வாழ்வில் சதம் போட்ட பாக்கியசாலிகள்..!
சதம்.+மூன்று மனிதங்கள்.!
நண்பர்களே..வணக்கம். சதம் போட்ட மனிதரைச் சந்தித்திருக்கிறீர்களா ? நான் எனது வாழ்வில் மூன்று முக்கிய மானவர்களை நூறாண்டுகள் வாழ்ந்த நிறை மனிதர்களைச் சந்தித்திருக்கிறேன். முதல் மனிதர் எனது பாட்டி.அம்மாவின் அம்மா. 109 வயதுவரை வாழ்ந்தார். இரண்டாவது பெரியவர். எங்கள் வீட்டின் அருகில் வசிக்கும் தோழர் கந்ததசாமியின் தந்தை.. குமரேசக் கவுண்டர். மூன்றாவது பெரிய மனிதர்தான் வத்தக் கவுண்டன் வலசின் வாசியான 130 ஐ எட்டிப் பிடித்த பெரியவர் குப்பண்ணக் கவுண்டர்.
சதம் போட்டும் சலிக்காத நெஞ்சம்..!
நட்பின் வட்டங்களே., நம்மில் பலர் 40 வயதை எட்டுமுன்னரே என்ன வாழ்க்கை இது என சலித்துக் கொள்கிறோம்.வயதாகி விட்டது என அங்கலாய்த்துக் கொள்கிறோம். சீக்கிரம் கடவுள் நல்லபடியா கொண்டு போயிட்டா பரவாயில்லை என புலம்புவோரும் உண்டும். இப்படிப்பட்ட அலுப்பு சலிப்பான மக்களைச் சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த உலகில் சதம் போட்ட பின்னரும் கூட, அதற்குப் பின் 30 (130 ஆண்டுகள்) வருடங்கள் நிறைவாக வாழ்ந்து சந்தோஷமாக, சுறு சுறுப்பாக,ஓடியாடி வேலை செய்து யாரையும் சாராமல் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு பெரியவர்...! பட்டுவளர்ச்சித் துறை நண்பர் நடராசன் மூலம் தகவலறிந்தேன். அவரை சந்திக்க அதீத ஆவல்.ஒரு மாதமாக முயற்சி ..! அதற்கான காலம் கனிந்தது.
இயற்கையோடு.. இயைந்த.. வாழ்க்கை..!
மலைகள் சூழ்ந்த பழனியிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் உள்ள கிராமம் வத்தக் கவுண்டன் வலசு. இது மலைப்பிஞ்சுகளின் ஊடே சந்தோஷமாய், சத்தமில்லாமல், சுவாசித்துக்கொண்டு அமர்ந்திருக்கிறது. ஊரைச் சுற்றிலும், மலைகள் குட்டிப்போட்ட கரடுகள் என்னும் குட்டி குட்டி மலைப் பிஞ்சுகள்.. ! அற்புதமான இயற்கைச் சூழலின் அமைந்துள்ள கிராமம். சுமார் 200 தலைக் கட்டுகள்(குடும்பங்கள் ) உள்ளன. .பெரும்பாலும் கவுண்டர் இன மக்களும், கொஞ்சம் தாழ்த்தப்பட்டோரும் இணைந்தே வசிக்கின்றனர். அங்கு பிரதான விளைபொருள்கள்.என்பவை. கம்பு,மக்காச் சோளம், தக்காளி மற்றும் வெண்டை தான் .!அனைத்தும் இயற்கையின் பாதுகாப்பில்.. ! தஞ்சை ,நெல்லை மாவட்டம் போல ஆற்றுப் பாசனம் ..ஹூ ஹூம்.. ..! அனைத்தும் மழையை நம்பிய மானாவாரி நிலங்கள்..! அவ்வப்போது அவரவர் பொருளாதார வசதிக்கு ஏற்ப, கிணற்றுப் பாசனமோ . இயந்திர நீர் இறைப்போ.. உண்டு. அதில்தான் விவசாயம்.சிலசமயம் பல லட்சம் ரூபாய் பணத்தை பாறைக்குள் கொட்டி, எவ்வளவு ஆழமாக கிணறு வெட்டியும், மொட்டைப் பாறையாய் மொட்டையாகி நொந்த விவசாயிகளும் உண்டு.
சாலையில் வாசம் செய்யும் விவசாயிகள்..!
