் வழியில் கடல் பயணத்தில் கப்பல் சேதமுற்று, கிரேக்கத்தீவில். வேசலியஸ் இறந்தார். அப்போது அவரின் வய்து 50. நவீன உடலியலின் தந்தை (Founder and father of modern anatomy) என்று அழைக்கப்படுவது ஆண்ட்ரியாஸ் வேசலியஸ்தான்.

“I will pass over the other arts in silence and direct my words for a while to that which is responsible for the health of mankind; certainly of all the arts that human genius has discovered, this is by far the most useful, indispensible, difficult, and laborious.”

(Andreas Vesalius, De Humani Corporus Fabrica)

ஏசு பிறக்க 600 ஆண்டுக்கு முன்..பிணம் அறுத்த.. அல்மெயான்..!

மனித உடலையும் அதன உறுப்புகளையும் அவை செயல்படும் விதம்பற்றியும் அறிந்து கொள்ள உடலை அறுத்துப்பார்த்தே ஆக வேண்டும்.அப்படி எல்லாம் செய்யாமல் இருந்திருந்தால் இன்று நம்மில் நிறைய பேர் உயிருடன் இருந்திருக்க முடியாது..மருத்துவ உலகம் முன்னேறி இருக்க முடியாது. உடலின் கண்டுபிடிப்பு (Discovery of Human body) அறுத்துப் பார்த்தல் மூலமே நடந்தது.ஆனால் பழங்கால ரோமானிய,கிரேக்க மதத்திலும், பல நாடுகளிலும் இருபதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை மனிதனை அறுப்பது என்ற வார்த்தையே சமூகக் குற்றமாகப் பார்க்கப்பட்டது.மதம் மற்றும் அனைத்து நாடுகளிலும் இறந்த உடலை வெட்டி உள் உறுப்புகளைப் பார்ப்பது தடை செய்யப்பட்டிருந்தது.ஆனாலும் கூட கி.மு. 6 ம் நூற்றாண்டிலேயே, கிரேக்க தத்துவவாதி..அல்மெயான் (Alcmaeon (535-? B.C.) என்பவர்தான் மனித உடலை முதன் முதல் அறுத்துப்பார்த்த முதல் மனிதர் என்றும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

2600 ஆண்டுகளுக்கு முன் இந்திய அறுவை சிகிச்சை நிபுணர்.

சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன் வட இந்தியாவில் கங்கைக்கரையின் வாரணாசியில் சுஷ்ருதா எனற அறுவை சிகிச்சை நிபுணர் வாழ்ந்த்தார்.இவ்ர் அவர் சிசேரியன், கண்பொறை, செயற்கை காலகள்,கால்,கை உடைதல்,சிறு நீரக பிரச்சினை, மூக்கின் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மற்றும் மூள அறுவை போன்ற அறுவை சிகிச்சைகளைச் செய்தவர் சுஷ்ருதா. மயக்க மருந்து பற்றி அப்போதே இந்தியாவில் அறிந்திருந்தனர். அவர் தன் வாழ்நாளில் சுமார் அறுவை சிகிச்சைகளைச் செய்தவர் சுஷ்ருதா.மேலும் அவரிடம் சுமார் 125 வகையான அறுவை சிகிச்சைக் கருவிகள் இருந்தன..சுஷ்ருதா சமிதா எனறு அறுவை சிகிச்சை புத்த்கத்தையும் எழுதி இருந்தார். இந்தியாவின் அறுவை சிகிச்சையின் பிதாமக்ன் சுஷ்ருதா தான்.

"Surgery is the first and the highest division of the healing art, pure in itself, perpetual in its applicability, a working product of heaven and sure of fame on earth" - Sushruta (400 B.C.)

அலெக்சாண்டிரியாவில் முதல் அனாடமி பள்ளி..!

“The first recorded dissection of the human body in the Western world took place in ancient Alexandria by Herophilus and Erasistratus. Though none of their writings have come down to us, other medical writers recorded what they had discovered.”

மூன்றாம் நூற்றாண்டின் இடைக்காலத்தில் இரண்டு பெரிய கிரேக்க பண்டிதர்கள் மற்றும் மருத்துவர்களான சால்டிடோனின் ஹிரோபிலஸ் மற்றும் அவரது இளவலான செரோஸைச் சேர்ந்த எராசிட்ரடஸ் இருவரும், பழங்காலத்தில் மனித பிணங்களை அறுத்து மருத்துவ பாடம் போதிப்பதில் முதலும் கடைசியுமான நிபுணர்களாக இருந்தனராம். அல்மெயானுக்குப் பின் கி. மு 4 ம் நூற்றாண்டில் வாழ்ந்த அலெக்சாண்டிரியாவின் சால்சிடான் நகரின் ஹீரோபிலஸ் (Herophilus of Chalcedon (335 B.C.-280 B.C) தான் உலகின் முதல் உடலியல் பள்ளி (School of Anatomy) நடத்தியவர். அவர்தான் அப்போதைய சிறந்த உடலியல் மருத்துவர் என்றும் போற்றப் படுகிறார். அலெக்சாண்டிரியா மருத்துவப் பள்ளியில் அவரது மாணவர்களுக்கு இறந்த மனித உடலை அறுத்துக் காண்பித்து மருத்துவ அறிவை அனுபவ பூர்வமாக பாடம் நடத்தினார். ஹீரோபிலஸ் உடலின் டியோடினம், கல்லீரல், கணையம், இரத்த ஓட்ட மண்டலம், கண்,மூளையின் திசு, இனப்பெருக்க உறுப்புகள் அனைத்தும் தெள்ளெனத் தெரிந்தவர் என்றும் பாராட்டப்படுகிறார்.முதன் முதலில் கட்டளை நரம்புகளுக்கும், உணர்ச்சி நரம்புகளுக்கும் உள்ள வேறுபாட்டை கண்டறிந்தவர் ஹீரோபிலஸ்தான். இவரிடம்தான் உலகின் முதல் பெண் மருத்துவர் என்று அழைக்கப்படும் அக்னோடைஸும் மருத்துவம் பயின்றார்.

குற்றவாளிகள்..உயிரோடு.. மருத்துவ உபகரணமாய்..!

ரோமானிய மருத்துவரும் தகவல்களைத் தொகுத்துத் தருபவருமாகிய ஆலூஸ் கார்னெலியஸ் செல்சஸ் (Aulus Cornelius Celsus A.D. 3-64) என்ற தகவல் தொகுப்பாளர் அலெக்சாண்டிரியாவில் முதல் நூற்றாண்டில் வாழ்ந்தவர். இவர் அலெக்சாண்டிரியா நகரில் குற்றவாளிகளின் உடம்பு,அரசன் தாலமி காலத்தில் (reigns of Ptolemy II and III (285-221 B.C. ) உயிரோடு வெட்டப்பட்டு, உடலின் உறுப்புகளைப் பற்றி அறியப்பட்டதாய் சொல்கிறார். அரசன் தாலமியே நேரில் இருந்து அறுக்கும் உடல்களை பார்த்தாராம். அந்த காலத்தில் உடலை வெட்டிப்பார்க்கும் பழக்கம் தடை செய்யப்பட்டிருந்தாலும் கூட , அது மன்னிக்க முடியாத குற்றம் என்று கருதப்பட்டாலும் கூட, ஆலூஸ் கார்னெலியஸ் செல்சஸூம் கூட மருத்துவப் படிப்புக்கு உடலை திறந்து பார்ப்பது அவசியம் என்று கூறியுள்ளார்.

மூட நம்பிக்கைகளில் மூழ்கிய உலகம்..!

