.. நமது இந்திய நாடு, ஒருகாலத்தில், ஆங்கிலேயர்களிடம் , சுமார் 300 ஆண்டுகள் சிறைப்பட்டு கிடந்தது. நம் நாட்டை அவர்களின் பிடியிலிருந்து மீட்டு எடுக்க, இந்தியா முழுவதிலும் இருந்து நம் முன்னோகள் நீண்ட நெடிய போராட்டங்கள் நடத்தி இருக்கின்றனர். அவர்களின் போராட்டம், அன்றைய வாழ்நிலை, அவர்களின் மனநிலை , அவர்கள் மீது நடத்தப் பட்ட ஒடுக்குமுறை பற்றி நமக்கு எழுதப்பட்ட வரலாறு மூலமே அறிகிறோம்.அவற்றைப் பற்றிய முழுமையான சரித்திரம் நமக்கு கிடைக்க வில்லை.என்றே நாம் கொள்ள வேண்டும். ஆனால் அந்த வரலாறு, போராட்ட உணர்வுள்ள இந்தியரால் எழுதப் பட்டதா,?அல்லது, அன்று ஆங்கிலேயருக்கு, கால் பிடித்த மக்களே இதனை எழுதினார்களா? நமக்கு இது பற்றியை சரியான தகவல் இல்லை.
நமது முதல் சுதந்திரப் போரை சிப்பாய் கலகம் என்றே. 1970 கள் வரை நமது பள்ளி பாட புத்தகங்கள் சித்தரித்தன. நாமும் அப்படியே எண்ண/நினைக்க பழகி விட்டோம். நம் மக்களுக்குத்தான் எந்த தகவலும், வெள்ளை காகிதத்தில், கருப்பு எழுத்தில் வந்துவிட்டாலே உண்மை என்று நம்பும் மனநிலையில் உள்ளோமே. ! அதனை கேள்வி கேட்டு உண்மை நிலை அறியும் பக்குவம் கூட நம்மிடம் இல்லை என்பது வேதனையான உண்மையும் கூட. அந்த நிலைதான் நீண்ட கால இந்திய கல்வி நிலையாக இருந்தது.பின்னரே, அது முதல் சுதந்திரப் போர் என்று எழுதும் சொரணை வந்தது.
இன்று எழுதப்பட்டுள்ள சரித்திரத்தில், சுதந்திரத்தில் ஈடுபட்ட அனைவரின் பெயர்களுமா பதிவு செய்யப்பட்டுள்ளன . இல்லையே.. ஏராளமான பெயர்கள் விடுபட்டு இருக்கலாம். எழுதுபவர் அவரவர் விருப்பு வெறுப்புக்கு ஏற்பதத்தானே எழுதுவார்கள்,அதன்படியேதான் இதுவும் இருக்கும். நம் இந்திய வரலாற்று சரித்திரத்தில் , சுதந்திரத்துக்காக போரிட்ட தமிழக வீரர்களின் பெயர்கள் மிகக் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. மறக்கப் பட்ட , மறைக்கப்பட்ட பெயர்கள், ஏராளமே. அதிலும் பெண்களின் பெயர்கள் என்றால்,பொறாமையாலும் கூட சில சமயம் பதிவிலிருந்து விடுபட்டுப் போகிறது. வீரபாண்டிய கட்ட பொம்மனைத் தெரிந்த அளவு, எத்தனை பேருக்கு மருது சகோதரர்களைத் தெரியும். ஒருக்கால் 60௦ களில் வந்த சிவகங்கை சீமை படம் பார்த்திருந்தால் சிலருக்கு, அந்த காலத்து ஆசாமிகளுக்கு, மருது சகோதரர்கள் ஞாபகம் வரும். அவ்வளவே. அதிலும் வீரபாண்டிய கட்டபொம்மன் என்றால் நம்ம சிவாஜியின் முகம்தான் தமிழக மக்களுக்கு, நினைவில் நிற்கிறது. நிஜ வீரபாண்டியனை , நம் யாருக்கும் தெரியாது.
எல்லோருக்கும் விடுதலைக்காக போரிட்டு வீரமரணம் அடைந்த வடநாட்டு ஜான்சிராணியை தெரியும். ஆனால் அவருக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பே,அந்நியருடன் போரிட்ட வேலுநாச்சியார் பற்றி மிக குறைவான தமிழக மக்களுக்கே தெரியும்.இவர் சிவகங்கையை ஆட்சி புரிந்தவர். தனது துணைவரான, முத்து வடுகத்தேவரை விட, மதி நுட்பமும், ஆளுகைத்திறனும், போர்த்திறனும் பெற்றவர்.உங்களுக்குத் தெரியுமா.? திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வளாகம் இவரின் பெயராலேயே , வேலுநாச்சியார் வளாகம் என்று அழைக்கப் படுகிறது.