பழனி மலையை ஒட்டியுள்ள பகுதிகளும் அதில் வாழும் மனிதர்களும், வித்தியாசமானவர்கள், சுவையானவர்களும் கூட..! கொஞ்சம் நிலம் நீச்சு அதிகமாக இருந்துவிட்டால் கவுண்டர் இன மக்கள் ஊருக்குள் வசிக்க மாட்டார்கள். ஊருக்கு வெளியே அவர்களின் தோட்டத்தில் சாலை போட்டுத்தான் இருப்பார்கள். அங்கிருந்தே விவசாயம்..! ஆனால் அவர்களுக்கு வீடும் ஊருக்குள் இருக்கும்..! இவர்களின் குடும்பத்தில் அனைவரும் இணைந்தே வயலில் அனைத்து வகை வேலையையும் பார்ப்பார்கள்.ஒட்டுமொத்த குடும்பமும் விவசாயத்தில் ஈடுபடும். தேவைப்பட்டால் மட்டுமே கூலியாள் வைப்பார்கள்..!
வத்தக்கவுண்டன் வலசில்.. வத்தலாய் ஒரு பெரியவர்..!
வத்தக் கவுண்டன்வலசில்.. ஊருக்குள் நுழையு முன்னரே 130 வயதுப் பெரியவரின் வீடும், சாலையும். ! வழி எங்கும் மலைகளின் வரிசையையும், புல்வெளியையும், கம்புக் காடுகளையும், வறண்ட நிலங்களையும், கரட்டுக் கூட்டங்களையும், எங்களை அன்போடு தடவிக் கொடுத்த தென்மேற்குத் தென்றலையும் ரசித்துக் கொண்டே, வத்தக் கவுண்டன் வலசுக்குள் அடி எடுத்து வைக்கிறோம்..!. பெரியவரின் தோட்டத்த்து வாயிலிலேயே ., அவர் பேரன் தங்கத்துரையின் மனைவி லட்சுமி, வாங்க என அன்போடு வரவேற்றார். "ஏதோ "ஒறமொற" (உறவு ஜனங்கள் ) வர்றாங்கன்னு நெனச்சேன்" என்றார்.முகம் நிறைய ஏராளமான மகிழ்ச்சி..! நண்பர் நட்டு சொல்லியும் கூட நம்மை எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.பேரன் தங்கதுரையின் 45 வயது..!
நீங்க பெரியவருக்கு என்னா வேணும்.
நான் பேரன் சம்சாரம்..!
பெரியவர் எங்கே..!
அதோ. ..தோ.. சாலையில் இருக்கிறார்.
நாம அங்கேயே போயிடலாமே.. !
பெரியவர் என்ன செய்யறாரு?
பத்து நாளா சாப்பிடலே..
ஏன்?
சிரிப்பு தான் பதிலாக வந்தது..!
அமைதி சூழலில் .. வாழும்.. பெரியவர்..!
லட்சுமியுடன் தோட்டத்துக்குள் நுழைந்ததும்,, நம்மை வரவேற்றவை மூன்று பசு மாடுகளும், அலுங்காமல் மல்பரி தோட்ட நிழலில் அமைதியாய் உறங்கிய சேவலும், பெடையும்..! அதனை படப்பெட்டிக்குள் சுருட்டினோம். அதன் பின்னணியில் பட்டுபுழு வளர்ப்புக்கென்று 12 x 8 அடி பரப்புள்ள ஒரு கல் கட்டிடம் கம்பீரமாய் நின்று அழகூட்டியது. மாடுகள் தீவனத்தைமென்று கொண்டிருந்தன. அருகேயே பெரியவரின் இரண்டாவது மகனும் , மனைவியும் ,, வாங்க,வாங்க
மரியாதை மிக்க .. சதம் போட்ட மகராஜா..!