மனித உடற்கூறு பற்றிய பதிவு சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே பாப்பிரஸ் மரப்பட்டையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க ௦மருத்துவர் காலன் (Greek physician Galen A.D. 130-201) கி.பி.180 ல் உடற்கூறு தொடர்பாக நிறைய எழுதி வெளியிட்டிருக்கிறார். அவர் உடலை அறுத்துப்பார்த்துதான் உடற்கூறு பற்றிய இரண்டு ரகசியங்களைக் கண்டுபிடித்து வெளியிட்டார். மீண்டும் கி.பி. 1163 ல், ரோமானிய தேவாலயம், மனித உடலை அறுத்துப் படிக்கும் பழக்கத்தை தடை செய்திருந்தது.இந்த கால கட்டத்தில் பிறந்து, படித்து, வாழ்ந்து, மக்களுக்கு பணியாற்றி அதன் மூலம் உயிர்ப்பலியானவர்தான்.இத்தாலிய அறுவை சிகிச்சை நிபுணர் மோண்டினோ டி லுஸ்ஸி, (Italian surgeon, Mondino de Luzzi). அவர் 1316 ல் மனிதனின் உடலை அறுப்பது தொடர்பான முதல் தொகுதி(1316 – Anathomia corporis humani) வெளியிட்டார். இந்த புத்தகம்தான் மனித உடல்கூறு தொடர்பான் முதல் புத்தகம். அப்போது மனித உடலின் உறுப்புகள் அறுத்துப்பார்ப்பதை மதங்கள் மூடநம்பிக்கையால் தடை செய்திருந்தன. ஆனாலும் கூட மனித் உடலியல் மற்றும் அறிவியல் ஆர்வ மேலீட்டால், இந்த புத்தகத்தை தயாரித்து வெளியிட்டார். மோண்டினோ. ஆனால் அவரது புத்தகம், Anathomia corporis humani 1478 ல் அவர் இறந்து 100 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வெளியிடப்பட்டது என்றால் அதிலுள்ள தகவல்களை எண்ணிப் பாருங்கள்..உடலியல் புத்தகம் எழுதிய ஆண்ட்ரியாஸ் வேசலியஸ் புத்தகம் எழுதி வெளியிட்டதிற்காகவும். மனித உடலைத் திருடி அறுத்துப் பார்த்த்திற்காகவும் தூக்கு தண்டனை வழங்கப்பட்டு,பின்னர் தப்பித்தார்.

ஓவியர்..லியானார்டோ..!

அதன்பின் லியானார்டோ டாவின்சி (Leonardo da Vinci 1452-1519), என்ற கணித மேதை,தத்துவமேதை,ஓவியர், வரைபடலாளர், பொறியியலாளர், உடற்கூறியலாளர் கி.பி. 1500 களில் மனித உடலின் தசை அமைப்புகளை படமாக தன் கையாலேயே வரைந்து புத்தகமாகத் தொகுத்துள்ளார். ஆனாலும் , அதற்கு. இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே..முதலில் உடல் உறுப்புகள் பற்றி துல்லியமான படங்களை அந்தக் காலத்தில் வரைந்த மனிதர் ஆண்ட்ரியாஸ் வேசலியஸ்தான்.

கல்லறை..வியாபாரம்..!

கி.பி 1565 களில் நிலைமை மாறியது. கத்தோலிக்கத்திலிருந்து மறுமலர்ச்சி ஏற்பட்டு பிராட்டஸ்டண்டுகளை விடுவித்தனர். இங்கிலாந்து மனித உடல்களை அறுக்க பயன்படுத்தலாம் என்று அனுமதி வழங்கியது. ஆராய்ச்சி நீண்டது.ஆனால் தேவைக்கேற்ப உடல்கள்தான் கிடைக்கவில்லை. களில் இங்கிலாந்து குற்றவாளிகள் மற்றும் அனாதையான உடல்களை அறுத்துப் பார்த்துப் பயன்படுத்தியது.ஆனால் ஒரு காலகட்டத்தில், தூக்குப்போட்டு தொங்குவதை விட மனித உடலை அறுத்துப் பார்ப்பது மோசமானது என மக்கள் கருதினர். எனவே, மககளின் கோபம்/ஆக்ரோஷம் அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு எதிராகத் திரும்பியது. கொதித்து எழும்பிய மக்கள் கும்பல், மருத்துவரிடமிருந்து கத்தி, கத்தரியைப் பிடுங்கி மனித உடல்களைக் காத்தது.இதனால் மருத்துவப் படிப்புக்கு இறந்த உடல் கிடைக்கவில்லை. எனவே கல்லறையிலிருந்து உடல திருடி விற்பது எனற புது வணிகம் புதுப்பொலிவுடன் உருவெடுத்து பரபரப்பானது. . புதிதாக அமரராகும் மனித உடல்களை கல்லறையிலிருந்து திருடும் கும்பலை அறுவை நடத்தும் மருத்துவர்கள் வாடகைக்கு அமர்த்தியும் இருந்தனர்.

களை கட்டிய பிண வியாபாரம்...!

நியூயார்க நகரில், குழந்தைகள் மருத்துவமனை சன்னல் வழியே.. மனித உடல்களை வெட்டிப்பார்க்கும் மருத்துவ மாணவர்களைப் பார்த்தது தொடர்பாக 1788ல் மூன்று நாட்கள் கலகம் வெடித்தது..கலகத்தின் மூலம் திகில் கதை போலவே கொஞ்சம் சுவாரசியமானதுதான்.இந்த குழந்தைகள் தங்களின் பெற்றோர்களிடம், அறுத்துக் கொண்டிருந்த இறந்த உடலைப் பார்த்ததைக் கூறினர். அப்படிக் கேட்ட பெற்றோர்களில் ஒருவர் மனைவியின் சவம் கல்லறையிலிருந்து காணாமல் போயிருந்தது அதன் பின்னரே தெரிய வந்தது. அது தொடர்பாய் வெடித்ததுதான் கலகம். அதனைத் தொடர்ந்து அடுத்த ஆண்டே,நியூயார்க்கில், உடனடியாகக் கிடைக்கும் பிணத்தை மருத்துவர்கள் அறுவை சோதனைக்குப் பயன்படுத்தலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டது.அது போல ஒரு சட்டம் இங்கிலாந்தில் 1832 ல் உரிமை கோராத பிணங்களை அறுக்க எடுத்துக் கொள்ளலாம் என்று சட்டம் இயற்றினர். மீண்டும் 1829 ல் பிணத்தட்டுப்பாடு தலைதூக்கியது. அப்போது நடந்த கூத்து பிரசித்திப் பெற்றது. எடின்பரோவில் அரைகுறையாய் தூக்கில் மூச்சுத்திணறிக்கொண்டிருக்கும் குற்றவாளிகளை எல்லாம், உடனடியாக அறுவை சிகிச்சை மருத்துவர்களுக்கு விற்றனர்.அதன் பின் பல படி கள் தாண்டி,இருபதாம் நூற்றாண்டில்தான் மதத்தின் பிடியிலிருந்து மருத்துவம் வெளியேறி மக்களுக்கு சேவை ஆற்றிக்கொண்டிருக்கிறது.ஆனால் இன்று உடற்கூறியல் வெகுவாக முன்னேறி ட்.என்.ஏ தாண்டி நான்னோ தொழில்நுட்பம் வரை எல்லையை எட்டியுள்ளாது.

.

காலன்

H422/0135 Andreas Vesalius (1514-1564), Belgian anatomist, with anatomical equipment and books. Aged 24, Vesalius was made professor of anatomy and surgery at Padua University, Italy. He lectured in many universities, conducting anatomical demonstrations in person. In 1543, Vesalius published his lectures in a book, De Corporis Humani Fabrica (On the Structure of the Human Body), which set a completely new level of accuracy in anatomy. His book was controversial because it disagreed with the accepted medical authority of the time, the works of the Roman physician Galen. Vesalius' book was rich in detailed illustrations of the human body, and acquired a reputation for its great beauty. Engraving from the 1875 edition of Vies des Savants Illustres. SCIENCE PHOTO LIBRARY

பிரெஞ்சு வேதியல் விஞ்ஞானி அன்செல்ம் பேயன்

பிரெஞ்சு வேதியல் விஞ்ஞானி அன்செல்ம் பேயனின் பிறந்த தினம்,இன்று, ஜனவரி 6.

by Mohana Somasundram on Friday, January 6, 2012 at 10:24pm

நண்பர்களே இன்று, ஜனவரி 6 ம் நாள் பிரெஞ்சு வேதியல் விஞ்ஞானி அன்செல்ம் பேயனின் ( Anselme Payen (January 6, 1795 - May 12, 1871) பிறந்த தினம். அவர் தொழில்துறை வேதியலுக்கு ஏராளமான பங்களிப்பைச் செய்துள்ளார். தாவரத்தின் அடிப்படைப் பொருள் மாவுப்பொருள் கலந்த செல்லுலோஸ் என்பதே. இப்படி ஒரு பொருள் தாவரத்தில் உள்ளதை முதன் முதல் கண்டுபிடித்தவர் பிரெஞ்சு விஞ்ஞானி அன்செல்ம் பேயன்தான். அதற்கு செல்லுலோஸ் என்ற பெயரைத் தந்தவரும் அவரே.