சிவகங்கை மாவட்டம், தமிழ் நாட்டில் தென்பகுதியில் உள்ளது. இதன் மக்கள்தொகை. 40௦,129 .இதில் ஆண்,பெண் விகிதம்,49 :51 ,இது இந்திய விகிதத்தைவிட, பெண்கள் அதிகம்.அதே போல இது தமிழகத்தில் பொருளாதாரத்தில், தொழில் வளர்ச்சியில், வளத்தில்,நீர்வளத்தில் பின்தங்கிய மாவட்டமாக இருந்தாலும், கல்வி அறிவு அதிகம். இந்திய சராசரியை விட அதிகம். இந்தியாவின் கல்வியறிவு, 59.5%. சிவகங்கையில் கல்வியறிவு, 72 .18 %.அதில் ஆண்கள்,83 .14 %, பெண்கள், 61 .74 %. 1992 களில் இங்கு அறிவொளி இயக்கம் நடந்தது, அப்போதுஆட்சியர் திருமிகு, குத்சியா காந்தி இருந்தார் . அவருடைய ஒத்துழைப்பாலும் , தமிழ் நாடு அறிவியல் இயக்க தொண்டர்களாலும் , அவருடன் ஈடுபட்டு உழைத்து, கல்வியை மேம்படுத்திய, தொண்டர்கள், கருத்தாளர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களையே இந்த பெருமை சேரும். நானும் இங்கே கருத்தாளராக பணி புரிந்தேன். குத்சியா காந்தி என்னை, இங்கு மாவட்ட ஒருங்கிணைப் பாளராக இருக்க அழைத்தார்.என்னால் பழனியை விட்டு வரமுடியாததால்,அவ்வப்போது வந்து செயல்பட்டேன்.தமிழகம் முழுவதும், தமிழ் நாடு அறிவியல் இயக்க நண்பர்கள், அறிவொளி இயக்கத்தில் இருந்தோம். எங்கள் அனைவரின் வாழ்விலும், மறக்க முடியாத , இனிய, சந்தோஷமாய் கஷ்டப்பட்ட , மக்களோடு மக்களாய் வாழ்ந்த, பழகிய, பாடிய, நடித்த,உண்ட, உறங்கிய, தினங்கள் அவை. பின் நான் திண்டுக்கல் மாவட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப் பாளராக பணி புரிந்தேன்.
ராஜா முத்து வடுக நாதர்,சிவகங்கை மண்ணின் இரண்டாவது ராஜா.. ,நாச்சிமுத்து என்ற, ரகுநாத சேதுபதி மற்றும் , சக்கந்திமுத்தாத்தாள் நாச்சியாரின் மகள் வேலு நாச்சியார். , வேலு நாச்சியார், ராஜா முத்து வடுக நாதரின் மனைவியாக, 1746 ல் அவரின் கரம் பிடித்தார். பின் சிவகங்கையின் ராணி,யானார். , இவர்தான் ராஜா முத்துவடுகநாதனுக்கு, நண்பர், மதி மந்திரி, தத்துவ ஆசான், அரசை வழி நடத்த உதவும் ராஜ தந்திரி மற்றும் குருவாகவும் , இருந்தார். வேலு நாச்சியார், மிகச் சிறந்த போர்ப் பயிற்சி பெற்றவர். அது மட்டுமல்ல 7 மொழிகள் கற்றறிந்தவர். காளையார் கோவிலில் வழிபாடு செய்து கொண்டிருந்த ராஜா முத்து வடுகனாதரை, 1772 , ஜூன்25 ம் நாள்,கள்ளத்தனமாக சுட வந்தனர். ஆனால் அவர், வெள்ளையருடன் வீரம் செறிந்த போர் செய்து, 100௦௦ வீரர்களுடன் வீர மரணம் அடைந்தார். வேலு நாச்சியாரின், வீரத்தனமான போர்ச் செயல்கள், வரலாற்று ஆசிரியர்களால் பேசப் படுகின்றன.பாராட்டபடுகின்றன. .