சாலையில் ஒரு கயிற்றுக் கட்டிலில், ஏகாந்தமாய், மகா ராஜா போல, கம்பீரமாய் கால்மேல் கால்போட்டு தோரணையாய் அமர்ந்திருந்தார் பெரியவர். அவரிடம் சென்று காதருகில் லட்சுமி, "பட்டுப்புழு வளர்க்கிற சார் ஒங்களப் பாக்கிறதுக்காக ரெண்டு பேர கூட்டிகிட்டு வந்திருக்கிறார்". உடனே படக் கென்று கால்களை உருவி எடுத்துவிட்டு, வாங்க சாமி, வாங்க என்று சொல்லிக்கொண்டே இரு கைகளை கூப்பி நமக்கு வணக்கம் சொல்கிறார். நமக்குப் புல்லரித்துப் போகிறது..! படித்து கல்வி அறிவு பெற்ற மக்களைவிட, படிக்காத பாமர ஜனங்கள் எவ்வளவு இங்கிதமாக மரியாதையுடன் நடந்து கொள்கின்றனர் என்று நினைத்துக் கொண்டேன்..! அவர் அருகில் அமர்ந்தோம்..! ஐயா வணக்கம் , ஒங்களப் பக்க வந்திருக்கோம். சாப்பிடீங்களா? இல்ல சாமி, பசியில்லே, இப்படியே பட்டினி கெடந்து ஆவி அடங்கோணும் .! கோபம் கூடாது என்றார் பெரியவர். ஏன் ஐயா இப்படி சொல்கிறீங்க , இந்த பிஸ்கட்ட சாப்பிடுங்க ! அவர்கள் இனத்துக்கே உரிய பக்குவப் பாங்குடன், வேணாம் தாயி,பசியில்லே .! பல்லும் இல்லே.. ! இத வாயிலே போட்டாலே கறைஞ்சிடும்.. கொஞ்சமா போடுங்க தாத்தா, என என்னுடன் அவரை ஆர்வமிகுதியால் காண வந்த இளசு கூறியது..! வேண்டவே வேண்டாம் என பிடிவாதமாக மறுத்துவிட்டார், 15 நாட்களாக ரெண்டு டம்ளர் காப்பித் தண்ணி தவிர எதுவேமே சாப்பிடாத பெரியவர்..! என்னே ஒரு வைராக்கியமான மனதும்.. வயதும்..!
50 ஆண்டுகள்.. தொடர் ..பண்ணையம்..!
பெரியவரின் பெயர் குப்பண்ணக் கவுண்டர்.வயது 130 எனப் பேரன்கள் சொல்கின்றனர்.கட்டாயம் 120 க்கு மேல் இருக்கலாம். அவர் சொல்லும் தகவல்கள் அவரின் வயதைப் பேசுகின்றன. பொதுவாகவே யாரைக்கேட்டாலும், கொஞ்சம் வயது முதியவர்கள் பெயரைச் சமூக பட்டத்துடன்தான் சொல்வது வழக்கம். அவருக்கு இரண்டு ஆண் வாரிசுகள், ஒரு பெண் மகவு..! பெரியவரின் பெற்றோர் பக்கத்து கிராமமான பூலாம்பட்டியில் வாழ்ந்தவர்கள் .! தந்தை வேலுச்சாமி கவுண்டர்; தாய் அழகம்மாள். பஞ்சம் பிழைக்க பூலாம்பட்டியிலிருந்து அமரபூண்டி கிராமத்துக்குப் போனார்களாம்.அங்கே குமாரசாமி செட்டியார் என்ற ஒரு மிராசுதாரிடம், பெரியவர்பண்ணையத்திற்கு விடப்பட்டார். அங்கேயே 50 ஆண்டுகள் பண்ணையம் பார்த்தாராம்.பெரியவர் படிக்கவே இல்லை. பள்ளிக்கூடம் ஊருக்கு வரவில்லை எனத் தகவல் சொல்கிறார். ன்நம் அனைவரையும் அன்போது உபசரித்து காபி கொடுத்தனர். அன்பும் கலந்து கொடுத்ததால் அமிர்த்மாய் இருந்தது.
பண்ணையமா.. அடகா..?