அன்செல்ம் பாரிசில் 1795 ம ஆண்டு, ஜனவரி 6 ம நாள் பிறந்தார். அவர் ஒரு வியாபாரியின் மகன். அவரது 13 வது வயதில் தன் தந்தையுடன் இணைந்து அறிவியல் படித்தார். பின்னர் வேதியல் படித்தார். அன்செல்மின் 23 வது வயதில் அவர் போரக்ஸ் சுத்தம் செய்யும் தொழிற்சாலையில் மேலாளராகச் சேர்ந்தார். அங்கே சோடா மற்றும் போரிக் அமிலத்திலிருந்து போரக்ஸ் தயாரிக்கும் முறையை இவரே உருவாக்கினார். அதற்கு முன்பாக போரக்ஸ் கிழக்கிந்திய தீவுகளிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் அன்செல்ம் உருவாக்கிய இந்த போரக்ஸ் உற்பத்தி முறை, அதன் விலையை மூன்றில் ஒரு பங்காக குறைத்தது. அது மட்டுமா? போரசில் மேலாதிக்கம் செய்து வந்த ஒரே முதலாளியான டச்சின் ஆதிக்கத்துக்கு அடி விழுந்தது.

அன்செல்ம் சர்க்கரையை சுத்தம் செய்யும் முறை மூலம், உருளைக்கிழங்கிலிருந்து ஸ்டார்ச் மற்றும் ஆல்கஹாலை சுத்தம் செய்து தயாரிக்கும் முறையும் உருவாக்கினார். நைட் த்ரோ சனை நிர்ணயிக்கும் முறையையும் கண்டறிந்தார். பல கண்டுபிடிப்புகள் மூலம் சர்க்கரையை படிகமாக்குதல், நிறம் நீக்குதல், ஆராய்தல் போன்றவற்றை அறிய நிறமற்ற அளவுமானியைக் (decolorimeter) கண்டுபிடித்தார் .

அன்செல்ம் 1833 ல், டையாச்ட்ஸ் என்ற நொதியைக் கண்டுபிடித்தார். அதன் மூலம் செல்லுலோஸ் என்ற தாவரத்தின் அடிப்படைப் பொருளை 1835 ல், கண்டறிந்ததுடன், அதற்கு செல்லுலோஸ் என்ற நாமகரணம் சூட்டியதும் அவரேதான். பின்னர் பாரிசில் பேராசிரியரானார். அமெரிக்க வேதியல் சங்கம் இன்றும் அவருக்கு மரியாதை செய்யும் முகமாக ஆண்டுதோறும் ஒரு பரிசைக் கொடுக்கிறது.

உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..!

உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..!

by Mohana Somasundram on Saturday, January 14, 2012 at 11:15pm

உலகின் மிகச் சிறிய முதுகெலும்பி... குட்டியூண்டு தவளை..!

அமெரிக்க ஐக்கிய நாட்டு விஞ்ஞானிகளின் குழுவைச்சேர்ந்த கிரிஸ் ஆஸ்டின் என்ற விஞ்ஞானி , சமீபத்தில் நியூகினியாவில் இரண்டு புதிய இனங்களைச் சேர்ந்த தவளைக் கண்டுபிடித்துள்ளார். எலும்புள்ள விலங்குகளில் இதுதான் உலகிலேயே மிக மிகச் சிறியது என்பது வியப்புக்குரிய விஷயமாகும். இந்த தவளை எவ்வளவு பெரிசு தெரியுமா? சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள். இதன் அளவு 7 .7 மி.மீ தான். ஒரு இன்ச் நீளம் என்றால் உங்களுக்குத் தெரியுமல்லவா ? அந்த ஒரு இன்ச்சில் மூன்றில் ஒரு பகுதியைவிடச் சிறியது. இதற்கு முன் உலகின் சிறிய முதுகெலும்பி என்று பெயரும், பெருமையும் பெற்றிருந்த 8 மி.மீ நீளமுள்ள இந்தோனீசிய சின்ன மீனை இந்த தவளை பின்னுக்குத் தள்ளி விட்டது. இந்த குழு மூன்று மாதங்களாக உலகில் மிகப் பெரியதும், உயரமான வெப்ப மண்டல தீவான நியூகினியாவின் தீவை ஆராய்ந்து தேடித் தேடி இந்த தவளை இனங்களை கண்டுபிடித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பானது ஆஸ்டின் குழுவினருக்கு மிகப் பெரிய சவாலும்,சாதனையுமாகும்.

இம்மாத்தூண்டு தவளையைக் கண்டுபிடிப்பது ஒன்றும் சாதாரண விஷயமல்ல. இதன் பெயர் பீடோபைரினி அமானூன்சிஸ்(Paedophryne amauensis) என்பதாகும் .இதன் ஆண் தவளையின் கீச்சிடும் ஒலி , ஒரு பூச்சியின் ஒலியைப் போலிருக்குமாம் . அதன் மூலம்தான் இந்த தவளையைக் கண்டுபிடித்தோம் என்று ஆஸ்டின் கூறுகிறார் . ஆனால் இது மிக மிகப் பெரிய கண்டுபிடிப்புதான்...! இதனைக் கண்ணால் காண்பதே பெரிய் விஷ்யம்தான். பொதுவாக நியூகினியா அதிகவகையான உயிரினங்கள் வாழும் ஓர் உயிரிப்பன்மையின் உச்ச பட்ச இடம். அந்த இடத்தில் எப்போதுமே புதிய வகை உயிரினங்களை கண்டுபிடிக்கலாம். கண்டுபிடிக்க முடியும்.அதனால்தான் ஏதாவது புதிய வகை உயிரினங்கள் கிடைக்குமா என்று தேடியவர்களுக்கு மிகப் பெரிய புதையல் அகப்பட்டதுபோல் கிடைத்ததுதான் இந்தப் புள்ளித் தவளை.இந்த தவளை பற்றிய தகவல் வெளியுக்லகுக்கும், அறிவியல் இதழிலும் 2012 , ஜனவரி 11 ம நாள் வெளியிடப்பட்டது.

அங்கு கிடைத்த இரண்டாவது தவளை., இந்த பீடொபைரீன் அமானூன்சிஸைவிட துளியூண்டு பெரிது. அதன் அளவு, 8 .5 மி.மீ ஆகும். இந்த குட்டியூண்டு தவளையின் பெயர் பீடோபைரினி ஸ்விப்ட்டோரம் (Paedophryne swiftorum ). பொதுவாக முதுகெலும்பிகளில் மிகச் சிறியதும், மிகப் பெரியதும் கொஞ்சம் பெருமையும், பிரபலமும் உடையவை. மனித இனம் அறிந்த 60,000 வகை முதுகெலும்பிகளில், மிகப் பெரியது நீலத் திமிங்கலமே..! அது எவ்வளோ பெரிசு தெரியுமா? சுமார் 25 மீட்டர் அளவு இருக்கும். அதாவது 75 அடி. அம்மாடியோவ் ஒரு வீடு சைஸ் என்று சொல்லலாமா? அதற்கு அடுத்த படி, மிகச் சிறிய முதுகெலும்பி, இந்தோனீசிய மீன்தான் என்று இதுவரை நம்பிக் கொண்டிருந்தோம்.அதன் சைஸ் வெறும் எட்டு மி.மீ மட்டுமே. ஆனால் அந்த எண்ணத்தை தூக்கி கபளீகரம் பண்ணி சாப்பிட்டுவிட்டது இந்த துளியூண்டு பூச்சி சைஸ் தவளை. ஒரு தண்ணீர்ப் பூச்சியைவிடச் சிறியது. இந்த குட்டி,பொட்டுத் தவளையின் சைஸ் 7 .7 மி.மீ. இதுவரை உலகின் மிகப் பெரிய மற்றும் மிகச் சிறிய முதுகெலும்பிகள் நீரில்தான் இருக்கும் என்றும் நினைத்தோம். அந்த எண்ணத்தையும் முறித்துவிட்டது இந்த தவளையார். ஆமாம் இது தரை வாழ் விளங்கல்லவா ? வாழிட சூழலில் மழைக்காடுகளின் தரையில், இலைகளில்தான் இந்த மாதிரி சிறிய விலங்குகள் வாழ்க்கை நடத்துகின்றன என்று ஆஸ்டின் தெரிவிக்கிறார் . அமெரிக்க பணமான டைமில்(Dime) .(.நம்ம ஊரு ஒரு பைசா நாணயம் போலத்தான் இந்த டைம்.).இந்த தவளையை வைத்து படம் எடுத்துள்ளனர். பாருங்களேன்..!

Monday, December 12, 2011

நிலவோடு புவி இன்று( டிசம்பர் 10 ) விளையாடுதே..!

நிலவோடு புவி இன்று ( 2011 ,டிசம்பர் 10 ) விளையாடுதே..!

by Mohana Somasundram on Friday, December 9, 2011 at 1:08pm

இந்த ஆண்டின் கடைசி கிரகணம்.. முழு சந்திரகிரகணம்..2011 , டிசம்பர் 10

நிலவோடு புவி இன்று( டிசம்பர் 10 ) விளையாடுதே..!