வேலு நாச்சியார், கணவர் இறந்த பின், படை பலத்தை அதிகரிக்கவும், வெள்ளையரிடமிருந்து தப்பிக்கவும்,முடிவு செய்தார். அதற்காக, அவரும், அவரது செ ல்ல மகள் வெள்ளை நாச்சியார் , மந்திரி தாண்டவராயப் பிள்ளை, வெள்ளை மருது மற்றும் சின்ன மருதுடன், மைசூர் மன்னர் திப்பு சுல்தானை, திண்டுக்கல்லில் சந்தித்தார். அவரது உதவிடன், விருப்பாட்சியில்,இரண்டு ஆண்டுகள், தங்கி, தன ஆட்களுடன்,படை திரட்டி தன நாட்டை மீட்டு எடுக்க ஏற்பாடு செய்து கொண்டு இருந்தார்.இடையில் தாண்டவராயப்பிள்ளை மரணமடைந்தார். பின் நாடு நோக்கி தானே, படைத்தளபதியாய் இருந்து படை நடத்தி சென்றார். வரும் வழியில் வெள்ளைப் படை மதுரை கோச்சடையில் வேலு நாச்சியாரை எதிர்த்தது. அங்கே, ஆற்காடு நவாபின் உதவியுடன், வெள்ளைப் பறங்கியர் படையை ஓட ஓட விரட்டி அடித்தார். ராணி வேலு நாச்சியார் முப்படைகள் வைத்திருந்தார் . அதில் ஒன்றான திருப்பத்தூர் படைக்கு நல்லி அம்பலத்தையும், காளையார் கோவில் படைக்கு மருது சகோதரர்களை பொறுப்பாக நியமித்தார் . சிவகங்கை படைக்கு தானே தலைமை ஏற்றுநடத்தி சென்றார். வேலு நாச்சியார், தனது தோழி குயிலியின் துணையுடன், அந்நியக் கம்பெனியின் வெள்ளை படைகளின் வெடிமருந்து கிடங்குகளை அழித்தும், வெறித்தனமாகவும், வீர சாகசமாகவும், போரிட்டு அவர்களை வெற்றி கொண்டார். தனது கணவனுக்காகவும் , தன மக்களுக்காகவும் போட்ட சபதத்தை,l நிறைவேற்றி ,வெற்றி பெற்றார். பின்னர், சின்ன மருதை அமைச்சராகவும், பெரிய வெள்ளை மருதை தளபதியாகவும் கொண்டு , 1780 ல் சிவகங்கையின் ராணி ஆனார். பின் கொஞ்ச காலம் கழித்து மருது சகோதரர்களிடம், ஆட்சி பொறுப்பை கொடுத்தார். பின் நோயுற்றார். அதற்கு பின் இயற்கை எய்தினார். எந்த ஆண்டு என சரியாகத் தெரிய வில்லை.1790 ஆக இருக்கலாம் என்று கருதப் படுகிறது..
வெள்ளையர்களை விரட்ட வீரவாள் ஏந்தி போரிட்ட முதல் இந்திய பெண்மணி வேலு நாச்சியார்தான். ஜான்சிராணி லட்சுமிபாய் இவருக்குப் பின் 100௦௦ ஆண்டுகள் கழித்தே களத்ததுக்கு வந்தவர். வேலு நாச்சியார் விருப்பாட்சி காடுகளில் தங்கியே தன படை வீரகளுக்கு பயிற்சி அளித்தார். இவர், சிவகங்கையிலிருந்து, சுரங்கப்
பாதை வழியாகவே ,விருப்பாட்சி வந்ததாக சொல்லப் படுகிறது..இங்குவிருப்பாட்சியில் தங்கி சுதந்திரத்திற்காக போரிட்ட வேலு நாச்சியாரை . மரியாதை செய்வதற்காகவே, திண்டுக்கல் மாவாட்ட ஆட்சியர் வழக்கத்திற்கு, அவரின் பெயர் சூட்டப் பட்டுள்ளதுஇவரது பெயர் கோதை அழகி வேலு நாச்சியார் என்றும் சொல்லப் படுகிறதே..மேலும், வேலு நாச்சியாரின் தாய் நாட்டுப் பற்றை கௌரவப் படுத்த இந்திய அஞ்சல் துறை, இவரின் நினைவாக, 2008 டிசம்பர் 31 ம் நாள் ஒரு அஞ்சல் தலை, வேலு நாச்சியாரின் உருவப் படத்துடன் வெளியிட்டு , இந்திய நாட்டின் நன்றிககடனை, அந்த வீரப் பெண்மணிக்கு ஈந்தனர். இந்திய நாட்டின் சுதந்திரத்துக்காக போரிட்டதில் தமிழக வீரர்களும், பெண்களும் கூட சளைத்தவர்கள் அல்ல என்ற நிரூபணத்தின் சாட்சியம் இதோ.. !.