பண்ணையம் என்றால் ஒரு மிராசுதார்/ பண்ணையாரிடம் , குடும்பத்தினர் ஒரு குறிப்பிட்ட அளவு பணம் பெற்றுக்கொண்டு,ஒரு குழந்தை/ஒரு மனிதரை அடமானம் வைத்து விடுவார்கள். அவர் அந்த பண்ணையாருக்கு 24 மணி நேர வேலையாள்.!.கிட்டததட்ட அடிமை மாதிரிதான்.! அ வருக்கு திருமணமும் அங்கேயே முடித்து வைப்பார்கள். குழந்தை பிறந்தாலும் கூட, குடும்பம் ஒட்டு மொத்தமும் குழந்தைகள் உட்பட அந்த பண்ணாடிக்கு பண்ணையம் பார்க்க வேண்டும். வயித்துக்கு சோறு மட்டும் போடுவார்கள். சம்பளம் கிடையாது. திருமணமும் அங்கேயே நடக்கும். அப்படித்தான் நம்ம பெரியவருக்கும் நடந்ததாம்..! மாமா மகள் செல்லம்மாவுடன்,திருமணம் பெரியவர் குப்பண்ணக் கவுண்டருக்கு..! "ஐயா சாதகம் பாத்து கல்யாணம் முடிச்சீங்களா? இப்பத்தான் குழந்த பொரக்காததுக்கு முன்னே அதுக்கு சாதகம் பாக்கிறாங்க.! அப்ப ஏது சாமி சாதகம். கீதகம் ..? எல்லாம் இப்ப வந்தது என்கிறார்",அப்பாவியாக..! வெள்ளந்தியான மனது பொய் பேசத் தெரியாத நேர்மை..! .வயதுக்கு எந்த சான்றும் இல்லை என்பதுதான் வேதனையான உண்மை. வேண்டுமானால்,தடயவியல் துறையினரின் துணையுடன் சோதனை செய்து அறியலாமா என்ற எண்ணம் இருக்கிறது நமக்கு.!
ஊர்.. சுற்றி.. புராணம்..!
ஐயா நீங்க பழனிக்குப் போவீங்களா.. அப்ப தபாலாபீஸ் இருந்துச்சா? சாமி கும்பிட இருவது வருஷம் போயிருக்கிறேன் விடாம. ஆனால் தபாலாபீஸ் பழனியிலே கெடையாது. பழனி அஞ்சலகத்தின் வயது 100 என்று சொல்லப்படுகிறது. நீங்க பக்கத்துலே எந்த ஊருக்கெல்லாம் ஐயா போயிருக்கிங்க..? நான் இமய மலை வரைக்கும் போயிருக்கேன் தாயி..! காஷ்மீர் அப்புறம் அப்பாலே நேபாள நாட்டுக்கும் போயிருக்கேன் ! நமக்குத் தூக்கி வாரிப் போட்டது..! நாம் உலகம் தெரியாத அப்பாவி பெரியவரிடம் என்ன கேட்பது என்று குழம்பி, யோசனை செய்து மெதுவாக கேள்விகளை உருவினால், இவர் இப்படி உலகம் சுற்றிய வாலிபராக இருக்கிறாரே என வியப்பில் பிரமித்து மகிழ்ந்து போனோம் ..!
பத்ரி நாத்... வெந்நீர் சுனை..குளியல்!
ஐயா எப்படி இந்த ஊருக்கெல்லாம் போனீங்க..! ரயில்லதான்.40 நாள் பயணம்.! ஆயிரம் ரூவா பணம் கட்டினேன்.திருச்சிலேயிருந்து கூட்டிட்டுப் போயி சாப்பாடெல்லாம் போட்டு கோவில் கொளமெல்லாம் சுத்திக் காட்டினாங்க..மவராசங்க ! இமய மலையிலே எங்க தாத்தா போனீங்க ..? பத்ரிநாத்,காஷ்மீர், கேதார்னாத் போனேன். மூணு நாள் பயணம்.ஆனா எதையும் தொட முடியாது.. எல்லாம் ஒரே ஐஸ்தான். ! ஆனா அங்கியே பக்கத்திலேயே வெந்நீர் சுனை இருந்துச்சி..! அதுல குளிக்கலாம்.வேற எங்க போயிருக்கீங்க? கல்கத்தா போயிருக்கிங்களா? ராமேஸ்வரத்தில் ௦10 நாள் தங்கியிருக்கேன். கன்னியாகுமரியிலிருந்து எல்லா இடமும் போயிருக்கேன்.செங்கோட்டை, கொல்லம், திருவனந்தபுரம் , செத்த காலேஜ்,கோயில், கப்பல்எல்லாம் போயிப் பாத்திருக்கேன்.சுசீந்திரம், போயி பெரிய அனுமார் பாத்தேன்.
படகில்.. பயணித்து.. காசி ..!