நண்பர்களே... !நாம் தினமும் வானில் சூரியன்,சந்திரன்,விண்மீனகள் வருவதை அதன் நகர்வுகளைப் பார்த்து மகிழ்ந்து பதிவும் செய்கிறோம். ஆனால் இவர்களுடன் பூமியும் இணைந்து ஓடிப் பிடித்து விளையாடும் நிகழ்வு வருடத்தில் ஓரிரு நாட்கள்தான் நடக்கின்றன.அப்படி ஓர் அற்புதமான தருணத்தை..அரிய வான்காட்சியை, வான் நிகழ்வை. , 2011 , டிசம்பர் 10 ம் நாள், சனிக்கிழமை அன்று சந்திக்கப் போகிறோம். அப்போது பூமியும் நிலவும் ஓடிப்பிடித்து விளையாடும் அற்புதத்தை நாம் கண்டு, ரசித்து படம் பிடித்து மகிழலாம்., சனிக்கிழமை அன்று இந்த ஆண்டின் கடைசி விளையாட்டை நிகழ்த்தும் சந்திரகிரகணமும் நம்மைச் சந்திக்க காத்திருக்கிறது. இந்த சந்திர கிரகணம் , டிசம்பர் 10 ம் நாளான்று, சுமார் 5 மணி நேரம் இரவு வானில் அற்புதமாகத் தெரியும்.

இந்தியா,அலாஸ்கா, வட கனடா, வட அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நி்யூசிலாந்து, மத்திய ஆசியா மற்றும் கிழக்கு ஆசிய, நாடுகளில் இந்த முழு சந்திரகிரகணத்தைக் காணமுடியும்.மத்திய ற்றும் கிழக்கு ஆசியாவில் உள்ளவர்கள்தான் கொடுத்து வைத்தவர்கள் எனலாம். இவர்கள்தான் இதனை அற்புதமாக படம் எடுக்க முடியும். வட அமெரிக்க மற்றும் ஹவாய் தீவுகளில் உள்ளவர்கள் கிரகணத்தை காலையில் சந்திரன் மறையும் வரை காண்பார்கள். இந்த டிசம்பர் 10ம் நாள் நடைபெற உள்ள விந்தைமிகு வானின் விளையாட்டை,உலகின் 1,50௦ கோடி மக்கள் கண்டு களிக்க முடியும்.இதனை பொதுமக்கள் வெறும் கண்களால் எந்த வித பாதுகாப்பு கவசமும் இன்றி பார்க்கலாம் . கண்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

முழுக்கிரகண நீட்டிப்பு.நேரம்..!

இந்தியாவில் உள்ளவர்களுக்கு இந்த முழு சந்திர கிரகணம் நமது கண்களுக்கு ஓர் அருமையான வான்வெளி விருந்தாகும். இந்த விருந்தை இந்தியாவில், சுமார் 51 நிமிடங்கள் முழு கிரகணத்தை உங்களின் கண்களால் ஆசை தீர பருகலாம்.ஆனால் கிரகணம் நீடிப்பது சுமார் 5 மணி நேரமாகும்.இந்த ஆண்டின் கடைசி கிரகணமும், இந்த ஆண்டின் சந்திர கிரகண எண்ணிக்கையில் இரண்டாவது கிரகணமும் இதுவே. சென்ற ஆண்டும் இதே போலவே, சரியாக ஓர் ஆண்டுக்கு முன் ஒரு முழு சந்திர கிரகணம் 2010 ,டிசம்பர் 20ல், மிக நீண்ட இரவு நாளன்று ஏற்பட்டது.. .அடுத்த சந்திரகிரகணம் 2014,ஏப்ரல், 14-15 ல்தான் நிகழும்.வட அமெரிக்க மக்கள் இதனை முழுமையாக காண்பார்கள். ஆனாலும் கூட இந்தியாவில் அனைவரும் பார்க்க முடியாது.

கிரகணம் என்றால் என்ன?

பொதுவாக ஓர் ஆண்டில் 2 -7 கிரகணங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த ஆண்டில்4பகுதி சூரியகிரகணங்களும் ,2 முழு சந்திர கிரகணங்களும் ஏறபட்டுள்ளன.கிரகணம் (Eclipse) என்பதற்கு மறைப்பு எனபது பொருளாகும்,எக்லிப்ஸ் என்பது ஒரு கிரேக்க சொல். இதன் பொருள்,வான் பொருள் கருப்பாவது ("the darkening of a heavenly body") என்பதே. சூரிய கிரகணம் என்பது, அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலா நாளிலும் உண்டாகிறது. கிரகணம் என்பது சூரியன், சந்திரன், பூமி மூன்றுக்கும் இடையிலுள்ள கண்ணாமூச்சி விளையாட்டு ஆகும்.சூரிய கிரகணத்தின் போது சூரியன் மறைக்கப்பட்டு கொஞ்ச நேரம் காணாமல் போகிறது.. கடந்த ஆண்டில், ஏற்பட்ட 6 கிரகணங்களில் , 4 பகுதி சூரிய கிரகணம். மீதி 2 சந்திர கிரகணம். ஆனால் இதே போல் 2009 ஆண்டும், 6 கிரகணங்கள் ஏற்பட்டன. ஆனால் அவை 2011 ம் ஆண்டு கிரகணங்களின் உல்டாதான்.. அவற்றில் 4 சந்திர கிரகணம். மீதி இரண்டும் சூரிய கிரகணங்கள். இந்த ஆண்டு ஏற்பட்டது போலவே, 21 ம் நூற்றாண்டில் 6,முறை இதே போல 4:2 விகிதத்தில் ( 4 சந்திர கிரகணம்.:இரண்டு சூரிய கிரகணங்கள்) ஏற்பட உள்ளன. அவை 2011 , 2029 , 2065 , 2076 & 2094 வருடங்களில் உண்டாகும் என்று கணிக்கப் பட்டுள்ளது..இப்படிப்பட்ட நிகழ்வில் எப்போதும் ஜனவரியில் முதல் கிரகணமும், டிசம்பரில் கடைசி கிரகணமும் உண்டாகும்.

கிரகணத்தில் சிவக்கும் சந்திரன்..!

இப்போது உருவாக உள்ள சந்திர கிரகணம் மையக்கோட்டில் நிகழவில்லை. ஆனால் முழுமறைப்பு/முழுக்கிரகணத்தின் காலக்கெடு.. 51 நிமிடங்கள். . இனி இதைப் போனற நீண்ட முழு சந்திரகிரகணத்தைக் காண இன்னும் 7 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். ஆம். அடுத்த முழு சந்திர கிரகணம் இந்தியா முழுமைக்கும் அனைவரும் பார்க்கும்படி நிகழும் ஆண்டு 2018.,ஜூலை 27 .. அதன் முழு மறைப்பு நேரம் 103 நிமிடங்கள். அதனால் விஞ்ஞானிகளும், ஆர்வலர்களும், வான்நோக்கர்களும் ஆவலுடன்,புவியின் தொடலால் நாணிச் சிவந்த சந்திர பிம்பம்/முகத்தைக் காண, காணொலி மற்றும் படம் பிடித்து படம் காட்ட பல்வகை ஏற்பாடுகளுடன் தயாராக உள்ளனர். இந்த முறை அவ்வளவாக் கருப்பாக இல்லாமல் சிவந்து செம்பு வண்ணத்தைப் பூசிக்கொண்டு ஜொலிக்குமாம். பார்த்து ரசியுங்கள் நிலவின் பேரழகை..! என்ன விலை அழகே.. உன்னை பட்ம் எடுத்து மகிழ்வேன் என்று பாடுங்கள்.

கிரகண நேரம்..!

இந்தியா முழுமைக்கும், சந்திரன் முழு நிலா நாளான, டிசம்பர் 10 ம் நாள், சமார் 5மணிநேரம் புவியின் நிழல் மறைவில் தன்னை மறைத்து தொட்டுப் பிடித்து விளயாடிக் கொண்டிருக்கும். இந்த தொடல்/தழுவல் விளையாட்டுத் துவங்கும் நேரம், மாலை மணி 6.15.சந்திரன் முழுமையாக பூமியின் நிழலில் தன்னை ஒளித்துள்ள நேரம் துவங்குவது இரவுமணி:7.35 . இந்த மறைப்பு விளையாட்டு 8.28 மணிவரை நீடிக்கும். புவியின் நிழல் சந்திரனை பகுதியாக மறைப்பது முடியும் நேரம். இரவு மணி. 9.48 . ஆனால் சந்திரன் பூமியின் நிழல் மறைப்பில் முழுமையாக இருட்டாக/கருப்பாகத் தெரியும் கால நேரம், நம இந்திய நேரப்படி மணி 8.27 க்குத்தான்.

சந்திர கிரகணம் துவங்கும் & முடியும் 7 நிலைகளாவன:

1. சந்திரன் பெனும்பரா ( penumbra)என்னும் அரி நிழலில் நுழையும் நேரம் மாலை: 17:03: 3

2. சந்திரன் அம்பரா (umbra) என்னும் கருநிழலில் நுழையும் நேரம்: மாலை:18:15:13

3. சந்திரனின் முழுமறைப்பு/முழுக் கிரகணம் (totality) துவங்குதல்:இரவு 19:36. 29

4. கிரகணத்தின் முழுமை நேரம் (maximum eclipse ): இரவு 20:01:50

5. முழுமறைப்பு/முழுக் கிரகணம் முடிவடையும் நேரம்: இரவு 20:27:16

6. கருநிழலிருந்து (umbra) சந்திரன் வெளியே தலைகாட்டும் நேரம்: இரவு: 21:48:09

7. அரிநிழலிருந்து ( penumbra) சந்திரன் முழுமையாக வெளிவரும் நேரம்:இரவு: 22:00:12

ஒளி மங்கும் நிலா..!

டிசம்பர் 10 ,முழு கிரகணம் நிகழும் நேரத்தில் நிலா, வானின் உச்சிக்கு வந்து கொண்டிருக்கும்.பூமியின் நிழலில் நிலா ஒளிந்துள்ளபோது நிலவின் ஒளி அவ்வளவாக இருக்காது. மேலும் முழு சந்திர கிரகண நிலா,, நாணிச் சிவந்தது போய் இருக்கும். கர்ணன் படத்தில் வரும் ”நாணிச் சிவந்தன மாதர்தம் கண்கள்” என்ற பாடல் இங்குதான் பொருந்துமோ.?அப்பாடா ஒருவழியாக சந்திர கிரகணம் முழுமையாக பார்த்து முடித்து விட்டது போன்ற் உணர்வு ஏற்பட்டு விட்டதா? அந்த நிறைவினை நேரில் பார்த்து மகிழுங்கள் நண்பா..!

சுற்று..சுற்றல்..அனைவரும்..சுற்றல்.!

சூரியன், பூமி, சூரியனை வலம் வரும் 8 கோள்கள், அவைகளின் துணைக்கோள்கள், குள்ளக் கோள்கள், அவைகளைத் தாண்டி இருக்கும் குயூப்பியர் வளையம், அதற்கு அப்பால் உள்ள ஊர்ட் மேகம்., அவற்றிலிருந்து உரு எடுத்து சுற்றும் வால்மீன்கள் என இவ்ளோ..பேரை உள்ளடக்கியது நம் சூரிய குடும்பம். இந்த குஞ்சு குளுவான்கள் படை சூழ சூரியன் தனது தாய் வீடான பால்வழி மண்டலத்தை நொடிக்கு சுமார் 250 -270 கி.மீ வேகத்தில் சுற்றி வருகிறது. ஆனால் இந்த சூரிய குடும்பம், பால் வழி மண்டலத்தில்(milky way galaxy) ஒரு சிறு மணல் துகள் அளவுதான். இந்த துகள் ஒரு முறை பால்வழி மண்டலத்தைஒரு முறை சுற்ற எடுத்துக் கொள்ளும் காலம். 22 1/2 கோடி ஆண்டுகள். அது மட்டுமல்ல. இந்த நிகழ்வினை ஒரு பிரபஞ்ச ஆண்டு என்று சொல்கிறோம். சாதாரணமாய் பூமி, தன் துணைக் கோளான சந்திரனையும் இழுத்துக் கொண்டே சூரியனைச் சுற்றிகொண்டிருக்கிறது. சந்திரனும் தனது கோளான பூமியை, பூமியை 29 1/2 நாட்களில் சுற்றுகிறது நம் கண்களுக்கு கண்ணாமூச்சி காட்டும் நமது சூரிய குடும்ப தாய்வீடான, பால்வழி மண்டலம், முழு சந்திர கிரகணத்தின் போது, முழு மறைப்பின் பின்னணியில் அதி அற்புதமாய் தெரியும். இம்முறை நீங்களும் பார்த்து மகிழுங்கள் இந்த் அழகிய காட்சியினை..!.

சந்திர கிரகணம் நிகழுமிடம்..!

இந்த முழு சந்திர கிரகணம் மேஷ ராசியில் நிகழ்கிறது. மேஷ் ராசி என்றதும்,சோசியத்துக்கு ஓடிவிடவேண்டாம். சந்திரன் மேஷராசி விண்மீன் படலத்தில் (Taurus constellation) காணப்படுகிறது.அதுவும், குளிர்கால முக்கோணம் எனப்படும் விண்மீன் கூட்டங்களுக்கு மத்தியில் அழகாக காட்சி அளிக்கிறது. குளிர்கால முக்கோணத்தில் முக்கியமாக, மேஷராசியின் சிவந்த செம்பூத விண்மீனான ரோகிணி, வேட்டைக்காரன் விண்மீன் படலத்தின் திருவாதிரை, போன்றவை அருமையாய் தெரியும். பொதுவாக, முழு நிலா நாளில், சந்திரன் வெண்பளிங்காய் ஒளி வீசிக்கொண்டிருப்பதால், அருகிலுள்ள விண்மீனகள், அதன் ஒளியில் ஒளிந்து கொள்ளும். இப்பொது சந்திரன் இருண்டு, ஒளி மங்கி காண்ப்படுவதால், அனைத்து விண்மீனகளையும், வேட்டைக்காரன் விண்மீன் படலத்தோடு இணைந்து காணப்படும் பால்வழி மண்டலத்தையும் காண முடியும்.

பிரபஞ்சத்தில்..அனைத்தும்..சாய்வே..!

பூமி, தன் அச்சில் 23 1/2 பாகை சாய்ந்துள்ளது. சூரியனும் கூட 7 பாகை சாய்வாக சுற்றுகிறது. சந்திரன், 5 பாகை சரிவாக பூமியைச் சுற்றுகிறது. எனவே பூமி, சூரியன் மற்றும் சந்திரன் இவை மூன்றும் எப்போதாவதுதான் ஒரே நேர்கோட்டில் சந்திக்கின்றன. அவை மூன்றும் நேர்கோட்டில் வரும்போது, அவைகளில் ஒன்று நம் பார்வையிலிருந்து மறைக்கப்படுகிறது. இதுவே கிரகணம் ஆகும்.. சூரிய கிரகணம், அமாவாசை நாளிலும், சந்திர கிரகணம் முழு நிலவு நாளிலும் உண்டாகிறது. எல்லா முழு நிலா நாளிலும் சந்திர கிரகணம் உண்டாவது இல்லை. ஏனெனில் சூரியன்,பூமி, சந்திரன் மூன்றும் தன் அச்சில் வெவ்வேறு பாகையில் சாய்வாக சுற்றுவதால், இவை மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும் சாத்தியக் கூறு எல்லா அமாவாசை/முழுநிலா நாளிலும் ஏற்படுவது கிடையாது. எனவே, எல்லா முழு நிலா நாளிலும்/ அமாவாசை தினத்திலும் கிரகணம் ஏற்படுவதில்லை.

ஏன் சூரியன், சந்திரன் ஒரே அளவில்..!

நமது தாயான சூரியன் ரொம்ப ரொம்ப பெரிசு.சூரியனுடன் ஒப்பிடும்போது, சந்திரன் ரொம்ப பொடிசு.குட்டியூண்டு.புள்ளி.. அதன் விட்டம், 384,400 கி.மீ மட்டுமே. சூரியன் சந்திரனைவிட 4,00 மடங்கு பெரியது. அதைப் போல பூமிக்கும் சந்திரனுக்கும் இடையில் உள்ள தூரம், பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தை விட 400 மடங்கு அதிகம். இந்த அரிதான ஒற்றுமையால் தான், குட்டியூண்டு நிலவும், இம்மாம்.. பெரிய் ..ய் ..ய சூரியனும், பூமியிலிருந்து பார்க்கும்போது, ஒரே அளவில் தென்படுகின்றன. ௦௦குட்டியூண்டு ..சின்ன நிலா, நம் குடும்ப தலைவரான, மிகப் பெரிய சூரியனை மறைத்து,முழுங்கி,கபளீகரம் செய்து முழுசூரிய கிரகணம் ஏற்படச் செய்வதும் இதனாலேதான்.