வேற எங்க தாத்தா போனீங்க..! பாஞ்சாலங்குறிச்சி அரமணைப் பாத்தேன். வெள்ளைக்கார பாவிகதான் கட்ட பொம்மனை தூக்குலே போட்டுட்டாங்க. "காசிக்குப் போனீங்களா ? படகிலே மூணு நாள் போனோம். அங்க எருமைமாடு மனுசங்க எல்லாம் கங்கையிலே மொதந்துகிட்டு போவுது. 4 மயானம் இருக்கு. வரிசையா பொணம் வந்து கிட்டே இருக்குது ! ..எரிக்க வரிசையிலே நிக்கிறாங்க ..! அங்க காசிராசா அரண்மனை இருக்குது. காசிக்குப் போய் ஏதாவது விட்டுட்டு வந்தீங்களா? முதலில் பெரியவருக்குப் புரியவில்லை. பின்னர் மெதுவாக புன்னகை பூக்கிறார்.
காந்தியைப் பிடிக்காத கவுண்டர்.ராஜா .!
கல்கத்தா போயிருக்கிங்களா தாத்தா? "40 வருசத்துக்கு முந்தி போயிருக்கேன். எவ்வளோ.... நீளமான ரயில்வே ஸ்டேஷன். தெரியுமா ? 3 - 4 பர்லாங்கு நீளம் இருக்கும் அதன் நீளம் ..".உலகப் போர் வந்தது தெரியுமா? ஏதோ சண்டைன்னாங்க ..! அப்புறம் ரொம்ப எதுவும் தெரியாது..! பின்னர் காந்தியைப் பார்த்தீங்களா ஐயா! வெள்ளக்காரன் நல்லவன்தான். ! காந்தி வந்தான் நாடே கெட்டுச்சு .டெல்லிக்குப் போறப்போ காந்தியைப் பார்த்தேன். உங்களுக்கு இந்தியாவிலே யாரெல்லாம் தெரியும்..! நேரு மகராசனைத் தெரியும். இந்திரா காந்தி, மகன் ராஜீவ் காந்தி தெரியும்,, இப்ப யாருன்னு தெரியாது. பெரியவரின் மனசுக்குள் இருந்த காங்கிரஸ் ஆதரவு உணர்வு வெளிப்பட்டது.
பவுன் விலை.. 9 ரூபாய்..!
பெரியவரின் காலத்தில் பவுன் விலை என்ன என்று கேட்டால்.. ஒம்போது ரூவா என்கிறார்.! நமக்கு அடித்தது கரண்ட் ஷாக்..! என்ன தாத்தா என்றால் அழகிய புன்சிரிப்புடன், அப்பெல்லாம் ரூபாய் என்பது வெள்ளிக் காசுதான் என்கிறார். (ஒரு ரூபாய் வெள்ளியின் மதிப்பில்தான் முன்பு வெள்ளி நாணயம் அச்சிடப்பட்டது.)1800 களில் தங்கத்தின் சர்வே தேச அலகு டிராய் அவுன்ஸ்..(Troy ounce ) இது 31 .1028 கிராம் எடை உள்ளது. இதன் மதிப்பு 1890 களில் சுமார் அன்றைய 21 டாலர். இதனை இந்திய ரூபாயில் கணக்கிட்டால், உத்தேசமாக ஒரு பவுன் ரூ 10 என்றாகிறது . வீட்டுக்கு வந்தபின், அவரின் விவரம் தெரியும் வயதை உத்தேசமாகக் கணக்கிட்டு ,அவரின் அப்போதைய வயது 10 என்பது சுமாராக 1890 ல் இருக்கலாம் என்று நினைத்தோம். அந்த ஆண்டு தங்கத்தின் விலையை தேடினால் , கிட்டததட்ட பெரியவர் கூறியது உண்மையே என்று தெரியவருகிறது..! அது மட்டுமல்ல அப்போது பெரியவர்
பண்ணையம் பார்க்கும்போது அமரபூண்டி கிராமத்தில் டீ சாப்பிடுவாராம்; கடை உண்டாம். விலை என்ன தெரியுமா? 10௦ காசு.. அது நம்ம பைசா இல்லை. முன்பு இருந்த அணா, பைசாவின் பகுதிகள். ஒரு ரூபாய்க்கு 16 அணாக்கள், /64 பைசாக்கள், 1பைசா=3 தோலாக்கள். முன்பு இருந்த ஓட்டைக் காலணா / பெரிய கால் அணாதான் ஒரு காசு/பைசா. 1900 களில் அதனை 10 கொடுத்தால் ஒரு டீ கிடைக்கும். தேநீர் குடிக்கும் பழக்கம் சென்னை வாசிகளுக்கு ஏற்பட்டதே..1840 களில், மாலை 4 மணிக்கு பிரிட்டிஷ்காரர்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டதனால்தான்..! அதன் பின்னரே நாம் தேநீருக்கு அடிமைப் பட்டுப் போனோம்..!
பத்து ஏக்கர் நிலம்.. ஆயிரம்ரூபாய்..!
பெரியவர் காலத்தில் அவருக்கு 30 வயது இருந்தபோது, ஒரு ரூபாய்க்கு 10 படி சம்பா அரிசி வாங்கலாமாம்.ஆனால் அவர்கள் வீட்டில் சாப்பிடுவது எப்போதுமே ராகி களிதான்.!.ஏதாவது நாளு கெழமைன்னா மட்டுமே அரிசிச் சோறு வீட்டில் சமைப்பார்கள்..! பெரியவர் பண்ணையம் பார்த்த வீட்டில், கொஞ்சகாலம் கழித்து பெரியவரின் குடும்பம், சோறு வேண்டாம் என்றால், மாசம் 3 .25 ரூபாய் வாங்கிக் கொள்ளலாம்..! இந்தியா சுதந்திரம் அடைந்து, நில உச்சவரம்பு சட்டம் வந்தது..! பெரியவர் அதனைக் குறிப்பிடுவது குத்தகைச் சட்டம் என்று. அதனால், அமரபூண்டி மொதலாளி சீமான், அவருக்கு 10 ஏக்கர் மற்றும் 25 சென்ட் நிலத்தை ரூ.1000 /= பெற்றுக்கொண்டு பெரியவர் குப்பண்ணக் கவுண்டரிடம் கொடுத்தாராம். 6 எருதும் கொடுத்தாராம். பின் மாடு வாங்கி பால் கறந்து, விவசாயம் செய்து அதன் மூலம் கடனை கொஞ்சம் கொஞ்சமாய் அடைத்தாராம்.
ஏக ..பத்தினி.. விரதன்..!
பெரியவர் கொஞ்சம் ஆச்சரியமான மனிதரும் கூட..! அவரின் துணைவியார் செல்லம்மா இவருக்கு 45 வயதாகும்போது இறந்துவிட்டார். அந்த காலத்தில் இரண்டு, மூன்று மனைவிகள் என்பது சர்வ சாதாரணம். ஆனாலும் கூட, அதன் பின், பெரியவர் குப்பண்ணக் கவுண்டர் மணம் செய்யாமலேயே குழந்தைகளை வளர்த்து ஆளாக்கி மணம் முடித்திருக்கிறார். இப்போது மூத்த மகன் பழனியப்ப கவுண்டருக்கு வயது 80 தாண்டி ஓடுகிறது. இவர்மட்டும்தான் 5 வது வரை படித்தவர். மகன் மகள் மணம் முடித்தபின் ஒரு முறை கோபித்துக் கொண்டு 3 - 4 வருடங்கள் காணாமல் போய்விட்டார். சென்னிமலை சிவமலையிளிருந்து மகன்கள் தேடிக் கூப்பிட்டு வந்தனர். பெரியவரின் கோபம் பிரசித்தம் பெற்றது. ஒரு முறை 50 நாட்கள் கோபித்துக் கொண்டு உணவு உண்ணாமல் இருந்தாராம். இப்போது 15 நாட்கள் ஆகின்றன பெரியவர் சாப்பிட்டு. ஆனாலும் நல்ல உடல் நலத்துடன், சுகாதாரத்துடன் தன் வாழ்வியல் புத்தகத்தாளைத் திருப்பிக் கொண்டிருக்கிறார்.சுத்தம் சோறு போடும்,, கந்தையானாலும் கசக்கிக் கட்டு, கூழானாலும் குளித்துக் குடி என்பதனை வேத வாக்காகக் கொண்டு வாழ்கிறார்.ஆமாம். ஒரு நாளில் இரு முறை குளிர் நீரில் குளிக்கிறார். அவரது ஆடையை அவரே துவைத்து உடுத்திக் கொள்கிறார். தொட்டதிற்கும் பணியாள் வைத்துக் கொள்ளும் இந்த உலகில் 130 வயதை எட்டிய பின்னும் தளராமல் தானே தைரியமாய் நடமாடும் அற்புத மனிதர்.. இந்தப் பெரியவர்..!