கிரகண நேர நிர்ணயிப்பு..!

பூமியில் நிழல் சந்திரனைத் தொடுவதிலிருந்து, அதன் எதிர் முனையில் விடுவது வரை உள்ள நேரம் சுமார் 5 மணி நேரம் வரை நீட்டிக்கலாம். பூமிக்கும், சந்திரனுக்கும் இடையே உள்ள தூரம்தான் கிரகண நேரத்தை நிர்ணயிக்கும் முக்கிய காரணி. ஏனெனில், சந்திரன் பூமியை நீள்வட்டத்தில் சுற்றுகிறது. சில சமயம் அண்மையிலும், சில சமயம் சேய்மையிலும் காணப்படும். சந்திரன் பூமியிலிருந்து வெகு தொலைவில் (சேய்மையில்) இருந்தால், அதன் சுற்று வேகம் மெதுவாக இருக்கும்.எனவே, முழு மறைப்பு நேரத்தின் கால அளவும் இதனால் அதிகரிக்கும்.. இம்முறை நிகழ்வுள்ள கிரகணமும் அத்தன்மைத்தே..!இப்போது நிகழவுள்ள சந்திர கிரகணம்.. ௧௩௫ வது சாரோஸ் வகையைச் சேர்ந்தது.

கிரகணத்தின் வரலாறு..!

ஏதேனியர்கள் போரில் தோல்வி

records of eclipses which took place thousands of years ago. This bit of cunieform speaks the history of eclipse

பழங்காலத்தில், கிரகணம் என்பது, ஏதோ இயற்கைக்குப் புறம்பான கெட்ட நிகழ்வு என்று கருதினர். கிரேக்கத்தில் சூனியக்காரர்கள், நாங்கள் எங்களது அற்புத சக்தியால் வானிலுள்ள சந்திரனின் ஒளியை உறிஞ்சி விடுவோம் என சவால் விட்டனர்.முழு கிரகணத்தின் போது ஒளி ஓடிப்போயிற்று. மக்களும் அவர்கள் விட்ட புருடாவை..நம்பினர். இது கி.மு. 425 , அக்டோபர் 9 ம் நாள் நிகழ்ந்தது.அதற்கு முன்னால், கி.மு.413 , ஆகஸ்ட் 28 ம் நாள் முழு சந்திரகிரகணம் ஏற்பட்டது. இந்த கிரகணம், சைரகுயுசின் இரண்டாம் போரின்போது வந்தது. அப்போது ஏதென்ஸ்காரர்கள் (Athenians) வீடு நோக்கி செல்ல திட்டமிட்டனர். அவர்கள் துசிடிடெஸ்(Thucydides) என்ற மதகுருவிடம் என்ன செய்வது என்று கேட்டனர். அவர் இன்னும் 27 தினங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள் என்றா..மதகுருவின் சொல்படி ஏதெனியர்கள் நடந்தனர்.ஆனால் சைராகுசன்ஸ்(Syracusans ) இதனை சாதகமாக எடுத்துக் கொண்டு, திட்டமிட்டு ஏதேனியர்களின் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி கொண்டனர்.ஏதேனியர்கள் போரில் தோல்வியுற்றனர். யூரிமேடான் மாய்ந்தார்.சந்திர கிரகணத்தின் மேலுள்ள மூட நம்பிக்கையால்,ஓர் போர் ஆழ்ந்த அழிவைச் சந்தித்தது.

கிரகணத்தில்.நம் கோயில்கள்..!

இப்படி பல்வேறு கதைகளும் சரித்திரங்களும் நடந்தது பழங்காலத்தில் என்றால், தற்போது நவீன முறையில் மூடநம்பிக்கைகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டிருக்கின்றனர். இந்த சந்திர கிரகணத்தின் போது டிசம்பர் 10 ம் நாள், சபரி மலையில் மாலை 6.15 மணி முதல் இரவு 8.15 மணி வரை, இரண்டு மணி நேரம் ஐயப்பசுவாமி கோவிலின் நடை அடைக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு நிர்வாகம் அறிவித்துள்ளது. கிரகணம் முடிந்து பரிகாரம் நடத்திய பிறகு மீண்டும் நடை திறக்கப்படுமாம் . அன்று ஒரு நாள் மட்டும் புஷ்பாபிஷேகம் நடைபெறாதாம்.அது என்ன இரண்டு மணி நேரம் என்பது என்று தெரியவில்லை. கிரகணம் ஐந்து மணி நேரம் அல்லவா? திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி முருகன் கோயில், திருப்பதி பாலாஜி கோயில் என அனைத்து கோயில்களின் கதவுகள் மூடப்படுகின்றன. அது சரி..கிரகண காலத்தில் வானிலிருந்து யாராவது ந்ஞ்சை, அனைத்துக் கோயில்கள் மேலும் கொட்டுகிறார்களா? கிரகணத்துக்கு கடவுள் எதிரியா/பிடிக்காதவரா? என்ன நடக்கும் கிரகணத்தின் போது என்பது முழுமையாகத் தெரிந்தும், எப்போதும் மக்களை ஏதாவது ஒரு வகையில் மூடராக வைத்திருக்கவே..ஒரு பகுதியினர் விரும்புகின்றனர்.

சோதிடர்கள் அறிவிக்கும் தகவல்:

“டிச., 10ல் முழு சந்திரகிரகணம் ஏற்படுகிறது. இதையொட்டி, பரிகாரம் செய்ய வேண்டியவர்கள் குறித்து பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது. டிச., 10 மாலை 6.14 மணிக்கு தொடங்கும் கிரகணம் 9.47 மணி வரை இருக்கும். பவுர்ணமியும், ரோகிணியும் கூடிய நேரத்தில் ராகு கிரஸ்தமாக, வடகிழக்கே பிடித்து வடமேற்காக கிரகணம் நகரும்.முழு கிரகணமாக இருப்பதால் நிலாவின் ஒளி குறைந்து மங்கலாகும். பவுர்ணமியில் தொடங்கும் கிரகணம் பிரதமை வரை நீடிக்கிறது. இரவு 10 மணிக்கு மேல் சந்திரனைத் தரிசனம் செய்ய வேண்டும். சனிக்கிழமை பிறந்தவர்களும், கார்த்திகை, ரோகிணி, மிருகசீரிடம், அஸ்தம், திருவோணம் நட்சத்திரத்தினரும், ரிஷபராசியில் பிறந்தவர்களும் மறுநாள் கோயிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்”.என இடைவிடாமல் ஜபிக்கின்றனர்.

கிரகணங்களும்,..ஊடகங்களும்..அறிவியல் மையங்களும்..!

மேலே குறிப்பிட்ட தகவல் இரண்டும் நாளிதழ்களில் வந்தவைதான்.கிரகணம் தொடர்பான, கட்டுக்கதைகளையும், மூட நம்பிக்கைகளையும், ஊடகங்கள் சும்மா, சகட்டு மேனிக்கு கட்டு கட்டாய், அறிவியலில் தோய்த்து அவிழ்த்துவிட்டுக் கொண்டே இருக்கின்றன. கிரகணம் எப்படி வருகிறது என்று சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரே, கிரகணம் முடிந்ததும், குளித்து, தர்ப்பணம் செய்கிறார். இது எப்படி இருக்கு? அது கூட பரவாயில்லை. வானுக்கு விண்கலத்தை அனுப்பி, அறிவியலை ஆராயும்,பணியைச் செய்யும் இஸ்ரோ விண்வெளி நிலையத்தில் கூட, சாமி கும்பிட்டு, சூடம் ஏற்றி, தீபாராதனை செய்த பின் தான், விண்கலம் அனுப்பும் பட்டனைத் தட்டுகின்றனர். இப்படி ஒரு கும்பலும் அறிவியல் தளத்தில் அறிவியலுக்குப் புறம்பாய் அலைந்து கொண்டு இருக்கின்றனர் என்பதை அறிவு சால் மக்கள் அறியவேண்டியது காலத்தின் கட்டாயம். இன்று அறிவியல் உலகின், பல அறிவியல் தொழில் நுட்பங்களையும் பயன்படுத்திக் கொண்டு, அதனுடனே மூட நம்பிக்கைகளையும் போர்த்திக் கொண்டு வாழ்வது என்ன நியாயம்.?

அடுத்த ஆண்டு. நிகழ உள்ள கிரகணங்கள்:

  1. 2012 ,மே 20, வளைய சூரிய கிரகணம்.
  2. 2012 , ஜூன் 04,பகுதி சந்திர கிரகண்ம்
  3. 2012 ,நவம்பர் 13, பகுதி சந்திர கிரகணம்.
  4. 2012 ,நவம்பர் 28 பகுதி சந்திர கிரகணம்.


Saturday, November 12, 2011

இறந்து கொண்டிருக்கும் தாய்களும்..அவர்களைச் சுற்றி வரும் மகவுகளும் ..!

இறந்து கொண்டிருக்கும் தாய்களும்..அவர்களைச் சுற்றி வரும் மகவுகளும் ..!

by Mohana Somasundram on Saturday, October 29, 2011 at 11:53pm

இறந்து கொண்டிருக்கும் தாய்களும்..அவர்களைச் சுற்றி வரும் மகவுகளும் ..!

சுடச் சுட ஓரு தகவல்..!

நல்ல நாளும் அதுவுமா என்ன இப்படி ஒரு தலைப்பு அபசகுனம் மாதிரி என்கிறீர்களா? நண்பா இது அபசகுனம் இல்லை. அறிவியல்.. அறிவியல் கண்டுபிடிப்பு. அதான். போட்டேன். தில்லிக்கு ராசா ஆனாலும் தாய்க்கு பிள்ளைதானே.. ! அது போல, இறந்துவிட்டாலும் கூட, தாய் தாய் தானே..! அவரை விட்டுவிட்டு வர மனசின்றி முடியவும் முடியாமல் அந்த பிள்ளைகள் அவரையே சுற்றி வருகின்றனர். சுவாரசியமான விஷயமல்லவா? அப்படி ஒரு கூட்டத்தை நம் விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. அதுவும் இரண்டு நாளைக்கு முன்புதான். சுடச் சுட ஓர் அறிவியல் தகவல் சுவையாக உங்களைச் சந்திக்கிறது.

இறந்த விண் மீனைக் கண்டறிந்த தொலை நோக்கி..!!

(Hobby-Eberly Telescope (HET)

இறந்த 3 தாய் விண்மீன்களைச் சுற்றி வரும் மூன்று கோள்களை நமது சர்வதேச வானியல் ஆராய்ச்சியின் குழு கண்டுபிடித்து,உள்ளது. . இவர்கள் பென் மாநிலத்தைச் சேர்ந்த விண்வெளியாளர்கள். இந்த தகவலை இவர்கள் 2011,அக்டோபர் 27 ம் நாளில் இதனைப் பற்றிய தகவல்களை வெளியில் அறிவித்துள்ளனர் .இவற்றை எல்லாம் இந்த ஆராய்ச்சிக் குழு ஒரு தொலைநோக்கி மூலமாக ஆராய்ந்து கண்டுபிடித்துள்ளது என்றால் ஆச்சரியமான விஷயம்தானே. அந்த தொலை நோக்கியின் பெயர் ஹாபி எபெர்லி தொலைநோக்கி(Hobby-Eberly Telescope (HET) ).

ஹாபி எபெர்லி தொலைநோக்கி..!

ஹாபி எபெர்லி தொலைநோக்கி (Hobby-Eberly Telescope (HET) ) என்பது உலகத்தின் நான்காவது பெரிய தொலைநோக்கி.இது மெக்டொனால்டு பார்வையகத்தில்/நோக்ககத்தில் (McDonald Observatory) அமைந்துள்ளது . டெக்சாஸ் லெப்டினன்ட் கவர்னர் பெயர் மற்றும் ராபெர்ட் E.எபெர்லியின்பெயர்களை (Texas Lieutenant-Governor Bill Hobby and for Robert E. Eberly, a Penn State benefactor.) இணைத்து இதற்கு சூட்டியுள்ளனர். 1997 லிருந்து இந்த தொலைநோக்கி செயல்படுகிறது.இதனை பென் மாநிலம், டெக்சாஸ் பலகலைக்கழகம்,ஸ்டேன்போர்ட் பலகலைக்கழகம், லுட்விக் பல்கலை, மூன்சென் பல்கலை மற்றும் கோயட்டின்ஜென் பல்கலை (collaboration between Penn State and the University of Texas at Austin, Stanford University, Ludwig-Maximilians-Universitaet Muenchen, and Goerg-August-Universitaet Goettingen) என அனைத்து பல்கலைக்கழகங்களும் இணைந்து செயல் பட்டு வானை தன் நுண் கண்களால் ஆராய்ந்து கொண்டிருக்கின்றன. இந்த இணைப்புகளுள் பென் மாநிலம்தான் அதிக ஈடுபாட்டுடன் இதில் செயலாற்றுகிறது.

திறமைசாலி..தொலைநோக்கி.!

ஹாபி எபெர்லி தொலைநோக்கியில், ஒளி வரும் துளையின் விட்டம் 9 .2 மீட்டர். ஒளி பிரதிபலிக்கும் ஆடியின் அளவு 9 .2 மீட்டரைவிட அதிகம். இதில் முதன்மை ஆடியில் 91 அறுகோண கண்ணாடிகள் உள்ளன, ஒளி பிரதிபலிக்க.இந்த ஹெட்(HET) தொலை நோக்கியின் அடிப்பகுதி அப்படியே, 70- 81 பாகை வட்டமடித்து வானை ஆராயும் . அப்போது இதுவரை நமக்குத் தெரியாமல் விண்வெளியில் வலம் வரும் பல விண்மீன்கள், அவைகளின் புதல்வர்களான கோள்கள் மற்றும் புதிய அண்டங்கள் போன்றவற்றை சல்லடை வலை போட்டுத் தேடிக்கொண்டிருக்கின்றன. சுமார் நொடிக்கு ஒரு மீட்டர் சுற்று வேகத்தில் நகரும் விண்மீன்களைக்கூட துல்லியமாய் கண்டுபிடிக்கும் திறன் வாய்ந்தது இந்த தொலைநோக்கி. இதுவரை அவற்றில் பல விண்மீனகளை கண்டுபிடித்துள்ளது. அந்த வலையில் சிக்கிய மீன்கள்தான் அக்டோபர் 27 அன்று அறிவிக்கப்பட்ட. இறந்து போன மூன்று விண்மீன்களும், அவற்றைச் சுற்றிவரும் மூன்று கோள்களும்.

கண்டு பிடிச்சோம்..கண்டு பிடிச்சோம்..!

அக்டோபரில் கண்டுபிடிக்கப்பட்டமூன்று புதிய கோள்களும் சுற்றி வரும் தாய் விண்மீனின் பெயர்கள்: HD 240237, BD +48 738, & HD 96127 -என்பதாகும். இவை நம் சூரிய குடும்பத்திலிருந்து பல பத்து ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளன.இதில் உள்ள வியப்பு, ஆச்சரியம், அதிசயம் தரும் விஷயம் என்னவென்றால் இவற்றில் ஒன்று மிக மிக அதிக நிறை உள்ளது மற்றும் அது இறந்த விண்மீனாகும் . இதனை அந்த குழுவின் தலைவரான அலெக்ஸ் வோல்ஸ்க்சான் ( Alex Wolszczan, an Evan Pugh Professor of Astronomy and Astrophysics at Penn State) என்ற வானவியல் பேராசிரியர்தான் கண்டுபிடித்தார். இவர்தான் முதன் முதல் 1992 ல் வானில் சூரிய மண்டலத்திற்கு வெளியே சுற்றிவரும் வெளிக் கோள்களைக் கண்டுபிடித்தவரும் கூட. இந்த இறந்த விண்மீன்களைச் சுற்றிவரும் கோள்கள் நமக்கு பல எதிர்கால கனவுகளை, திட்டங்களை, புதிய வானியல் ஆராய்வ்ச்சிக்கு தடம் போடும் என்று தெரிய வருகிறது. இப்போது இறந்த விண்மீன்களைச் சுற்றி வரும் இந்த புதிய கோள்கள், அவற்றை பற்றிய புதிய ஆராய்ச்சிக்கு நிறைய வழி வகை செய்துள்ளன. இது உலோகங்கள் எவ்வாறு இறந்து கொண்டிருக்கும் விண்மீன்கள் மேல் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை வானவியலாளர்கள் அறிந்து கொள்ளவும் பெரிது உதவுகின்றன.

. வெளிக் கோள்களின் (Exo -Planets ) புதிய பரிமாணம் ..!

இறந்த விண்மீன்களைச் சுற்றி வரும் இந்த கோள்களின் மண்டலம், நம் சூரிய குடும்பத்தை விட அதிகமான பரிணாமமும், பரிமாணமும் பெற்றது என தெரியவந்துள்ளது. "இந்த மூன்று விண்மீன்களும், ஏற்கனேவே தன்னிடமுள்ள ஆற்றலை எல்லாம் இழந்துவிட்டு, சிவப்பு அரக்கனாக உருமாறிக் கொண்டிருக்கிறது. வெகு விரைவில் இது தன்னருகே சுற்றி வரும் கோளை கபளீகரம் செய்துவிடும்", என வோல்ஸ்க்சான் கூறியுள்ளார். நமது சூரிய மண்டலத்தில் நம் சூரியனுக்கு என்ன நிகழும் என்று நாம் எதிர்பார்க்கிறோமோ/ எதனைச் சந்திரசேகர் சொன்னாரோ அதுவே இந்த இறந்து கொண்டிருக்கும் விண்மீன்களின் தலையெழுத்தும் என்றும் சொல்கிறார் வோல்ஸ்க்சான். நம் சூரியனும் எதிர்காலத்தில், தன் ஆற்றலை எல்லாம் இழந்து அதன் பூத உடல் ஊதிப் போய் சிவப்பு அரக்கனாக ஊதி ஊதி விரியும். அது சமயத்தில் நம் பூமியையும் கூட விழுங்கி விட நேரிடும். நண்பா அதற்காக இப்போதே பயப்பட வேண்டாம். அது நடக்க இன்னும் 600 கோடி ஆண்டுகள் ஆகும். இதனை நான் மட்டும் சொல்லவில்லை. பேராசிரியர் வோல்ஸ்க்சானும் இதையேதான் சொல்கிறார்.

பழுப்புக் குள்ளனா..?

இறந்து கொண்டிருக்கும் விண்மீன்களில் ஒன்று பெரியது; அதிக நிறையுள்ளது மட்டுமல்ல. இதற்கு நம் வியாழன் அளவு பெரிய கோள் உள்ளதுதான் ஆச்சரியமான விஷயம். அது மட்டுமல்ல அதன் அருகில் இரண்டாவது ஒரு புதிரான பொருளும் காணப்படுகிறது. இந்த ஆராய்ச்சிக் குழுவின் கணிப்புப் படி, இந்த பொருள் வேறொரு கோளாகவும் கூட இருக்கலாம்.அல்லது இது குறைவான நிறையுள்ள விண்மீனாவோ இருக்கக் கூடும் என்று இந்த வானியல் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். அல்லது நம் வானியலாளர்களுக்கு மிகவும் சுவாரசியமான பழுப்பு குள்ளனாகவும் கூட இது இருக்கலாம் என்று நினைக்கின்றனர். இந்த பழுப்புக் குள்ளன் என்பது, விண்மீன் போன்ற வான்பொருள் ஆனால் இது மிகமிகக் குளிர்ந்த விண்மீன்களுக்கும், அசுரன் விண்மீன் களுக்கும் இடைப்பட்ட வான்பொருளாகும். நாங்கள் தொடர்ந்து இந்த வான் பொருளைக் கூர்மையாக கவனித்துக் கொண்டிருப்போம், இன்னும் சில வருடங்களில் இவர் யார் என்பதும் இவரைப் பற்றிய முழு ஜாதகத்தையும் நாங்க புட்டு புட்டு வைப்போம், அதன் முழு வண்ணமும் அடையாளமும் தெரிந்துவிடும்.. என்று சர்வதேச வானியல் ஆராய்ச்சி குழுவின் தலைவர் வோல்ஸ்க்சான் அறுதியிட்டுத் தெரிவிக்கிறார்.

ஓயாத இரைச்சல்..!

வோல்ஸ்க்சான் இன்னும் சில சுவையான தகவல்கள் தருகிறார். என்ன தெரியுமா? இந்த மூன்றுவிண்மீன்களும் சண்டைபோடுவது போல ரொம்பவும் சத்தம் போட்டுக கொண்டிருந்தவனாவாம். நம் சூரியனைவிட அதிக ஜொலிப்புடனும் , ரொம்பவும் ஆட்டம் போட்டு ஆடிக் கொண்டும் இருந்தனவாம். இந்த சத்தம் இவர்களை அதிகமாக கவனிக்க விடாமல் தடுத்தனவாம்.நம் வீட்டுக் குட்டிகள் போடும் கும்மாளம் போல. ஆனால் பிரச்சினைகளுக்கும் மேல் ஒரு சவாலாகத் தான் இறந்து கொண்டிருக்கும் ஒவ்வொரு நிறை அதிகமுள்ள விண்மீன்களையும், அவற்றை சுற்றி வரும் புதிய கோள்களையும், அவற்றைப் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர். இவை எல்லாம் மிகப் பெரிய சாதனைதான். இவற்றை எல்லாம் சூரியக் கதிர்களின் ஒளிவண்ணப் பட்டையைப் பிரித்து பதிவு செய்யும் நிழற்படக் கருவி(spectrographs) மூலமே கண்டறியப்பட்டது.

மலை முழுங்கி மகாதேவன்..!

இந்த குழு வேறொரு இறுதி முடிவையும் கூட செய்தது.. அதுதான் இன்னும் ஆச்சரியமான, சுவாரசியமான தகவல். இந்த மூன்று விண்மீன்களுக்கும் அவைகளின் சுற்றுப் பாதையில் நிறைய கோள்கள் இருந்திருக்கலாம். அவற்றை எல்லாம் இவை, மலை முழுங்கி மாகாதேவன் போல காலப்போக்கில் எல்லாவற்றையும் விழுங்கி விட்டன. இப்போது நமக்குத் தெரியும் ஒன்றை மட்டுமே தற்சமயம் பாக்கி வைத்துள்ளளது என்று கருதுகின்றனர். இபோது காணப்படும் கோள்களும் கூட தனது தாயிடமிருந்து சுமார் 0.6 வானியல் அலகு தொலைவில்தான், அதாவது 9 கோடி கி.மீ தூரத்தில்தான் சுற்றுகின்றன, என்ற தகவல்களையும் தெரிவிக்கிறார்.வோல்ஸ்க்சான். இந்த 0.6வானியல் அலகு என்ற மாய எண் கோள்களை விழுங்கும் தொலைவாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார் வோல்ஸ்க்சான்..

மிச்ச சொச்சமான கோள்...!

இந்த இறந்து கொண்டிருக்கும் விண்மீன்கள் மற்றும் அதன் கொலைகளைப் பற்றி அறியும் தகவல்கள் நமது சூரிய குடும்பத்தின் தலைஎழுத்தையும் கூட துல்லியமாய் தெரிவிக்கும் என நம்புகின்றனர். அது மட்டுமல்ல எப்படி நம் சூரியன் எதிர்காலத்தில் புதன், வெள்ளி, நம் பூமி, அதன் துணைக்கோளையும் கூட விழுங்கிவிடும். இன்னும் 100 -200 கோடி ஆண்டுகளில் நாம் தவிர்க்கவே முடியாதபடி, அழகான பெருங்கடல்கள் நிரம்பிய வியாழனின் துணைக் கோளான யுரேபாவில்(Jupiter's moon, Europa,) இடம் தேடிச் சென்றிருப்போம். இந்தக் கதையும் கூட அடுத்த 200 கோடி ஆண்டுதான். அப்புறம் யுரேபாவும் உருகி ஊற்றி காணாமல் போய் விடுமே.

எதிர்காலம் கணிக்க மாநாடு..!

இறநது கொண்டிருக்கும் விண் மீன்கள் பற்றியும், அவற்றின் முடிவு/தலைவிதி பற்றியும், இந்த மாதிரி தகவல் மற்றும் வெளிக் கோள்களின் வாழக்கூடிய உலகங்கள் பற்றியும் . அறிவதற்காக ஒரு வானியல் ஆராய்ச்சி மாநாடு பியுர்டோ ரிக்காவில்,(Puerto Rico ) வரும் 2012 ம் ஆண்டு ஜனவரியில் நடைபெற உள்ளது. அடுத்த 20 ஆண்டுகளுக்கு என்ன நடக்கும் என்பதையும் பற்றிய எதிர்காலத் தேடல் தொடர்பாய் தகவல்கள் பரிமாறப்படும். மேலும் அங்குள்ள ௧௦௦௦ அடி ஒரு ரேடியோ தொலைநோக்கி மூலம் அறிய உள்ள , மூன்று கோள்கள் அவைசுற்றிவரும் , வெகு வேகமாய் சுற்றிக் கொண்டிருக்கும் நியூட்ரான் விண்மீன் பற்றியும் பேசப்படும். இவை பல புதிய கோள்கள் உருவாக்கம் மற்றும் புதிய அண்டம், பிரபஞ்சம் முழுமையும் பற்றி அறிய புதிய கதவைத் திறந்து வைக்கும்.